சிறுவாபுரிக்கு வாருங்கள்.!

சிறுவாபுரிக்கு வாருங்கள்.
செவ்வேலழகனைக் காணுங்கள்.
மரகத மயிலினைப் பாருங்கள்.-வினை
அருகிட அவனருள் சேருங்கள்.
மரகத அழகின் திருமேனி
அரனவன் மகனின் உருமேனி
எழில் சூழ் தண்பதி சிறுவையே
பொழில் வாழ் புவியின் திருப்பதியே!
சிறுவர் இருவர் லவ குசலன்
அறியார் அவர் தந்தை இராமருடன்
போரிட்ட இடமே சிறுவாபுரி-அந்த
திருத்தலம்தானே சிறுவம்பேடு.
அருணகிரியார் அருள் பெருகி
உருகிப்பாடிய திருப்புகழில்
சிறுவையம் பதிப் பெருமானை
சிறப்பித்துத் தேடித் துதி செய்தார்.
முருகன் திருப்புகழ் தினம் பாடும்
முருகம்மாள் அவனருள் பெற்ற இடம்.
மறுத்தவள்க் கணவன் அறுத்தவள் கரமும்
பொருத்திய வள்ளல் சிறுவாபுரியன்.
வள்ளியின் கரமும் பற்றிய முருகன்
வருவோர்க்கவனே கை கொடுப்பான்.
தெய்வயானையும் உடனணப்பான்.
தேடும் அடியார்க்குத் துணையிருப்பான்.
அள்ளியே செல்வங்கள் அவன் கொடுப்பான்.
தள்ளிடும் செயல்களும் தான் முடிப்பான்.
உள்ளிய பொழுதே உறைவிடமளிப்பான்.
கொள்ளும் தொழிலும் நிறைபடைப்பான்.
ஆறு வாரங்கள் தொடர்ந்தவன் தரிசனம்
தேறும் அடியார் பெறுவார் கரிசனம்.
கூறுமவன் புகழ் கூர்வினையழிக்கும்
மாறும் வாழ்வதும் பெருகிடச்சிறக்கும்.
சிறுவா புரிக்கே ஓடுங்கள் -அவன்
சேவடிப் பெருமைகள் பாடுங்கள்.
திருவாய் பதியதைத் தேடுங்கள்-அவன்
அருளாய்க் கொடையினை நாடுங்கள்.
கொ.பெ.பி.அய்யா.