பொய்..மை..

நீல மை பேனாவில்
எழுதுகிறேன்.....
சிவப்பு மை சிந்துகிறது..
மாயமா?
கனவா?
நிஜமா?
குழம்புகிறது
சிந்தனை..
சாமியார்களின்
போட்டாவில் கொட்டும்
விபூதிபோல நடக்கும் அதிசயமா?
குழம்புகிறது என் மனம்..
மடச்சி எனும்
குரல் கேட்டது...
சுற்றி முற்றிப்
பார்த்தேன்
யாரும் இல்லை..
நான் தானடி
உன் தூரிகை பேசுகிறேன்...
இத்தனை நாள்
நீ எழுதிய
எழுத்துக்கு
நான் உடந்தையடி..
நிருபர் கையில் இருக்கிறேன்
என்ற மமதையில்
நீ எழுதும் எழுத்துக்கு
ஏவலாக இருந்தேன்.
தமிழில் எழுதும் உனக்கு
துணைவனாக இருந்தேன்..
நீ தனவந்தர்களின்
சொக்காய்ப் பைகளில்
சொக்கிப் போனபோது
உன் சொக்காய் பையில்
இருந்த எனக்கு
உன் மனசாட்சி பேசியது
என் செவிகளைப் பிளந்ததுண்டு..
என்னை பேச விடாமல்
தடுத்து நிறுத்திய
அவர்களின் பணம்,
இன்று எத்தனையோ
உண்மைகளைப்
பிணமாக்கிக்
கொண்டிருக்கிறது.
அந்த பிணத்தில் ஒன்று
தமிழ்ப் பள்ளி
மற்றொன்று
தமிழன்
என்னை
கத்தி முனையாகவா
பயன்படுத்தினாய்?
அவர்களின் இச்சைகளுக்கு
விலைபோன
நீ விற்ற விலைமாது....
உனக்கு இன்னும்
புரியவில்லையா?..
என் வாயில் உதிரும்
சிவப்பு உதிரங்கள்..