தகையணங்கு!
அப்பப்பா! என்னே நான் சொல்லுவேன்!
செப்பப்பா! பிரமனே நீதான் செதுக்கியவன்!
ஒப்பப்பா! பெண்ணோ! ஒய்யார மயிலோ!
எப்பப்பா! தேவதை இப்புவி வந்தாளோ!
அஞ்சிடும் மானின அணங்கவள் கண்கள்
ஆனாலும் அவையோ எமன்விடுங் கணைகள்!.
நெஞ்சம் பதறுதே நேரே நோக்குமோ!
மிஞ்சிடும் படையதை மீளவும் கூடுமோ!
எமனவன் கொடுமை என்னெனக் கண்டேன்!
அமருக்கும் அஞ்சாமை அருகியும் மாண்டேன்!
திமிரதன் களிறாய் மிரட்டிடும் முலைகள்
சமரிடத் துகிலை சருக்கிடத் தொலைந்தேன்.
வில்லெனப் புருவம் வளைந்ததும் நீண்டால்
கொல்லெனத் துடிக்கும் கூர்விழி மறைந்தால்
மெல்லவே நானும் மீளவும் முயல்வேன்.
வெல்லுவாள் அவளே வீழ்வேன் நிழலில்.
கண்ணிலே என்ன மாயங்கள் செய்தாள்?
உண்ணுதே என்னுயிரை உருக்கியே தினமே!
ஒண்ணுதல் மின்னொளி காயுது என்னுடல்.
எண்ணுதல் ஏங்குதும் ஏனோ வளருதே!
உண்டால் போதை ஊட்டிடும் மதுவும்
கண்டால் போதை ஏற்றிடும் மாதும்
ஒன்றா என்றால் நாணிடும் மதுவும்.
கொண்டால் காதல் கூடிடும் மாதும்.
நாணங்கூடத் தோணும் அச்சமும்
மானின் மடமும் பேணும் பயிர்ப்பும்
புன்னகை இருக்கப் பொன்னகையேனோ!
கண் பெறுமாயிரம் நன்மணிக் கலன்கள்.
கொ.பெ.பி.அய்யா.