இதுதான் தாஜ்மஹால்

“இந்த கண்ணாடி கோப்பை என்ன விலை..?”
அவளை கண்டதும் விற்பனை அழகியிடம் வில்லங்கமாய் கேட்டான்..!
“இது கண்ணாடி கோப்பை இல்லை..! வைர கோப்பை யாராலும் வாங்க முடியாது..!” விற்பனை அழகியும் விவகாராமாக பதில் சொன்னாள்..!
“உன்னை போன்ற பேரழகியின் கைபட்டால் கண்ணாடி வைரமாக மாறாதிருக்குமோ..!” எப்படி நான் வாங்காமல் விடுவேன்..! விலை கேட்டவர் வாங்கினார்..!
இதுதான் தாஜ்மகாலின் ஆரம்பம்..!
விற்பனை பெண் அர்ஜுமான் பானு...! விலை பேசியவர்.. இளவரசன் ஷாஜஹான்..!
விற்பனை பெண் (அர்ஜுமான் பானு) இளவரசரிடம் தைரியமாக பேச காரணம்... நூர்ஜஹானின் (ஷாஜஹானின் தாயார்) சகோதரர் அசப்கானின் மகள்தான் இவள்.
தந்தை ஜாஹாங்கிரிடம் இளவரசர் ‘கண்டதும் காதலை’ சொல்ல 1612 இல் திருமணம் முடித்து மன்னர் வாழ்த்தியபோது அழைத்ததுதான் “மும்தாஜ்” (அரண்மனையில் முதன்மையானவள்)..!
உலகத்தில் இன்றளவும் உன்னத காதல் காவியங்கள் அனைத்தும் மனமேடை விட்டு ‘மணமேடை’ காணாதவை..! அதை பொய்ப்பித்து இன்றளவும் மணமேடை கண்டபிறகும் காதல் காவியமாய் பறைசாற்றி கொண்டு இருப்பதுதான்.. “தாஜ்மகால்..!” அதனால்தான் இன்றும் இது “உலக அதிசயம்..!”
பத்தொன்பது வருட இல்லற வாழ்க்கையில் பதிநான்கு குழந்தைகள்..! தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருந்ததற்கு வேறு என்ன வேண்டும் உதாரணம்..?
தான் போகும் இடமெல்லாம் தனது காதல் மனைவியை பிரிய மனமில்லாமல் உடன் அழைத்து சென்றார் ஷாஜஹான். போர்களங்களிலும் கூட தனிமை தவிக்க முடியாமல்..!
07.06.1631 தனது பதினான்காவது பிரசவத்தின்போது ஜன்னி வந்த செய்தி ஷாஜஹானின் காதுக்கு எட்டியதும் ஓடி வந்து அன்பு மனைவியின் தலையை தன் மடிமீது வைத்து கண்ணீர் வடித்தார்..!
மும்தாஜின் தலை அப்படியே சாய்ந்தது..! தன் காதல் மன்னனின் கரத்தை இறுக பற்றி பிடித்தபடி..!
கண் கவர்ந்த காதலியாய்.. கணவனுக்கு நல்ல மனைவியாய்... நண்பனாய்... மந்திரியாய்.. ராஜ தந்திரியாய்... நல்லாசிரியனாய் கடைசிவரை வாழ்ந்தவர் மும்தாஜ் பேகம்..! மனைவியிடம் ஆலோசனை செய்யாமல் எந்தமுடிவும் அவர் எடுப்பதில்லையாம்.
இரண்டு ஆண்டுகள் புத்தாடை, அலங்காரம் எதுவுமின்றி சோகத்தில் ஆழ்ந்த ஷாஜஹான்...”தான் காதலித்த தன்னையும்... அதற்கு நிகராக காதலித்த ஒரு பெண்ணுக்கு” அற்புதமாக ஒரு கல்லறை கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உருவானதுதான் தாஜ்மஹால்..!
யமுனை நதிக்கரையில் “ராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்”கின் தோட்டம் தேர்வு செய்யப்பட்டு 2 கோடி (அன்றைய மதிப்பு) கொடுத்தபோது நட்புக்குக்காக பணம் வாங்க மறுத்துவிட்டார். உடனே நான்கு அழகிய அரண்மனைகளை அவருக்கு பரிசாக கொடுத்தார் ஷாஜஹான்.
1632 இல் அடிக்கல் நாட்டப்பட்டது..!
வேரோனிய – வெனீஸ் நகர சிற்பி.
உஸ்தாத் இஷா அஃபாண்டி – துருக்கி கட்டிட கலைஞர்
உஸ்தாத் அஹமத் - லாகூர்
இவர்கள் மூன்றுபேரும் இணைத்து உருவாகிய வரைபடம் ஒவ்வொரு கட்டமும் காட்டப்பட்டு ஷாஜஹானின் பல மாற்றத்துடன் உருவானது..!
21 ஆண்டுகள் சென்று 1653-ஆம்ஆண்டு நுழைவு வாயிலில் இருந்து பார்க்கும்போது “இவ்வளவு சிறியதா..?” என தோன்றி அருகில் சென்று அண்ணாந்து பார்த்தல் கூரை தெரியாத அளவு “பிரமிப்பாக” இருக்கும் அதன் வாசல் திறக்கபட்டது.
நாடெங்கும் இருந்து பல மதகுருக்கள் அழைக்கப்பட்டு “தொடர்ந்து 40-நாட்கள் ஐவேளையும் இறைவணக்கம் நிறைவேற்றியவர் யாரோ அவர் வந்து வாசலை திறக்கலாம்..!” என்று ஷாஜஹான் அறிவிப்பு செய்ய யவரும் முன்வராததால் “நான் நிறைவேற்றி இருக்கிறேன் எனவே நானே திறக்கிறேன்” என்று கூறி அவரே திறந்து வைத்தார்..!
“இந்த கல்லறையை கற்பனை செய்தவர் எப்படி பூமியில் பிறந்தவராக இருக்க முடியும்..? சொர்க்கத்தில் இருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது இந்த வரை படம் என்பதற்கு சாட்சி தேவையா..!” என்று தாஜ்மகால் பற்றி குறிப்பு எழுதி வைத்தார் ஷாஜஹான்..!
விதி வசத்தால் வீட்டு சிறையில் இறுதி காலம் நோய்வாய்பட்டு ஷாஜஹானால் எழுந்து உட்கார முடியாமல் படுக்கையில் விழுந்த அந்த நிலையிலும் தாஜ்மஹாலை பார்க்க ஆசைப்பட்டு அதற்கு வசதியாக ஒரு பெரிய கண்ணாடி வைத்து கொடுக்கபட்டு தினமும் பார்த்து கொண்டு இருந்தார்.
22.01.1666 தனது எழுபத்தி நாலாவது வயதில் அருகில் இருந்த கண்ணாடியில் தாஜ்மஹாலை அப்படியே பார்த்து கொண்டு தன் உயிரை விட்டு இருந்தார்.. “மாமன்னர் ஷாஜஹான் சக்கரவர்த்தி..!”
“மனைவியை கல்யாணத்துக்கு பிறகும் காதலித்த காதலன் அவன் மட்டுமே..” அதற்கு சாட்சியே தலைநிமிர்ந்து நிற்கும் ஏழாவது அதிசயம் யாருக்கும் எட்டாத அதிசயம் இந்தியாவின் இந்த “தாஜ்மஹால்..!”
குறிப்பு:
"தாஜ்மஹாலே" என்ற தலைப்பில் பதித்த எனது முந்தைய பதிவை படித்துவிட்டு அறிஞர் திரு.KPP . Ayya அவர்கள் கேட்டதற்காக "தாஜ்மஹாலை" பற்றிய உண்மை குறிப்பை சுருக்கி பதித்து இருக்கிறேன்.!
இது வரலாற்று உண்மை..! ஷாஜஹானின் ஆட்சியை பற்றி இங்கே எழுதவில்லை..தாஜ்மகால் பற்றிய குறிப்பு மட்டுமே..!
என்றும் நட்புடன்
குமரிபையன்.