மயான மடல் .
ஏய் துப்பாக்கிகளே ...
போதும் நிறுத்துங்கள்
நீங்கள்
தினம் தினம்
சல்லடை செய்து போடும்
எச்சங்களை எல்லாம்
விழுங்கி விழுங்கி
என் வயிறு வெடித்துப் போயிற்று ...
யாருக்கு செய்த பாவமோ
மயான பூமியாய்
இப் புவிதனிலே
ஜனனித்துக் கிடக்கிறேன்
விதியை நொந்து
என்ன பயன்
கிழிந்து கிடக்கும் என் வயிற்றுக்கு
தையல் போட்டு
மருந்து கட்டி
மனித எச்சங்கலேல்லாம்
மக்கி போனவுடன்
தூது அனுப்புகிறேன் ....
அதுவரை உங்கள்
துப்பாக்கி முனையை
குத்தகைக்கு விடுங்கள்
குருவிகள் கூடு கட்டி
குடும்பம் நடத்தட்டும் !
உங்கள்
துப்பாக்கி ரவைகளை
தர்மம் செய்யுங்கள்
ஒவ்வொரு வீடுகள் தோறும்
மலர்ச் செடிகள் நட்டு
மனம் மகிழட்டும்