"முடிவில் ஒரு ஆரம்பம்!"
"மீனாட்சி! மீனாட்சி! இடியே விழுந்தாலும் இவ காதுல மட்டும் விழாது"
"ஐயோ! என்னாச்சு? இப்போ ஏன் இப்டி கத்துறீங்க?"
"எங்கே போய் இருந்த? எவ்வளவு நேரம் கத்துறது? கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டுவா"
"ம். இதுக்குத்தான் இவ்ளோ ஆர்ப்பாட்டமா? ஏன் பக்கத்துல தானே 'ப்ரிட்ஜ்' இருக்கு, எடுத்து குடிக்கிறது. எது இருந்தாலும் கையில கொண்டுவந்து குடுக்கணும். எல்லா ஆம்பிளைங்களுமே இப்படித்தான் இருக்கீங்க"
"ஏய்! எத்தன பேரடி பார்த்த?"
"ம். நிறைய", என்று சிரித்துக்கொண்டே மீனாட்சி காபி வைக்க அடுக்களைக்கு போனாள்.
"இந்தாங்க காபி", என்று நீட்ட அதை வாங்கி பருகிக்கொண்டே கணவர் பாலு,
"நான் போய் கடையில நல்ல பேனா, பேக்கெல்லாம் வாங்கீட்டு வரேன். சுரேஷ் வந்தா என்ன வந்து நந்து வீட்ல பார்க்க சொல்லு. நந்து நிறைய புக்கெல்லாம் வச்சிருக்கான். ஒரு முறைக்கு இருமுறை நல்லா பார்த்துட்டு வரேன்", என்று கூறியவாறே கிளம்பினார்.
சுரேஷ், மீனாட்சி மற்றும் பாலுவின் ஒரே மகன்.
"அம்மா! அப்பா எங்கே? காணல", என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவிவிட்டு சுரேஷ் வரவும், அம்மா காபி கொடுத்தாள்.
"நந்து அண்ணன் வீட்டுக்கு போறதா சொன்னாங்க. உன்னையும் அங்க வரச்சொன்னாங்க"
"சரிம்மா. நானும் நந்துமாமா வீட்டுக்கு போய்ட்டு வரேன்"
"ம். சரி"
நந்து, பாலுவின் பால்ய நண்பர். வீட்டில் நூலகம் வைத்து நடத்திவருகிறார்.
"மாமா", என்று அழைத்துக்கொண்டே சுரேஷ் வர,
"வாப்பா சுரேஷ். அப்பா மாடிலதான் இருக்கார். அடுத்தவாரம் பேங்க் பரிட்சையாமே. அதான் புக்கெல்லாம் எடுத்து பார்த்துட்டு இருக்கான்"
"ஆமாம் மாமா"
"சரிப்பா. நீயும் போய் பார். நான் இதோ வரேன்", என்று நந்து சொல்ல
"சரி மாமா", என்று கூறிவிட்டு சுரேஷ் மாடிக்கு சென்றான்.
"என்னாப்பா, வீட்டுக்கு போலாமா? மழைவரும் போல இருக்கு. அம்மா தனியா இருப்பாங்க", என்றான்.
சரி என்று இருவரும் வீட்டுக்கு வந்து இரவு உணவு முடித்துவிட்டு உறங்கச்சென்றனர்.
ஒரு வாரம் கழித்து பாலு மிகவும் பரபரப்பாக இருந்தார். 'பேங்க்' பரிட்சைக்கு செல்ல டிக்கெட் புக் செய்வது, கடைக்கு சென்று பேனா, பேக் எல்லாம் வாங்கி வந்து வைத்துவிட்டார்.
மீனாட்சி கேட்டே விட்டாள்.
"என்னங்க, பரிட்சைக்கு பேனா சரி, அது எதுக்கு 'பேக்'?"
"இல்ல மீனாட்சி, பேக்குல புக்கெல்லாம் வச்சு எடுத்துட்டுபோய், ஒரு நாள் முன்னாலயே ரூம் எடுத்து தங்கி, காலைல ப்ரெஷ்ஷா பரிட்சை எழுதலாம்ல. அதான்"
"சரிங்க, இன்னும் என்ன ஒங்க பையன் எல்.கே.ஜி படிக்கறதாகவே நெனச்சுகிட்டு இருக்கீங்களா"
"பரிட்சை எழுதப்போற பையன்கூட தெளிவா இருக்கான். நீங்கள்ல ரொம்ப டென்ஷனா இருக்கீங்க"
"அது இல்ல மீனாட்சி, அப்படியே பழகிடுச்சு இல்ல, சின்னபிள்ளையிலிருந்தே அவன இப்படி வளர்த்துட்டோம். அவனுக்கு ஒண்ணுன்னா நாம ரெண்டு பேரும் ரொம்ப துடிச்சுபோறதும், பரிட்சை வந்தா நல்லா படிச்சு மார்க் வாங்கணும்னு நெனைக்கறதும், சரி விடு, இதுவும் நல்லபடியாகவே முடுஞ்சு, அவனுக்கு ஒரு கல்யாணத்தையும் செஞ்சு வச்சுட்டா......."
"போச்சுடா, ஒங்க புராணத்தை ஆரம்பிச்சிட்டீங்களா", என்று கேட்டுக்கொண்டே சுரேஷ் உள்ளே வர அப்பாவும், மகனும் இரவு ஊருக்கு செல்ல இரயிலுக்காக தயாராகிறார்கள்.
அம்மாவுக்கு துணையாக அம்மாவின் தங்கை வந்து இருக்கிறாள்.
பரிட்சை முடிந்து அப்பாவும், மகனும் வந்தாயிற்று.மாதங்கள் ஒடிற்று.
ஆனால் சுரேஷிற்கு இந்த வேலையும் கிடைக்கவில்லை.
இப்போது ஒரு தனியார் கம்பெனியில் நல்ல வேளையில் தான் இருக்கிறான். சம்பளமும் நல்ல சம்பளம் தான்.
மகனுக்கு அரசு வேலை இருந்தால் நல்லது என்று பாலுதான் எல்லாவிதமான வேலைக்கும் அப்ளிகேஷன் போட்டு படிக்க வைத்து பரிட்சைக்கு அழைத்தும் செல்வார்.
பாலு தான் மகனுக்கு ஆறுதல் சொன்னார். "விடுப்பா கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று"
"எப்படிப்பா நீங்க மட்டும் எதையுமே பாசிட்டீவ்வா எடுத்துக்கிறீங்க"
"அது இல்லப்பா, பழகிடுச்சுல்ல, பக்குவப்பட்டுட்டா எல்லாமே நமக்கு தூசிதான்"
"சரி, நீ போய் தூங்கு, காலைல ஆபீஸ் போகணும்ல"
சுரேஷும் தூங்கப்போனான்.
"ஏன் மீனாட்சி, நான் ஒண்ணு கேக்கட்டா"
"கேளுங்க"
"நாம இன்னொரு குழந்தை பெத்து இருக்கலாமோ, பொண்ணோ, பையனோ"
"ச்சீ, இந்த வயசுல் பேசற பேச்சா இது"
"அது இல்ல மீனாட்சி, நம்ம சுரேஷ் மனசுல பட்டத பேசுறதுக்கு, ஒரு தங்கையோ, தம்பியோ இல்ல பாரு, அதான் சொன்னேன்"
"இப்ப யோசிச்சு ஒரு புண்ணியமும் இல்ல, அவனுக்கு ஒரு பொண்ண பாருங்க கல்யாணத்துக்கு, அந்தக் குறை தெரியாது"
"சரி மீனாட்சி, வரப்போற மருமகள, நீ மகளா பாப்பியா, மருமகளா பாப்பியா"
"ம். வந்ததுக்கப்புறம் பாருங்க, எப்டி பாக்குறேன்னு, எங்க மாமியார் என்னை எப்படி பாத்துக்கிட்டாங்களோ, அதவிட ஒரு படி மேலதான் என் மருமகள பார்த்துப்பேன்"
"எங்க அம்மா ஒன்ன ஒரு மகளா தானே பார்த்தாங்க"
"புரியுதுல்ல, இப்ப போய் தூங்குங்க, காலைல பேசிக்கலாம்"
சுரேஷிற்கு நல்ல இடத்தில் பெண் கிடைக்க, திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் பரபரப்பாக நடக்கின்றன.
திருமணமும் நல்லவிதமாக முடிந்தது.
மீனாட்சி விழித்துப் பார்க்கும்போது அது கனவு என்று தெரிந்தது. "என்னங்க இது, ஒரு கெட்ட கனவு, சுரேஷிற்கு திருமணம் ஆனதுபோல்"
"அதற்கென்ன மீனாட்சி, திருமணம் முடிந்த மாதிரி தானே வந்தது. நல்லதுதானே"
"அதில்லீங்க திருமணம் ஆனது போல் கனவு வரக்கூடாது"
"போச்சுடா, இன்னைக்கி புல்லா நீ டல்லாயிருவியே. அத மறந்துட்டு எழுந்துபோய் முகம கழுவி வா. சுரேஷ் காபி போட்டு வைத்து இருப்பான்"
காலையில் எப்போதும் சுரேஷ்தான் காபி போட்டு தருவான்.
பாலு நந்துவிடமும் சொல்லி வைத்திருந்தார். ஏதாவது நல்ல இடமாக இருந்தால் சொல். சுரேஷிற்கு பேசி முடிக்கலாம் என்று,
"ம். என்னோட பொண்ணு ரெண்டுமே சுரேஷைவிட பெரிய ஆளுங்க. திருமணமும் முடிஞ்சு போய்ட்டாங்க. மீனாட்சிக்கு மருமகளாகிற பொண்ணு ரொம்ப பாக்கியசாலி"
சுரேஷிற்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது. நிச்சயதார்த்தமே திருமணம் போல் நடந்தது பெண்வீட்டில்.
மீனாட்சிக்கு நிலை கொள்ளவில்லை. தன் மருமகள் வந்தவுடன் அது செய்யவேண்டும், இது செய்யவேண்டும் என்று புலம்பிகொண்டே இருந்தாள்.
"மீனாட்சி, சும்மா சும்மா காபி கேக்குறேன் என்று கடிந்து கொள்வாயே. இனிமேல் என்னோட மகள்கிட்டதான் எல்லாம்"
"ம்.ம். பார்ப்போம்", என்று சிரித்துக்கொண்டே மீனாட்சி கோவிலுக்கு செல்கிறாள்.
சுரேஷிற்கு ஆசைப்பட்டதைப்போல் அடுத்து எழுதிய பேங்க் எக்ஸாமில் பாஸாக பேங்க் வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வந்தது. அனைவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம்.
அனைவரும் மருமகள் வருவதற்க்கு முன்பே அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்.
அப்போதுதான் சுரேஷ் மீனாட்சியிடம், "அம்மா! நான் சுமதிகிட்ட பேசினேன்", என்றான்.
"அதுக்கென்னப்பா உன் மனைவி ஆகப்போறவ தானே"
சுரேஷ், சுமதி இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள்.
"என்னங்க இது. சோர்ந்து போன மாதிரி தெரியறீங்க", என்று கேட்டுக்கொண்டே
மீனாட்சி பாலுவின் அருகில் அமர்ந்து கொள்கிறாள்.
"மீனாட்சி! திருமணத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று ஒரு குத்துமதிப்பா சொல்லேன்"
"ஏங்க, இந்த திடீர் யோசனை"
"அதுக்கில்லம்மா, முதல் கல்யாணமும், கடைசி கல்யாணமும் இது தானே. எல்லாருக்கும் புடவை, வேட்டி சட்டையெல்லாம் எடுத்துக்கொடுக்கணும்"
"அதுக்கென்னங்க, நாளைக்கே போய் கடையில எல்லாருக்கும் வேண்டியதெல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம்"
சுரேஷிடமும் காலையில் கடைக்கு மூவரும் போகலாம் என்று கூறி விட்டு தூங்கச்சென்றனர்.
கடையில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை ஒரு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு மூவரும் காருக்கு வருகிறார்கள். மீனாட்சி பர்சை மறந்து ஓட்டலில் வைத்துவிட்டேன் என்று எடுத்துவர சென்றாள். இருவரும் பேசிக்கொண்டே நின்று கொண்டு இருந்தனர். நொடிப்பொழுதில் ஒரு லாரி வந்து மீனாட்சியை அடித்து சென்றது. இருவரும் உறைந்து போய்விட்டனர். ஆஸ்பெட்டலில் சேர்த்தும் பலனில்லை.
நாட்கள் நகர்ந்தன. திருமணத்தை ஒத்திவைக்கலாம் என்றனர் அனைவரும். வேண்டாம் என்று மறுத்துவிட்டார் பாலு. நிச்சயித்த தேதி படியே நடக்கட்டும் என்று கூறி விட்டார்.
திருமணம் நல்லபடியாக முடிந்தது. சுரேஷ் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவின் மறைவில் இருந்து தேறி வருகிறான்.
பாலுதான் உடைந்துவிட்டார். எதற்கெடுத்தாலும் மீனாட்சி மீனாட்சி என்று அழைப்பேனே, இனி யாரையடி அழைப்பேன், வந்த லாரி என்னை கொண்டு போய் இருக்கக்கூடாதா என்று மனதிற்குள்ளேயே பொருமியபடி அழுதுக்கொண்டிருந்தார்.
"அப்பா", என்று அழைத்துக்கொண்டே சுமதி வந்து சாப்பிட அழைத்தாள். மனதில்லாமல் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தார். ஆனால் சுரேஷிற்கும், பாலுவிற்கும் சாப்பிட மனது ஒப்பவில்லை. எழுந்து சென்றுவிட்டனர்.
சுமதியும் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டாள். மனதுக்குள் அவளுக்கும் சங்கடம்.
நாட்கள் கழிந்தன.
பாலு சுரேஷிடமும், சுமதியிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். "அம்மா சுமதி, நான் கொஞ்ச நாளைக்கு என் நண்பன் நந்து வீட்டில் இருந்துவிட்டு வருகிறேன். அவனுக்கும் துணைக்கு யாரும் இல்லை. இரண்டு பிள்ளைகளும் திருமணம் முடிந்து தூரமாய் சென்று விட்டனர். மனைவியும் இல்லை. நான் கொஞ்ச நாளைக்கு அங்கு தங்கிவிட்டு வருகிறேன்", என்றார்.
"நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கு வாருங்கள்", என்றார்.
சுரேஷ் ஒன்றும் சொல்லவில்லை.
"சரிப்பா, உங்கள் மனது மாறினாலே போதும்", என்றான். சுமதியும் மறுப்பேதும் சொல்லவில்லை.
"நந்து", என்று அழைத்துக்கொண்டே பாலு வந்தார். பாலு வந்ததும் அவரையும் அறியாமல் நந்து அழுதுவிட்டார்.
"வாடா வா", என்றார்.
"டேய் நந்து. நீ மட்டும் சமைச்சி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாய் அல்லவா. இனிமேல் இருவரும் இருப்போமா? இருவரும் சேர்ந்து நூலகத்தை பராமரிக்கலாமா? என்னையும் இணைத்துக்கொள்வாயா?", என்றார் பாலு.
"டேய், என்னடா பேசுற, இது உன் வீடு, நீ எப்ப வேணாலும் வரலாம் போகலாம்" என்றார் நந்து.
இருவரும் அழுதே விட்டனர்.
"இல்லடா நந்து, அந்தவீட்ல எங்கே பார்த்தாலும் மீனாட்சியா தெரியறாடா. சொந்தவீட்லயே ஒரு அந்தியன போல உணர்றேன்டா நந்து", என்று கூறி ஓவென்று அழத்துவங்கினார்.
நாட்கள் மெல்ல மெல்ல கழிகின்றன. பாலு வீட்டிற்கு வந்து வந்து தான் செல்கிறார்.
சுமதி தாயாகிறாள். மகன் சுரேஷ் ஆஸ்பத்திரியில் இருந்து போன் செய்கிறான் பாலுவுக்கு.
"அப்பா! அம்மாவே வந்து பொறந்துட்டாங்க", என்று
பாலு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து பேத்தியை தூக்கி "மீனாட்சி", "மீனாட்சி", என்று கதறுகிறார்.
அனைவரின் கண்களிலும் நீர்த்துளிகள். இனி அவரின் பேத்தி தான் அவருக்கு உலகம் என்று சுரேஷ், சுமதி இருவரும் பேசிக்கொள்கின்றனர்.