அப்பாவுக்காக...................!

அப்பாவின் அருமை புரியும்
அம்மாவின் பெருமைச் சிரிப்பில்
சுப்பனின் திருமை தெரியும்--அவனது
அப்பனின் பொறுமை வளர்பபில்.

காலமெல்லாம் கற்பனையில்
கோலமாய்க் கொண்டவனில்.
சீலமாய் அவள் தயவில்--உயிர்த்தான்
வாலறிவன் வேண்டித்தனில்.

பின் வாழும் உலகினுக்கு
தன் மூலம் உயர்வினுக்கு
நன்மகவு பெறுவதற்கு--அவளைத்
தான் மணந்தான் சேருதற்கு.

கருவறையிற் சுமந்தாளை
கனவோடு அணைத்தானை
உருவாக விதைத்தானை--போற்றுப்
பிரம்மனே அவன்தானை.

நாளெல்லாம் உழைத்திட்டான்.
நான் வாழப் பிழைத்திட்டான்...
வாழ்வெல்லாம் நானென்றான்--நானும்
வளர்நதிட வாழ்ந்திட்டான்.

பையதைச் சுமந்திட்டான்.
படிப்பினைத் தந்திட்டான்.
வையத்தில் உயர்த்திட்டான்--எனது
வளர்ச்சியில் நிறைந்திட்டான்.

உலகினை உணர்த்தினான்.
பழகிடப் பழக்கினான்.
விலக்கிட வேண்டாமை---தனையே
நிலையாக்கிச் செலுத்தினான்.

ஆதாரங் காட்டினான்.
அறிவொளி ஏற்றினான்
சேதாரம் இல்லாத--உயரச்
செயல் முறை ஊட்டினான்

ஆன்றோரே சூழ்ந்திருக்க
அவை முந்தி நானிருக்க
ஈன்றானைப் பிறர் வியக்க--எனையே
முத்தினன் தவஞ் சிறக்க.

கையிரண்டைப் பற்றியே
மெய்தழுவ அணைத்துமே
செய்நன்றி செய்வனென்றே--தந்தை
சேவடித் தொழுதுதிர்த்தேன்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (30-Sep-13, 2:16 pm)
பார்வை : 105

மேலே