மரணமெனும் நானும் மனிதமெனும் நீயும் !
நானும் நீயும்
நண்பர்கள்தான் ......
தாயின் கருவறையிலிருந்து
துள்ளிக்குதித்து
அம்மாவென்று
சத்தம் போட்டுக்கத்தி
தாயெனும் உன்
முதலுறவோடு நீ
சேர்ந்து கொண்டாய்
வாழ்வெனும் தொடரில்
இணைந்தும் கொண்டாய் .....
இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்கள்தான்
குழந்தையென்றும்
சிறு பிள்ளையென்றும்
வயது வந்த
காளை யென்றும்
வேடங்களில் எல்லாம்
கச்சிதமாய் போருந்திப்போனாய்
இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்கள்தான்
மனைவியென்றாய்
மங்கையொருத்தியை
மனந்துகொண்டாய்
பிள்ளையென்றாய்
பின் உழைப்பு என்றாய்
முதுமையென்று
முடங்கிக்கொண்டாய்
இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்கள்தான்
பணம் தேடினாய்
பொருள் தேடினாய்
ஏன்
சொந்தம் பந்தம்
சொத்து சுகமென்று
பலதும் தேடினாய் .
இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்களாயிருந்தும்
என்னை நீ
நினைக்க மறந்தபோதும்
உன்னை நான் மறவாமல்
உன்னோடு
இணைந்து கொள்ளும்
பொழுதுகளில்மட்டும் ஏன் அழுகிறாய் ?