அதிகாலை வானம்
வைகறைத் தென்றலே
விரைந்து போ!
சேதி கேட்டு வா!
யார்? கிழக்கு வாசலில்
தீப்பந்தம் ஏந்தி
வருவதென்று!
யாரது நீலவானத்தில்
நெருப்பை அள்ளிப்
போட்டது!
வானமே! உன்
சிவப்பு முந்தானையை
யார் காயபோட்டது!
வைகறைத் தென்றலே
விரைந்து போ!
சேதி கேட்டு வா!
வானத்தின் மீது
மஞ்சத்தண்ணி ஊற்றிய
மங்கை யாரென்று?
அந்த நிலாப்பெண்
கை விட்டு விட்டதால்
காவி உடையணிந்து
துறவி ஆனாயோ!
யாரோ பருவமகள்
முகம் கழுவி
இருக்கிறாள்!
வைகறைத் தென்றலே
விரைந்து போ!
சேதி கேட்டு வா!
குங்குமத்தை
கொட்டியது யாரென்று?
எவனோ கொல்லன் ஒருவன்
வானத்தை வளைக்க
பழுக்கக் காய்ச்சி இருக்கிறான்!
எந்த தேசத்து ராஜகுமாரி
உலாவரப் போகிறான்?
இந்த பட்டாடைவிரிப்பு!
வைகறைத் தென்றலே
விரைந்து போ!
சேதி கேட்டு வா!
வானத்திலும் யுத்தம்
நடக்கிறதா என்று?
நீலவானமே
உன் விழி சிவக்காமல்
எங்களுக்கு
வெளிச்சம் இல்லை!
பூமிப்பெண்
ஆதவனைப் பிரசவிக்கிறாளோ
சிந்திக் கிடக்கிறதே இரத்தம்!
வைகறைத் தென்றலே
விரைந்து வா!
சேதி என்ன கூறு
“ஒவ்வொரு விடியலும்
இரத்தம் சிந்தித்தானே
பெற்றோம்”