மீண்டும் குளிர்ந்தது காலை
மழைபொழியுது இடியிடிக்குது
மனங் களிக்குதடி - இது
மாரி காலம் போலத் தூறி
மலர் உதிர்க்குதடி
குழை பறிக்குது குருத்து டைக்குது
குருவி கத்துதடி .- மெய்
கூதல் ஆக்கி ஊதுங் காற்று
கோணச் செய்யுதடி
பழைய வாசல் கதவு காற்றில்
படப டக்குதடி - அதைப்
பார்த்துப் பூனை பயந்து நடுங்கிப்
பதுங்கிச் செல்லுதடி
குழைந் துருட்டிய மணலை நீரும்
கொண்டு போகுதடி - பின்
குறையில் விட்டுதன் கோலம் மாறிக்
குதித்துப் பாயுதடி
தூறல் கொட்டுது தூர மின்னுது
தொலைவிற் சத்தமடி - இது
தூக்கி வாரிப் போட்டு மனமும்
துடிக்கச் செய்யுதடி
மாற லற்றது மலையில் நீரும்
மீள்பெருக் கமடி - அது
மளம ளென்றிடை ஓடிப் பாறை
மறைவில் துள்ளுதடி
கூற லென்னது குரங்கு மனதும்
குறுகுறுக் குதடி - இந்தக்
கொட்டும் மழையில் குதித்தே யாடக்
கொள்ளு தாசையடி
மீறல்கொண்டொரு காற்று வந்திடை
மரம் உலுப்புதடி - அது
மிரள வைத்தொரு மனதி லச்சமும்
மேவச் செய்யுதடி
சோலை மரங்கள் சிலுசி லிர்த்திடச்
சொட்டும் நீரையடி -அவை
தோளிற் பட்டதும் சிறுவர் கூட்டம்
துள்ளும் மான்களடி
காலைச் சுற்றிய சேலை பற்றிடும்
கன்னிப் பெண்ணொ ருத்தி - அவள்
கவனம் நீரில் கால் சறுக்கிடும்
காக்கும் எண்ணமடி
நூலைப் போன்றிடை வெள்ளிக் கம்பியின்
நீளத் தூறலடி - அது
நெஞ்சிலாக்கிய இன்ப மென்னது
நினைவுச் சாரலடி
காலை பூவெனக் காணும் மனதில்
களிப்பை ஊட்டுதடி - மெல்லக்
காற்ற டித்திடக் கன்னம் சில்லெனக்
காணும் முத்தமடி
வேலை செய்திடப் போகும் மனிதர்
வியர்வை போனதடி - அவர்
வேகும்மனதில் விடியல் பூக்கள்
விருப்ப மூட்டுதடி
சாலை பக்கத்தி லாடும் மரங்கள்
சற்று லுப்புதடி - துளி
சேர்ந்து வீழ்ந்திடப் பறவைகூட்டம்
சீற்றம் கொள்ளுதடி
நாலை மூன்றொடு கூட்டிப் பார்த்திட
ஏழு வந்ததடி - இந்த
நாளில் மீண்டுயிர் கொண்டு வாழெனும்
நேரம் வந்ததடி
பாலை வெம்மணல் நீர்பொழிந் தெனப்
பார்க்க இன்பமடி - இந்தப்
பாவி யுள்ளமும் பாட்டெ ழுதிடப்
பார்த்துக் கொட்டுதடி