விளையும் பயிர்!

அன்று குழந்தையாய் தாய் மடியில் சிரித்திருந்தான்
இன்று செல்வமே அவன் மடியிற் சிரிக்கிறாள்
தத்தித் தவறி எழுந்து விழுந்து அன்று முயன்றான்
புத்திக்கெட்டுந் தூரமின்றும் சென்று வருகின்றான்.
விளைகின்ற பயிரொன்று முளையிற் தெரியுமே!
நுழைகின்ற வழி நன்றே விழியிற் புரியுமே!
தாளிலே தங்கத்தையும் ஒளித்து வைத்தாலும்
தங்கமே தேர்ந்திடுவான் குழந்தையவன்தானும்.
தாளினைத் தள்ளி விட்டுத் தங்கமெடுப்பான்
தாய்க்கதை மாட்டிவிட்டு முத்தங்கொடுப்பான்,
தந்தையவர் இறந்தாலும் தாயவள வளர்த்தாலும்
முந்தையவர் பேர் விளங்க விந்தையே செய்கிறான்.
அசைவுகள் கவனித்தான் அர்த்தங்கள் நாடினான்.
இசையாதச் செயலுக்கும் ஏனெனத் தேடினான்.
எழுப்பிடும் வினாக்களை எடுத்துமே வைக்கிறான்.
மழுப்பிடும் பதில்களை மறுவிடை காண்கிறான்.
பள்ளியிற் பயின்றதை உள்கொண்டு உணர்கிறான்.
உள்ளென்ன இருப்பதோ!தெள்ளியே தேர்கிறான்.
அதுவென்ன இதுவென்ன விளங்கிட முனைகிறான்.
அறிவினைப் பெருக்கவே அப்படித்தான் தேடுறான்.
எதையுமே எடுப்பிலே ஏற்கவுந் துணிந்திடான்.
அதையுமே அவனாய்ந்து ஐயமின்றித் துணிகிறான்.
கூர்மையாம் அறிவைக் குழந்தையிற் கொண்டவன்
குழந்தையவன் தெரிவுக்கே தந்தையும் விட்டவன்.
ஆர்வத்தின் விழிப்பிலே அவனறிந்து கண்டவன்.
நேர்மையாம் நெறியிலே வழியினை நேர்ந்தவன்
வேலையைத் தேடாதான் வேலைகள் தருகிறான்.
காளையோ உழைப்பிலே கோபுரமாய் உயர்கிறான்.
நூறான குடும்பஙகளின் சோறாகித் தாயுமானான்
பேறு பெற்ற தாயவளின் பேராகிச் சேயுமானான்.
தன்திறனை தனை நம்பித் தன்னறிவிலுயர்கிறான்.
தந்தையவன் தவப்பயனால் விந்தையாகிறான்.
இரண்டு பத்து வயதிலே எழுகிறான் முனைகிறான்.
இன்றுவரை வென்றுவரை நின்றுமே சிறக்கிறான்.
நாலு பத்து வயதுக்குள் நாடுகளைக் காண்கிறான்.
நாழிகையும் வீணின்றி தேடித்தேடி வெல்கிறான்.
இன்னும் எட்டுந் தூரந் தொடவும் விழைகிறான்.
இரவு பகல் என்றறியா இயக்கமாய் உழைக்கிறான்.
நடை பழகும் நாளிலேயே ஓடியோடிப் பழகினான்.
நாளெல்லாம் ஓடுகிறான் நடக்கவும் மறக்கிறான்.
குமாரனைப் பெற்றவரின் குலதெயவத் தவப்யனோ!
சமரிட்டு வாழ்க்கைதனை சரித்திரத்தில் நிற்கிறான்.
உதாரணப் புருசனாய் ஊர் மெச்ச வாழ்கிறான்!
சதமாகச் சமூகத்தின் சாதனையாய்ச் செழிக்கிறான்!
வாழ்கவன் புகழ்கண்டு வளர்கவே உழைப்பென்று!
வீழ்கவே வறுமையும் விதியெனும் பிழைப்பகன்று!
சூழ்கவே வளமெங்கும் சுதந்திரக் காற்றுண்டு!
வாழ்கவே! வாழ்கவே! வாடாத நலங்கொண்டு!
கொ.பெ.பி.அய்யா.