வெள்ளெழுத்து
வெள்ளெழுத்து
***********************
ஒட்டு வீட்டின் சிறிய திண்ணை. அதில் வயோதிகத் தளர்ச்சியுடன் ஒரு முதியவர். தியாகி சொக்கநாதன் அவர் பெயர். வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திரப் போராட்ட வீரராய் இருந்தவர் இன்று தன் மகனால் வீட்டிலிருந்து வெளியேறு என்று திண்ணையில் கிடத்தப்பட்டவர். இரு வேளை உணவு, காந்தி மண்டபத்திற்கு செல்லுதல் அவரின் அன்றாட வழக்கம். அன்றைய காலைப்பொழுது அவர் பேரன் ஓடி வந்து...
"தாத்தா இன்னிக்கு பேப்பர படிக்கவா ?" என்றான்.
வாஞ்சையுடன் பேரனை அணைத்துக் கொண்டு, "சாப்பிட்டியா...? பாடம் படிச்சியா? என்று கேட்டார். பிறகு மழலையில் பாடும் தன் பேரனை "வந்தே மாதரம்" பாடச் சொல்லி மகிழ்ந்தார்.
பேரன் பேப்பர் படிக்கத் தொடங்கினான். அவர் அவனை தடுத்து,
"வேணாம்ப்பா...இனிமே நீ பேப்பர் படிக்க வேண்டாம். தியாகம், வேள்வி,அஹிம்சை,பற்று இப்படியெல்லாம் பழகி கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சுயநலம்னு குட்டிச்சுவராகி போன அவலங்களையே கேட்டு கேட்டு காது கஷ்ட்டப்படுது. இதையெல்லாம் எழுதாம ஒரு பத்திரிக்கை வந்தா,அநேகமா அந்த பத்திரிக்கையோட பேர மட்டும் தான் போடா முடியும். ஆனா ஒன்னுடா பேராண்டி...நேத்து வெள்ளைக்காரன் வந்துட்டானேன்னு வருத்தப்பட்டேன். ஆனா இன்னிக்கு கண்ணுல வெள்ளழுத்து வந்ததால சந்தோஷப்படறேன், இந்த ரத்தச்சேதியெல்லாம் படிக்காம இருக்கமுடியுதேன்னு" என்று திண்ணையில் சாய்ந்து கொண்டார்.
அன்று ஆகஸ்டு-15 என்பதால் சிறிது நேரத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு கொடி ஏற்றச்செல்லவேண்டும். சுதந்திர தினம் மட்டுமே அனைவராலும் அறியப்படும், கௌரவிக்கப்படும் தியாகியருள் அவரும் ஒருவர்!
Posted by Ram Ananth