கிராமமும் கிராமம் சார்ந்த இடமும்

சிறிய நீரோடை
அதில் தள்ளாடிய படி பரிசல்....

பச்சை பசுமைதனை
தனக்கே ஆடையாய் நெய்து
போர்த்திகொண்ட மரங்கள்
பறவைகளின் நிரந்தர நிழல் குடையாய்....

மழை மேகங்கள் முகம் பார்த்து
கொள்ளும் ஏரி தண்ணீர்-அந்த
தண்ணீரில் நடைபயிலும் நாரைகள்...

சில விளையாட்டு மீன்கள்
துள்ளி குதித்தபடி குளத்தில்
அதை கைபிடிக்க கரணம் போட்டு
குதிக்கும் சிறிவர் பட்டாளம்...

வாய்க்கால் வரப்புகளில்
நண்டுகளின் புதிய வீடுகள்
நம்மை வரவேற்று காத்திருக்கும்
அதன் கடி கால்கள்.....

பறவைகளின் கூட்டம்
நெல்வயலினை சுற்றி வட்டமிட்டபடி
சில வண்ணத்து பூச்சிகளோ
மலர்களைவிட அழகாய் வண்ணங்களை
பூசி கொண்டு வலம் வந்தபடி....

தென்னை மர கீற்றுகள்
பட்ட பிறகும் பின்னி பிணைந்துகொண்டு
விவசாயி வீட்டின் மேல்கூரையாய்....

தானிய பொருள்களை பத்திரமாக
வைத்துகொள்ளும் மண்பாண்ட பாத்திரங்கள்....

நிலத்தோடு உழுது புரளும்
கலப்பையை தோளில் சுமந்துகொடு
கையிரண்டில் காளை மாட்டினை இழுத்துக்கொண்டு
கஞ்சி பானையை தலையில் சுமந்தபடி
விடியல் வேலையில் விவசாயின் நடை பயணம்
விவசாய நிலத்தை நோக்கி....

களையெடுக்கும் வேலையில்
கலைப்புதனை தீர்க்க
வாயில் வந்த வார்த்தைகளை
ராகமாக இழுத்து
எருது குளியாட்டும் முறைமாமனை
வம்புகிளுக்கும் பெண்ணகளின் நாட்டுப்புற பாடல்....

வயதுக்கு வந்த மாமன் மகளுக்கு
முறைமாமன் முறைசெய்ய
மாட்டுவண்டி பூட்டி
மைக்செட்டு கட்டி
ஊரையெல்லாம் கூட்டிகிட்டு
ஓலை குடிசைதனை கட்டிவிட்டு
ஒய்யாரமாய் வலம் வரும் முறைமாமன்....

கல்யாணம் வீட்டில் சந்தோசமாய்
பலர் இருக்க-சோகமாய்
பிறந்தவீட்டில் மணப்பெண்
தான் ஆசையாய் வளர்ந்த
ஆடு மாடு கோழி களுக்கு
கண்ணீரோடு விடைகொடுப்பால்
தன்னை வளர்த்த தாய்தந்தையர்க்கும் சேர்த்து....

ஊர்த்திருவிழா ஊர்கூடி
நடத்தும் பெரும்விழா
சொந்த பந்தங்கள் ஒருசேர
நிற்க முறை பெண்களுக்கு
மஞ்சள் பூசிவிளையாடும்
பண்பான திருவிழா....

இவை அனைத்தும் இப்போ எங்கே
போயின.?. நாகரிகம் என்னும் பேய்
இவையனைத்தயும் திண்ருவிட்டதோ.?..
இல்லை நாமே மறந்துவிட்டோமா.?...

நம் வளர்சியில் பெருமைதான்
இருந்தாலும் நமது அடையாளங்கள்
பல அடையாளம் தெரியாமல் போனது
இனியும் இதுதொடர்ந்தால்.!!!!!....

பதில் கூற முடியவில்லை
இன்னும் சில நாள் இவை அனைத்தும்
கதையாய் படிப்பார்கள் நாகரிக
உலகில் நம் குழந்தைகள்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (8-Jan-11, 2:01 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 952

மேலே