நாய் - மோதிரம்
பரபரப்பாக காணப்படும் கோவை ஹோப்ஸ் காலேஜ் சாலை , மாலை 4 மணி அவசரமாகவும் அவசியமற்ற அவசரமாகவும் சென்ற வாகனங்களை சிகப்பு சிக்னல் விளக்கு எச்சரித்து நிறுத்தியது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த அந்த நடுத்தர வயது நபர் சற்று எல்லை கோட்டை தாண்டியே நிறுத்தினார் .
மீனை கொத்த காத்திருந்த கொக்கை போல , இந்த விதிமீறலுக்கு காத்திருந்த நஞ்சப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளர்……
”யோவ் சுந்தர்….. அந்த ஆளை இங்க இழுத்துட்டு வா.. போ சீக்கிரம் .. கிரீன் சிக்னல் விழந்தடும்.. அவன் போயிடப்போறான் “
”சரிங்க ஐயா ”
ஜீப் டிரைவர் சுந்தர் அந்த நபரின் வண்டியை பிடுங்கி கொண்டு ,
”போங்க .. அந்த ஜீப் கிட்ட ஐயா நிற்கிறார்.. போய் பார்த்துட்டு வாங்க ”
நஞ்சப்பன் அருகில் சென்றார்
”சார் ? எதுக்கு சார் வரசொன்னீங்க ?? பயந்தபடியே கேட்டார் ”
”ம்ம்ம் டீ சாப்பிட !! ஒண்ணும் தெரியாது மாதிரி கேக்குறான் பாரு
ரெட் சிக்னல் போட்டா நிக்க தெரியாதா ?? லூசுப்பயலே ”
சரி , 250 ரூபாய் பைன் கட்டிட்டு ,, வண்டிய எடுத்திட்டுப்போ”
”சார்ர்ர் லைன் கிராஸ் பண்ணின 100 ரூபாய் தான் இன்னு ………”
நாச்சியப்பனுக்கு கோபம் வந்தது, விகராமான முகத்துடன்
”ரூல்ஸ் பேசுறீயா ?? எடுய்யா லைசன்ஸ் எடுய்யா ? கொடுத்தார்
”ஆர்.சி எங்க ? ”
”வண்டில இருக்கு சார் ? ”
”எடுத்துட்டு வா? ” எடுத்து வந்து கொடுத்தார்
என்னய்யா ? உன் பேரு இதுல இல்ல
சார் இது என் நண்பர் வண்டி…. என் பொண்ணுக்கு அடிப்பட்டிருச்சின்னு போன் வந்துச்சு.. அதான் ஆபிஸ் ல இருந்து அவசரமாய் வரேன். என் வண்டி பஞ்சர்……….
அதுனால ரூல்ஸ் மதிக்கமாட்ட ? கேட்டா சட்டம் பேசுவ .... ?? --------------- (கெட்ட வார்த்தையில் அர்ச்சனை )
”சார் பிளீஸ்..... . இந்தாங்க 250 ரூபாய் தரேன் ..வச்சிக்கோங்க என்னை விடுங்க சார்.. என் மகளை போய் பார்க்கணும் ”
”என்ன பிச்சை போடுறய்யா எனக்கு …..
வண்டிய திருடிட்டு வந்திருக்கீயா…?. தப்பிக்க பொய் சொல்லுற ம்ம்ம்ம் ?
……………..(கெட்ட வார்த்தை) ”
நஞ்சப்பனின் மொபைல் அலறுகிறது
”என்னடி ??”
எங்க இருக்கீங்க ?? போனில் அவரின் மனைவி
”ஏன் என்ன வேணும் ? ”
”எப்போ வருவீங்க ? இங்க உங்….. ”
”வரேண்டி போனை வை …..” என்று கோபமாக மொபைல் போனை அவரின் சட்டைக்குள் வைக்க முயல
அது தவறி கீழே விழந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டே…..
”என்னய்யா ? உன்னை கோர்ட் கேஸ் நு அலைய விட்ட தான் சரிப்பட்டு வருவ இல்ல……. ”
”ஐயா .. உங்க கால்ல வீழ்ந்து கெஞ்சி கேக்குறேன் என்னை விடுங்க டைம் ஆகுது …………. அங்க எம் பொண்ணுக்கு என்ன ஆச்சோ……சின்ன பொண்னு சார்…. ”
கதறுகிறார் .. அந்த நபர்
”,,,,,, ம்ம்ம் முதல் யே நான் சொன்னத கேட்டு இருக்கணும் …
சரி சரி உன் ஆபிஸ் போன் நம்பர் கொடுத்திட்டு அப்படியே பணத்தை ஜீப்க்குள்ள இருக்குற பேப்பர்க்கு அடியில வச்சிட்டு போ…. ”
பணத்தை வைத்துவிட்டு … பரிதாபமாய் நஞ்சப்பனை பார்த்தார்
”யோவ் சுந்தர் ,,,,,வண்டிய கொடுத்திடு ……. ”
அந்த நபர் நன்றி சொல்ல
ம்ம் ம்ம்ம் என்றவாறே மனதுக்குள் “,,,,,,,இவனுங்க்கிட்ட பணத்தை கலெக்ட் பண்றதுக்குள்ள நாய் படாதபாடு ம்ம் இன்னிக்கு நல்ல கலெக்ஷன் .”
”சுந்தர் ,,,,,, நகைக்கடைக்கு வண்டிய விடு”
100 அடி ரோடு … ஒரு நகைக்கடையில் தன் மகளுக்கு மோதிரம், வாங்கினார் . நாளை அவரின் செல்ல மகள் ஆர்த்தி BE பட்டம் பெறப்போகிறாள்.. அதற்காக அவள் என்றோ ஆசைப்பட்டு இடது கைக்கு கேட்ட ”சின்னதா அழகா” மோதிரத்தை தன் ஆசை மகளுக்கு வாங்கிய மகிழ்ச்சியோடு அன்னூர் என்ற அவரின் ஊருக்கு புறப்பட நினைத்தப்போது அவரின் மனைவி அழைத்த ஞாபகம் வந்தது.. போனை எடுத்து கூப்பிட நினைத்தவர்…
மனதிற்குள் “ வேண்டாம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்… நான் வாங்கிட்டு வரேன்னு தெரியக்கூடாது ,,இவகிட்ட சொன்னாலும் ஆர்த்திகிட்ட உளறிடுவா”
அன்னூர் …
வீட்டுக்கு செல்லும் வழியில் நஞ்சப்பன் மனதில் ”தன் ஆசை மகள் மோதிரம் கொடுக்கும் போது எப்படி சந்தோசப்படுவாள் … அவளின் விரலுக்கு இது சரியா அழகாக இருக்குமா ?? ம்ம் இல்லைன்னா என்ன அடுத்த வாரம் வாங்கிட்டா போச்சி……….”
வீட்டுக்கு செல்கிறார்,,, ஆர்த்தி… ஆர்த்தி என அழைத்துக்கொண்டே..
ஒவ்வொரு அறையாக தேடுகிறார்..
கொஞ்சம் பதற்றம் அவரை தொற்றி கொண்டபோது ..
அங்கு எதிரில் வந்த பக்கத்து வீட்டு சின்னப்பெண்….
”மாமா……….உங்கள , நீங்க வந்தா அத்தை… -பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கிற ஆஸ்பிட்டலுக்கு வரச்சொல்லி சொன்னாங்க.. அப்புறம் அவசரமா போனாங்க. ”
”ஏன் என்னம்மா ? என்ன விசயம் …. ? ”குழப்பத்தோடு கேட்க
”தெரியல மாமா……என்னனு என்கிட்ட சொல்லல.., நீங்க போங்க, நான் வீட்டை பாத்துக்குறேன் ”
.
தனியார் மருத்துவமனை ……….
என்னங்க ??நீங்க ? எத்தனை தடவ போன் பண்ணுவது ஸ்விட்ச் ஆப்னு வருது ………. என்றாவாறே பரபரப்பாக எதிர்ப்பட்டாள் நஞ்சப்பனின் மனைவி
கிழே விழந்த மொபைல் ஆப் ஆனது அப்போதுதான் நஞ்சப்பன் உணர்ந்தார்
”சரி ச்சரி ஆர்த்தி ,,,,, ???”
”அங்ங் க்க் அந்த ரூம்ல…….. ”ஆர்த்தி இருக்கும் அறை கைய காட்டுகிறாள் நஞ்சப்பனின் மனைவி .
தடுமாற்றத்துடன் அந்த அறைக்குள் செல்ல அங்கு படுக்கையில் ஆர்த்தி ….
அப்ப்பா எப்பப்பா வந்தீங்க .?
”குட்டிம்மா…. ஆர்த்தி குட்டி… என்னடா ஏண்டா படுத்து இருக்க ??? ”
”ஒண்ணும் இல்லப்பா …. ”
கண் கலங்கியவாறு தொடர்கிறாள்
”நானும் கீதாவும் பேன்சி கடைக்கு போயிட்டு ஸ்கூட்டில திரும்பி வரும்போது , கார்காரன் இடிச்சிட்டு போயிட்டான்.. கீழ விழந்துட்டோம்.. கீதாக்கு லேசா கால்ல கீறல் …… ”
”அய்யோ உனக்கு என்னடா ஆச்சி ???
”இருப்பா சொல்றேன் ……
எனக்கும் லேசா அடிப்பட்டு ரத்தம் வந்திருச்சி…அப்புறம் மயக்கம் அடைஞ்சிட்டேன்
அங்கிருந்தவங்க உதவினால கீதா என்னை ஜி ஹெச் க்கு அழைச்சிட்டு போய் இருக்கா..…
அங்க இருந்த டாக்டர் மயக்கத்தை தெளிய வச்சார் அப்புறம் ஏதோ பணம் கேட்டராம்…பணமிருந்தா தான் மேற்கொண்டு டீரிட்மெண்ட் பண்ணமுடியும்..ன்னு சொன்னராம். எங்ககிட்ட அப்போ பணமில்லப்பா
அம்மா வை வரச்சொன்னேன்
அம்மா வர அரை மணி நேரம் ஆனதுனால என்னை பிரைவேட் ஹாஸ்பிட்டல கீதா அட்மிட் பண்ணிட்டா…
அம்மாவும் வந்தாங்க … இப்போ நீங்களும் வந்திட்டிங்க ”
”உனக்கும் ஒண்ணும் இல்லைலம்மா ? அடி எதாவது பட்டிருக்கா ??
”பெரிசா ஒண்ணும் இல்லப்பா ஆனா .....”
தன் மேல் இருந்த துணியை விலக்கி தனது இடது கையை தன் தந்தையிடம் காட்டுகிறாள் ஆர்த்தி…..
அதிர்ச்சியில் உறைந்து போனார் ……….நஞ்சப்பன்
ஆர்த்தியின் இடதுகையில் மோதிர விரல் துண்டிக்கப்பட்டிருந்தது
கதறி அழத நஞ்சப்பனை அவரின் மனைவி தேற்றுகிறாள்
”45 நிமிடத்திற்கு முன்னாடி வந்திருந்த இந்த விரல சேர்த்து இருக்கலாமன்னு டாக்டர் சொன்னாருங்க ”
ஆர்த்தி குறுக்கிட்டு
”அப்பா என்னோடு விரல் ரேட் 250 ரூபாய் ப்பா .ஜஸ்ட் 250 ரூபாய் அப்போ எங்க கிட்ட இல்லாம போச்சு ப்பா ,,
கவர்மெண்ட்ல வேலை செய்றவங்க பொதுமக்களுக்கு சேவை செய்யதானே ப்பா ஆனா எதுக்கு இப்படி நாய் மாதிரி பணம் பணமுன்னு அலையுறாங்கப்பா”
ஆமாம்மா நாய்கள் தான் நாய்தான் .. நா நாய்...
நா தளதளக்க அவரின் கண்ணில் நீர் வடிகிறது …. அந்த கண்ணீரில் நஞ்சப்பனிடமிருந்த லஞ்சம் எனும் நஞ்சும் பொங்கி வெளியேறி வடிந்தப்படியே அவரின் கைகளை கழுவி கொண்டிருக்கிறது….
-----------------இரா.சந்தோஷ் குமார்