@@@ விவாக(ம்)ரத்து @@@

நந்த வனத்து தேன்சிட்டுகளாய்
===சிந்தை சொல் கேளாது
வந்த நேரங்காலம் பாராது
===விந்தைக் காதல் கொண்டோம்
அந்த ரத்துப்பறவைகளாய்ப் பறந்து
===அந்தி சாயும்நேரம் மறந்தோம்
காந்த நிலாவானம் வந்தும்
===நீந்தித் திரிந்தோம் காதலுக்குள்

காமத்தீ பற்றிவிட நாள்குறித்தோம்
===திரு மனத்திற்கு உறவினரோடு
கோபத்தீ சூழ்ந்தாலும் கன்றுகளென
===பெரு மனங்கொண்டு முடித்தனர்
சாபத்தீ தீண்டாமல் வாழவேண்டி
===உறு கொண்டாலும் வாழ்த்தினர்
வேகத்தீ யாய் மனம்பொங்க
===பெருங் கடலாய் இன்புற்றோம்

தேனிலவு லயித்துப்போனது மீட்டிய
===கட்டிலினிசை தினம் கேட்டு
வெண்ணிலவு கரையென தோன்றியது
===வாழ்வினிசை தினம் பார்த்து
சிறுபிளவு தோன்றியது இல்லறத்தின்
===இனியஇசை மீட்ட வழித்தெரியாமல்
சிறிதளவு நிம்மதியும் சிதறிப்போனது
===பண்ணிசை புரிதல் தவறியதால்

புரிந்து பேசிக்கொண்ட மௌனங்கள்
===புரியாமல் பேசிக்கொண்டன இன்று
பரிந்து பகிர்ந்துகொண்ட தருணங்கள்
===அறியாமல் தகர்ந்து போயின
செறிந்து வளர்ந்திருந்த அன்பு
===புரிதலில்லாமல் சிதறிப் போயின
கடிந்து கொள்கிறது ஒவ்வோர்நாளும்
===விடியல் வேண்டா மென்று

விட்டுக்கொடுத்த மனங்கள் சிறுநேரம்
===விட்டுக்கொடுத்து பேச முடியாமல்
தட்டிக்கொடுத்து இணைந்த சகிப்புத்தன்மை
===தட்டுக்கெட்டு சலித்துப் போனதால்
கட்டுப்படுத்த முடியாத அகந்தைக்கோபத்தால்
===மெட்டில்லாத பாடலானது வாழ்வாய்
எட்டிப்பிடிக்க முடியாத வெண்ணிலாவென
===எட்டிஉதைக்குது வாழ்வு மனதிற்கு

வெறும் காலங்கடத்தி பேசிய
===நாட்களில் பகிர்ந்து கொள்ளவில்லை
வருங் காலத்தில் வாழ்வின்
===நாட்களை வகுக்கும் வழிகளை
பெரும் போராட்டமான வாழ்வினில்
===நாட்கள் இனிநகர வேண்டாமென
இரு மனங்களும் இணைந்தெடுத்திட்டு
===நாளையோடு விவாக(ம்) ரத்து.

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (22-Sep-13, 10:59 am)
பார்வை : 207

மேலே