பெண்

அன்னையவள் அவஸ்தையிலே அவனியிலே பெண்ணாய்
..அவதரிக்கும் போதினிலே அணைத்தவளைக் கண்ணாய்
பொன்னென்றும் பூவென்றும் போற்றிடுவர் பெற்றோர்
பிள்ளையவள் வளர்கின்ற பருவத்திலே தங்கள்
..பேரன்பைப் பொழிந்தவளை உயரத்தில் வைப்பர்
பின்பொருநாள் பூப்பெய்தி விட்டதுமே கொஞ்சம்
..பொறுப்புகளை அவள்தலையில் சுமத்துவதால் பெண்ணின்
தன்மையினை உணர்த்தித்தான் தன்மானத் தோடவள்
..தனித்துவமாய் வாழ்வதற்கு வழிகாட்டு கின்றர்
** ** **
கல்விதனை கற்றவலும் கரைசேர்ந்த பின்னே
..கஷ்டத்தின் மத்தியிலே தொழில்தேடிக் கொண்டு
சொல்லொணா துன்பத்தை அனுபவித்து நின்று
..சுயந்தன்னை இழக்காமல் துணிவோடு வென்று
துல்லியமாய் தன்பணியை செய்கின்றக் காலம்
..தூயவளாய் வாழ்வதற்கு போராடி முடிவில்
செல்வியென இருந்தவளும் திருமதியாய் ஆகிச்
..செல்வாளே தாய்வீட்டை விட்டன்பன் பின்னால்.
** *** **
உள்ளத்து தனியன்பை மட்டுமன்றி நாளும்
..உழைத்துழைத்து தேய்ந்தவளை வளர்த்திட்டோர் கையில்
உள்ளதுகள் இல்லாதது எல்லாமேக் கொடுத்து
..உன்வாழ்வு சிறப்பானால் போதுமெனக் கொண்டு
வெள்ளிநிலா அவளுக்கு சீர்வரிசை செய்து
..விளக்கேற்ற அனுப்புகின்ற வேளையிலேக் கண்ணீர்
துள்ளிவரும் என்றாலும் அதைதுடைத்துக் கொண்டு
..துணையோடு செல்வாளே துவண்டப்பூச் செண்டு .
** ** ***
புதுமனையின் வாசலிலே கால்பதிக்கும் அவளை
..பூரிப்பாய் வரவேற்கும் புதுசொந்த மெல்லாம்
மதுமலராய் அர்ச்சிக்கும் அர்ச்சனைகள் முடிய
..மாமியாரின் வடிவத்தில் காத்திருக்கும் குண்டு
மெதுவாக வெடிக்கின்ற பூகம்பம் கண்டு
..மிரள்கின்ற போதினிலும் குலப்பெருமை காக்க
இதுதானே வாழ்வென்று எல்லாமே சகித்து
..இறுதியிலே தன்மைழலை தனையவளும் சுமப்பாள்.
** ** **
தனக்கென்று வாழாமல் பிறர்க்காக வாழும்
..தன்னலங்கள் இல்லாத பெண்குலத்தின் வாழ்வில்
தினந்தோறும் போராட்டம் வந்தேதான் சூழும்
..திறமையினால் அதைவென்று கொள்ளுமவள் நாளும்
மனமொன்றிக் குடும்பத்துத் தலைவியென ஆளும்
..மகிழ்ச்சியினால் தனைத்தானே தேற்றுகின்ற போதும்
அனல்மீதில் புழுவாகித் தவிக்கின்ற அந்த
..அன்புக்கடல் உள்ளிருப்ப தெவருக்குப் புரியும்?
** ** **
இல்லறத்தில் எரிகின்ற எழில்மிகுந்த விளக்கு
..இதயத்திலே ஆயிரந்தான் இருந்தாலும் வழக்கு
நல்லறமாய் அதைக்காட்ட விடிகின்ற கிழக்கு
..நானிலத்தில் பெண்ணென்று நல்வாக்கு முழங்கு
வல்லமைகள் கொண்டிருக்கும் புதுமைமிகு உலங்கு
..வானூர்தி போல்எம்மை உயர்த்திடவே உழைத்து
வெல்வதற்கு வழிகாட்டி வீட்டுக்குள் முடங்கி
..விடைகாணா புதிராவால் விடிவெள்ளிக் கிடங்கு.
** ** **
காதலுக்கு உயிர்நாடி பெண்ணென்னும் கவிதை
..கல்யாண பந்தலிலோ ஐஸ்வரியப் பதுமை
ஈதலெனும் பெருங்குணத்தில் இயன்றளவு பெருமை
..இருக்கின்றக் காரணத்தால் அவளென்றும் புதுமை
ஆதலினால் பெண்குலத்தை ஆதரிப்போம் என்று
..அரங்கமெங்கும் அதிரும்வகை திருநாவைத் திறந்து
மாதர்தமை போற்றிடுவோம் என்றுரைப்போர் நாட்டில்
..மானபங்கம் செய்தவரைக் கொன்றழிப்பார் ஈற்றில்.
** ** **
பால்கொடுத்த மார்பறுத்துப் போதைபொருள் வாங்கி
..பருகுகின்ற இன்பத்திலே மயங்குகின்றக் கயவன்
பால்குடியும் மாறாப்பெண் குழைந்தையைக் கூட
..பாலியலால் துன்புறுத்தும் பாதகங்கள் புரிவான்
கால்தடுக்கி விழுந்துஎழும் முன்பாக பெண்ணைக்
..காமனிடம் கையளிக்க காத்திருக்கும் இன்றில்
நூல்மீது நடப்பதுபோல் தான்பெண்ணின் வாழ்வு
..நூதனமாய் இல்லாது போனாலோ பாழ்தான்.
** ** **
கருவினிலே பெண்வளர்தல் கண்டறிந்துக் கொண்டு
..கச்சிதமாய்க் கலைக்கும்கலை கற்றுவிட்ட மனிதன்
தெருவினிலே பெண்தேடி அலைகின்ற நாளை
..தெய்வங்களும் கண்மூடிப் போய்விடலாம் என்று
கருதுகின்ற மனம்வைத்தால் மட்டுமிங்கு பெண்கள்
..கர்ப்பிணிகள் கோலத்திலே வலம்வருவார் என்று
தருமகுணம் கொண்டவர்கள் நினைத்தாலே இந்த
தரணியெங்கும் பெண்ணென்னும் பூப்பூக்கும் சோலை.
** *** ***
பெண்ணினத்தும் குந்தகங்கள் விளைவிப்போ ருண்டு
..பெரும்பாலும் அவர்வாழ்வு நடுவீதி கண்டு
கண்ணிருந்தும் குருடான கதையாகிப் போயே
..காலறுந்தச் செருப்பாகிக் கிடப்பதுவும் உண்டு
ஒன்னுரெண்டு செய்கின்ற காரியங்கள் கண்டு
..ஒட்டுமொத்த மாயவரை வெறுப்போரு முண்டு
எண்ணிஇதை பார்க்கின்ற இதயங்க ளாலே
..ஈனமுற்ற அவர்கூட இதயமுள்ளோ ராவர்.
** ** **
செய்வதெல்லாம் செய்துவிட்டு பெண்ணைக்குறை சொல்லும்
..செயல்புரியும் மானுடந்தான் தன்பாவந்த் தன்னை
தெய்வமெனும் பெண்முன்னே மண்டியிட்டுத் தாயே
..தெரியாமல் செய்திட்டேன் மன்னிப்பாய் என்றே
மெய்யுருகி வணங்குகின்ற பாவனைக ளாலே
..மேன்மையுற வழிதேடும் நிலைகண்டும் பெண்ணை
பொய்வடிவாய் நோக்குகின்ற புத்தியினை மாற்றி
..புதுவடிவம் வழங்கிவிடு புகழ்மாலைச் சாற்றி.
** *** ***
தாயென்று தாரமென்று சேயென்று உந்தன்
,,தங்கையென தமக்கைஎன தோழியென வாழ்வில்
நோயுற்றுக் கிடக்கையிலே தாதிஎன பலவாய்
..நோக்குகின்ற போதினிலே சேர்ந்திருக்கும் பெண்ணை
நாயென்று நீதிட்டி விரட்டுகின்ற போதும்
..நன்றியுடன் நின்றிருக்கும் பெண்ணினத்தை கொஞ்சம்
வாய்கொண்டு அன்பொழுக வார்த்தைநீ ராட்டு
..வாழ்வினிலே உனைத்தேடி வருமேபா ராட்டு.
** *** ***
மெய்யன் நடராஜ் .இலங்கை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Sep-13, 5:02 pm)
பார்வை : 269

மேலே