நீ அப்படித்தான்..! - பொள்ளாச்சி அபி
“என்னைக் குறித்து
நீ நினைப்பதென்ன..?”
எல்லாருக்கும் தேவைப் படுகிறது
ஏதோவொரு கருத்தும்,
சில மதிப்பீடுகளும்..,
விமர்சனம் விரும்பாத புகழ்ச்சியும்..!
சரி..கேட்டுக் கொள்..,
உன்னைப் பற்றிச் சொல்வதெனில்..,
உனது வார்த்தைகள்
வருடுகின்றன..!
உனது கவிதைகள்
மயக்குகின்றன..!
வானவில்லின் வர்ணஜாலத்தை
வார்த்தைகளில் வசப்படுத்த
எங்கேதான் நீ கற்றாயோ..?
எண்ணும்போதெல்லாம்
எனக்கு வியப்புதான்..!
காதல்குறித்து - நீ
எழுதும்போதெல்லாம்
வாசிக்கின்ற பெண்களை
காதலிக்க வைக்கிறவன் நீ.!
காதலிக்க வைப்பதற்காகவே
எழுதுபவனாகவும் இருக்கலாம்..!
பெண்களைப் பற்றி
பொருட்களைப் பற்றி
இன்னும்.. இன்னும்
என்னன்னவோ பற்றி..,
வர்ணணைகளால்,
செதுக்கி செதுக்கி நீ
வடிவமைக்கின்ற கவிதைகளை
அதிலுள்ள கற்பனைகளை..,
கோப்புகளாய் காத்திடவும் ஆசை..!
ஆனால்..நண்பனே..!-நான்
எதனைசேர்த்து வைக்கவும்
நினைக்கின்ற இடமெல்லாம்
துயரங்களின் குரல்களே
நிறைந்து கிடக்கிறது..!
கடக்கவேண்டிய பாதைகளோ
எனது பயணத்தை
முடிவற்ற வகையில்
நீட்டிக்கொண்டே இருக்கின்றன..!
துருத்தியபடி நீண்டிருக்கும்
நிஜங்கள் இடறும்போதெல்லாம்
நீ படைத்த கற்பனையுலகத்திற்கு
வெளியே வந்துவிழுகிறேன்..!
இதில் என்குற்றம் எதுவென
ஆராய்ந்தும் பிடிகிட்டவில்லை..!
வாழ வைப்பதைக் குறித்த கவலைகளற்று,
படைப்பது மட்டுமே தொழிலாய்
கொண்ட பிரம்மனைப் போல..,
நீயோ..மேலும்,மேலும்,மேலும்
படைத்துக் கொண்டேயிருக்கிறாய்..!
நீ அப்படித்தான்..!
நீ இதுவரை எழுதியதெல்லாம்
நடந்திருக்குமெனில்..
ஈழம் மலர்ந்திருக்கும்..
ராஜபக்ஷே தற்கொலை செய்திருப்பான்..
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள்
சிறுவர்களைக் கொன்றிருக்காது..!
முசாபரில் கலவரம் நடந்திருக்காது.!
சிலபோது..
ஆயிரம் புரட்சிகள் மலர்ந்திருக்கும்
நாலாம் உலகப்போரும் முடிந்திருக்கும்..!
“எழுத்தால் உலகம் மாறும்”
என்பதுன் வாதம்..!
“ எழுத்தை நிஜமாக்கும்
செயலால் உலகம் மாறும்”
என்பது என் வாதம்..!
"சரி..சரி..,
உனது வீதியில் குடிநீருக்கான
போராட்டமாம்..
நீ எழுதிக் கொண்டிரு...
வழக்கம் போல..!
நான் அவர்களுக்காக
முழக்கமிடப் போகிறேன்..,
வழக்கம் போல..!