எனக்குள் நான்

முள்ளில் இருந்து மூச்சு விடுகின்றேன்
கல்லில் இருந்து கனவு காண்கின்றேன்
கண்ணீர் சிந்திக் கவிதை வடிக்கின்றேன்
எனக்குள் நான் என்னை இழக்கின்றேன்!

கவலைக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றேன்
கவனிப்போரை விரல் விட்டு எண்ணுகின்றேன்
கண்ணீர்த் துளிகளால் தினமும் குளிக்கின்றேன்
காலத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றேன்!

கவலையை மறக்கக் கவிதை எழுதுகின்றேன்
காரணம் தெரியாமல் கலங்கித் துடிக்கின்றேன்
புரியாத புதிராய் நான் மாறிப் போகின்றேன்
புரிந்து கொள்ளவே ஆசைப் படுகின்றேன்!

மனித வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்
மாயை அனைத்தும் உணர்ந்து கொள்கின்றேன்
மனதில் என்னைக் கதை வடிக்கின்றேன்
மௌன மொழியால் மொழி பெயர்க்கின்றேன்!

இதயத்தில் இருப்பதைச் சொல்ல நினைக்கின்றேன்
இடர்கள் வருவதால் அதையும் மறக்கின்றேன்
இன்பத்தைத் தேடித் தினமும் தவிக்கின்றேன்
இத்தனை துரமா எனப் பெருமூச்சு விடுகின்றேன்!

பாதையே தெரியாமல் பயணம் செய்கின்றேன்
பார்வை இன்றிப் பகலிலும் தடுமாறுகின்றேன்
பார்த்துப் பார்த்து ஏமாந்து போகின்றேன்
பயனே இல்லாமல் பரிதவித்து நிற்கின்றேன்!

அன்பு வேண்டுமெனக் கொஞ்சம் ஏங்குகின்றேன்
அதுவும் பஞ்சம் எனப் புழுவாத் துடிக்கின்றேன்
ஆறாத நெஞ்சாய் ஆகிப் போகின்றேன்
ஆகாரத்தையும் நஞ்சாய் அவ்வப்போது பார்க்கின்றேன்!

வாழ்க்கைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றேன்
வரும் காலத்தை நினைத்துத் தினமும் அழுகின்றேன்
விடைகளைக் காண ஓடி அலைகின்றேன்
வினாக்களுடன் மட்டும் என் காலத்தைக் களிக்கின்றேன்!

வேதனை வாழ்க்கையை நினைத்துப் பார்க்கின்றேன்
வெறுப்புடன் தினமும் வெந்து போகின்றேன்
சோதனைத் தடங்களை வாழ்க்கையில் அழிக்கின்றேன்
சாதனை படைக்கவே சந்தர்ப்பம் தேடுகின்றேன்!

பரிந்து பேச ஆசைப் படுகின்றேன்
பலரின் கேள்விக்குப் பதிலளிக்கத் துடிக்கின்றேன்
பாடுகளை மட்டும் தான் பார்த்து வாழ்கின்றேன்
பாரில் இருப்பதை நிச்சயம் வெறுக்கின்றேன்!

இதய அறையைத் தட்டிப் பார்க்கின்றேன்
இமயப் பொழுதில் மயங்கிக் கிடக்கின்றேன்
இல்லற வாழ்வை நினைத்துத் துடிக்கின்றேன்
இறக்கம் கேட்டு இறைவனிடம் கதறுகின்றேன்!

அநாதை என்பதால் அலைந்து திரிகின்றேன்
அல்லல் படுவோரை அணைத்திடத் துடிக்கின்றேன்
அன்னை மடிக்காய்த் தவம் இருக்கின்றேன்
அதுவும் இல்லாததால் அனலாய் எரிகின்றேன்!!!!!!!


உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம் !!!!!!!!!!!

எழுதியவர் : ரமணன் ஷியாஹ் (12-Oct-13, 4:24 pm)
சேர்த்தது : ரமணன் ஷியாஹ்
Tanglish : enakkul naan
பார்வை : 4614

மேலே