சார்பெழுத்துகள்
சார்பெழுத்துகள்
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
உயிர்மெய் எழுத்து
```````````````````````````
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்
எடுத்துக்காட்டு:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால்
(18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
எடுத்துக்காட்டு:
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ
ஆய்த எழுத்து
````````````````````
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
எ.கா:
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
உயிரளபெடை
`````````````````````
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
உயிர் + அளபெடை = உயிரளபெடை
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
"இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ" -நன்னூல்
எ.கா:
1 ஓஒதல் வேண்டும் - முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை
3 நல்ல படாஅ பறை - கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம்.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
இதில் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன
ஒற்றளபெடை
`````````````````````
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.
"ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ" - நன்னூல்
எ.கா:
வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்
////////////////////////////
சார்பெழுத்துகள் பற்றிய மீதமுள்ள ஆறு வகைகளும் அடுத்த பாகத்தில் தொடரும் !