போருக்கு வராதீர்கள் என்னோடு
எதிர்பார்க்கும் சிலருக்கு
நல்முத்தாய் வருகிறாள் !
விரும்பிடாத பலருக்கோ
வேம்பாய் பிறக்கிறாள் !
மண்ணில் உதித்தாலே
மங்கையும் உயிர்தானே !
மனங்கள் ஏன் மாறுகிறது
மகளிரும் உன் மகள்தானே !
ஆணும் பெண்ணும் சரிசமம்
அகிலமும் சொல்கிறதே !
ஆயினும் மனம் வெறுக்கிறதே
அவரும் செய்த தவறென்ன !
ஆணாகப் பிறந்தால் ஆட்டம்
விழா எடுத்து கொண்டாட்டம் !
பெண்ணாக இருந்திட்டால் ஏன்
அரளி விதையை தேடுகிறீர் !
மகனாக இருப்பினும் இன்று
மடிப்பிச்சை நிலை பலருக்கு !
மனமும் மாறி அனுப்புகிறான்
முதியோர் இல்லங்களுக்கு !
மாற்று வழி இல்லை மகளுக்கு
மணம் முடித்து செல்வதால் !
மனம் வெறுத்து அழுகின்றனர்
மகள்கள் அழைக்க முடியாமல் !
நாளும் காண்கிறோம் ஏடுகளில்
மகனால் பெற்றவர் வாடுவதை !
ஊடகத்து தொடர்களும் காட்டுது
குடும்பத்தில் மகளின் நிலையை !
வாதிடுவர் சிலரும் என்னிடம்
மோதிடும் மாமியார் காட்சிகளை !
உரைப்பது மகள்களின் உறவைத்தான்
உணர்வேன் மகளிர் மாமியாரானால் !
புரிகிறது நீங்கள் சொல்வதும்
புவியில் அனைவரும் ஒன்றல்ல !
மாறிடும் மனங்களும் வாழ்கிறது
மாறாத உயிர்களும் உலகில் உண்டு !
பெண்ணாகப் பிறப்பதே பாவமல்ல
பெற்றவரும் கொள்க மனதினிலே !
வளர்த்திடும் முறையும் காரணமே
வளர்த்திடுக முறையாக நெறியுடன் !
பொதுவாகவே சொன்னேன் நானும்
போருக்கு வராதீர்கள் என்னோடு !
அனுபவக் காட்சிகளே அலையானது
நினைவில் மோதியவை எழுத்தானது !
பழனி குமார்