ஏல பேராண்டி சௌக்கியமா சீமாட்டி

ஏல பேராண்டி சௌக்கியமா சீமாட்டி
உன்ன பாக்கவேண்டி பொலம்புரண்டா உன்பாட்டி

பாசமான உன் பேரசொல்லி மகிழ்ந்து
பசுமாட்டில் பால்க் கரந்தன்

தூங்கி மகிழும் உன் மெய்யழக
தும்பிக்கிட்ட சொல்லி ரசிச்சன்

சோம்பல் முறிக்கும் உன் அழக
சோலை வண்டுகிட்ட பேசி மகிழ்ந்தன்

பாலகன் உன்ன பார்க்க தவிக்கும் தவிப்பை
பச்சைகிளியிடம் சொல்லி வச்சன்

தெள்ளமுது உன் குரல் கேட்ட மகிழ்ச்சிய
தென்றலையும் கூட்டிவந்து சொல்லி வச்சன்

பாடம் படிக்கும் உன் அழக பார்த்து ரசிச்சத
பட்டாம்பூச்சிகிட்ட பகிர்ந்துகிட்டன்

விளையாடும் உன் அழக அப்படியே
வெள்ளாட்டு காதுல விவரிச்சன்

குளிக்க குறும்பு செய்யும் உன் குணத்த
குயிலுகிட்ட சொல்லி ரசிச்சன்

சுத்தி சுத்தி ஓடிவரும் உன் சுறுசுறுப்ப
செவ்வெறும்புகிட்ட சொல்லி மகிழ்ந்தன்

கண்ணடிக்கும் உன் அழக கண்டுகளிச்சத
கம்மாகர மீனுகிட்ட கடலளவு சொல்லிவந்தன்

கோவத்தில் கோச்சிக்குற உன் அழக
கோழிகுஞ்சுகிட்ட கொஞ்சி மகிழ்ந்தன்

உன் ஞாபகங்கள் உள்ளிருந்து ஆட்சிசெய்ய
நிசமா உன்ன பாக்கனுன்னு கோடை

விடுமுறைய சீக்கிரமா விட சொல்லி நம்ம கோணங்கிஅய்யாசாமிக்கு வேண்டிக்கிட்டன்

சீக்கிரமா வந்துவிடு என் ராசா உன்ன பாத்து மகிழவே வச்சிருக்கன் என் உசுர பெருசா
வரும் பாத பாத்து காத்துருக்கன் உன் ஆத்தா ..

... கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (31-Oct-13, 12:07 pm)
பார்வை : 174

மேலே