போத்தலை..

“நான் குளிக்கப் போறேன். வண்டி வந்துச்சுன்னா சொல்லுடா” என்ற அம்மாவின் எச்சரிக்கையை கொஞ்சம் கூட காதில் போட்டுக்கொள்ளாமல் நண்பர்களுடன் வீட்டிற்கு எதிரில் இருக்கும் தாலுக்காபீஸ் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். தாலூக்காபீஸை சுற்றி ஆறு அடி உயரத்தில் இருக்கும் சுவர் மதில் ஒரு இடத்தில் மட்டும் இரண்டு அடி உயரமே இருக்கும. சுவரின் கொஞ்சப் பகுதியை இடித்து இரண்டடி உயரத்தில் ஒடுக்கலாக ப வடிவத்தை ஏற்படுத்தியது நானும் என் நண்பர்களும்தான். விடுமுறை நாட்களில் எல்லோரும் அதைத் தாண்டிக் குதித்து அங்கிருக்கும் பெரிய மைதானத்தில் கிட்டிப்புள் விளையாடுவோம். எங்கள் தெருவிலிருந்து மருத்துவமனை, கடைத் தெரு, மெயின் ரோட்டுக்கு சுற்றிப் போவதற்குப் பதிலாக இந்தப் பிளவின் வழியாக தாண்டிக் குதித்தால் அரை மணி நேர நடை மிச்சம். முதலில் எங்களின் பிரத்யேக ரகசிய வழியாக இருந்தது, பின்னாளில் பொது மக்களின் வழியாகவும் மாறியது.

சாலையில் சலங்கையின் ஒலி கூடிக்கொண்டே வந்தது. கொஞ்சம் கூட களைத்துப் போகாமல் கன்றுக்குட்டியின் துள்ளலுடன் நான்காவது வீட்டில் தலையை ஆட்டிக்கொண்டு கோமதி மிகவும் பௌவ்யமாக நின்றது. போத்தலை வண்டியில் இருந்து கீழே இறங்கினான். காதில் சொறுகி இருக்கும் பீடியை எடுத்து மூக்கின் அருகில் வைத்து ஆழமாக முகர்ந்து விட்டு, மீண்டும் காதின் மடலிலேயே சொருகினான். தலையில் கட்டியிருக்கும் துண்டை எடுத்து வேகமாக உதறி மீண்டும் தலையில் இறுக்கக் கட்டிக்கொண்டான். கோமதியை முதுகை ஒரு தடவை வாஞ்சையாக தடவிக் கொடுத்து விட்டு, வண்டியின் பொருத்தி இருந்த மர பீப்பாயின் மேல் கவிழ்த்தி இருந்த இரண்டு தகர வாளியை எடுத்து பீப்பாயின் கீழை வைத்தான். பீப்பாயின் கீழே மடித்து வைத்த சைக்கிள் ரப்பர் குழாயை பிரிக்க உடனே நீர் கொப்பளித்து வேகமாக தகர வாளியை நிறைத்தது. யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் அந்த வீட்டிற்குள் நீர் நிரம்பிய இரண்டு தகர வாளியை தன் இரண்டு கைகளால் தூக்கிக்கொண்டு வேகமான உள்ளே போனான். அடுத்து எங்கள் வீடுதான். இன்னும் ஐந்து நிமிடத்தில் எங்கள் வீட்டிற்கு நீர் ஊற்ற போத்தலை வந்து விடுவான். குரலெழுப்பி அம்மாவிடம் கூறினேன். அதோடு என் கடமை முடிந்ததுவிட்டது. மீண்டும் விட்ட விளையாட்டை நண்பர்களுடன் தொடர்ந்தேன்.

நாங்கள் இருந்த ஓட்டு வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் இருந்து கொண்டே மலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கோபுரத்தை தரிசிக்க முடியும். மலையில் தனியாகத் தெரியும் வரட்டிப்பாறையைப் பற்றி பாட்டியின் கைவசம் ஏராளமான கதைகள் இருந்தது. அந்தத் தெருவில் இருந்த அனேக வீடுகளில் கிணறு இல்லாததால் தண்ணீருக்கு போத்தலையின் வண்டியைத்தான் நம்பி இருந்தார்கள். தினமும் காலை எட்டு மணிக்கு ஆஜராகி விடுவான். நான்கடி உயரத்தில் கட்டு மஸதானான உடம்பு வாகு. அடர்த்தியான மீசை. முகத்தில் ஒரு வாரத்திற்கான முடி எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஓரடி விட்டத்தில் இருக்கும் சதைக்கோளத்தை சரிபாதியாக இரண்டாக அரிந்து வயிற்றில் ஒட்டியது போல இருக்கமான தொந்தி. அவன் வாய் விட்டுச் சிரிக்கும் போது மட்டும் கொஞ்சம் நெகிழ்ந்து அசைந்து கொடுக்கும். மற்ற நேரங்களில் இறுகிய பந்துபோல் நிரந்தரமான விறைப்புடன் இருக்கும். வீட்டினை அவன் நெருங்கும் போது மீண்டும் அம்மாவிற்குக் குரல் கொடுத்தேன். அம்மா வாசலைத் திறக்க போத்தலை வண்டியும் வந்தது. வேகமாக இறங்கியவன் ”என்னாம்மா ஐயா வந்திருக்காரா?” என்றான். நேற்று இரவில் வந்தவரைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும் என்று வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள் அம்மா. “இல்லைம்மா கதவைத் திறந்ததும், சிகரெட் வாடை குப்புன்னு அடிச்சுது, அதுதான்னு” தலையைச் சொறிந்தான். பதிவாகக் கொடுக்கும் பத்து பக்கெட்டுடன், கூடுதல் மூன்று பக்கெட் தேவை என்று அவனுக்குத் தெரியும். பழைய எண்ணை தகர டின்னில் குறுக்காக பொருத்திய கட்டையின் தளர்வை வண்டிச் சக்கரத்தில் தட்டி இறுக்கி மர பீப்பாயிலிருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டே நான்கு திசைகளிலும் கண்ணை சுழல விட்டான். என்னைப் பார்த்ததும் தலையை வேகமாக ஆட்டி அழைத்தான். நான் வராதது கண்டு தன் தலையை தாழ்த்தி அவன் அணிந்திருந்த பட்டையான கான்வாஸ் பெல்ட்டில் இருக்கும் மணி பர்ஸை ஒரு முறை தடவிப் பார்த்து விட்டு மீண்டும் என்னைப் பார்த்து வேகமாகத் தலையாட்டினான். அவனை நோக்கி நான் தலை தெறிக்க ஓடி வந்தேன்.
தொடரவா?

எழுதியவர் : பிரேம பிரபா (11-Sep-13, 8:01 pm)
பார்வை : 156

மேலே