514- வேண்டும் வேண்டும் ..

நல்லதொரு தமிழ்க்கவிதை படித்தசுகம்
==நெஞ்சினையே நிறைக்க வேண்டும்;
மெல்லவொரு நடைபயின்று மேன்மைமிகு
==விஷயங்கள் பேச வேண்டும்;
வல்லமையில் லாதவர்கள் வாழ்விடங்கள் ==அற்றவர்கள் வசதிக் காக
நல்லபல திட்டங்கள் நமதரசு
== செய்வதையே விளக்க வேண்டும்!

கடல்மணலை நிலக்கரியை கனிமத்தைத்
==திருடுபவர் கடிதல் வேண்டும்;
அடகுபிடிக் கின்றவர்போல் அரசியல்செய்
==பவர்குறையை அரற்ற வேண்டும்;
விடலைமுதல் சினிமாவில் விழுந்தழிவோர்
==நிலைமாற்ற விழைதல் வேண்டும்;
தடன்கலினை எதிர்கொள்ளத் தனிப்பயிற்சி
==இளைஞருக்குத் தருதல் வேண்டும்!

வன்கொடுமை கற்பழிப்பு கொலை, திருட்டு
===வளர்வதனை எடுத்துக் காட்டித்
தன்வறுமை ஊடகங்கள் தவிர்ப்பதற்கு
==முனைவதையே தடுக்க வேண்டும்;
நன்முறையில் இவைதவிர்க்க நாடேடுக்கும்
==முயற்சிகளை நமக்குக் காட்டி,
மென்முறையில் கலவரங்கள் மூளாமல்
==காத்துணர்த்த முயல வேண்டும்!

செல்லாத வர்த்தைகளைச் சீரழிக்கும்
==பண்பாட்டுச் சிறுமை தம்மை,
எல்லோர்க்கும் முன்வைத்து, எழுதுவதை
==நிறுத்திவிட இயக்கம் வேண்டும்;
பல்,நாட்டு முன்னேற்றம் பார்ப்பவர்கள்
==அதன்பின்னே பரவி யுள்ள
நல்லபல கரணிகளை நாமறிய
==முகநூலில் நவில வேண்டும்!

கல்வியிலே வருகின்ற மாற்றங்கள்
==வளர்ச்சிகளைக் கதைக்க வேண்டும்;
பல்விதமாய் நதி நீரைப் பங்கிட்டுப்
==பசுமைஎங்கும் பரப்ப வேண்டும்;
பொல்லாதோர் தமைவிலக்கி வாக்குகளைப்
==போட்டிடவே ஊக்க வேண்டும்;
எல்லோரும் இவையறிய எடுத்தோதி
==முகநூலில் எழுத வேண்டும்!

மாநிலங்கள் ஆட்சிசெயும் வசதிக்கே
==எனும்நிலையை மதிக்கச் சொல்லி
மாநிலமும் பாரதமாம் மாநிலத்தின்
==பகுதியென மதித்தல் வேண்டும்;
மாநிலத்தைப் பிற நாட்டார் மதிப்பிழக்க
==வைக்காத மானம் வேண்டும்;
மான்,இனத்தார் உயர்வினோடும் மாறா நம்
==பண்பாட்டில் மகிழ வேண்டும்!
== ==

...thodarum

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (23-Sep-13, 8:17 am)
பார்வை : 105

மேலே