நான் கூத்தாடி

நீந்தித்திரிந்திரிந்தேன் நீர்க்குடத்திலே
இன்று நிழல் கொண்ட நிஜமானேன்
சுழலும் சூழ்ச்சியிலே.

அசைவ ஆச்சிரியங்கள் பல
என்னுள். இருப்பினும்,
ஏதும் அறியா ஏழை சிசுவாய்
அன்னை மடியினிலே.

பால் மனம் எனக்கு
தாய்ப்பால் இல்லையே!
இது என்ன கணக்கு?
பசித்த நேரமெல்லாம்
மாராப்பை விளக்கியும்,
பலமுறை தாய்ப்பாலின் சுவை
உப்பு கருத்திடுவது ஏனோ?
நான் புசித்தது அவள் கண்ணீர் கலந்த
வியர்வை துளிகளைத்தானோ!

அடி வயிறு வலிக்குதே
என் நாடி நரம்பெல்லாம் சுருங்குதே,
ஆகாரம் தருவியோ?
உன்னை அம்மான்னு கூப்பிட
இல்லை அழவிட்டு பார்ப்பியோ
நான் ஆகாயம் போய்சேர்திட.
போராடி பெத்தியேம்மா இப்போ
போகவிட பார்ப்பியோ?
என் அழுகையின் அர்த்தம்
புரிந்தது அவளுக்கு
இதோ அவள் எனக்கு சொன்ன அவலங்கள்...

என் மடியில் மலர்ந்த மகரந்தமே
உன்னை வாடவிட்டு பார்க்கவா
வயிற்றில் சுமந்தேன்.
உண்ண உணவில்லையே
உனக்கு தாய்ப்பால் தர வழி இல்லையே.
பால் சுவைக்கும் உன் நாவு
என் கண்ணீரை சுவைக்குதடா,
ஒன்றுக்கும் உதவா கண்ணீர்
பாலாக மாறுமென்றால்
தினம் தினம் பசியில்வாட காத்திருப்பேனடா.

கூத்தாடி குடும்பமடா இது,
குழந்தைக்கு பால்வாங்க வழி இல்லா
வக்கத்த குடும்பமடா.
உன் அப்பன் ராசா வேசங்கட்டி ரொம்ப நாளாச்சி
இந்த மனுசங்க கூத்தையே மறந்து பல வருசமாச்சி

உன் வயிறோ ஒட்டியிருக்கு
என் மார்போ வத்தியிருக்கு
கழுத்திலே தாலி மட்டும் மிச்சமிருக்கு.
தாலி மட்டும் மிச்சமிருக்கு!
ஆமாம் தாலி மட்டும் மிச்சமிருக்கு...
தாலியை விற்றேன்
உன் தேவைகளை வாங்கினேன்
வீடுவந்து பார்க்கிறேன்
தாளிக்கயிரையும் கேட்டுவிட்டான்
அந்த கடங்கார கடவுள்.

உன் அப்பன் பல வேசங்கட்டி பாத்துருக்கேன்
இந்த வேசத்த பார்த்துமா நான் இன்னும் இருக்கேன்
புராணத்தை போராடி சொன்ன இந்தக்கூத்தாடி
இப்போ பரலோகம் போனானே ஏனடி.

திரையுல ஆடுற கூத்தாடிகளுக்கு
தேர்மீது பவனியாம்
தரையுல ஆடுற கூத்தாடிகளுக்கு
ஏனோ இந்த மூங்கில் பவனி?
அரிதாரத்தை முதலில் பூசியது
நம் குலமடா
இன்று அனாதையாய் போறதை
பார்க்கக்கூட ஆள் இல்லையடா.
கூத்தாடி குடும்பம் இது
காத்தாடியாய் பறந்தாலும்
உன்னை போராடி வளர்ப்பேனடா
நான் கூத்தாடி

எழுதியவர் : ரா. ராஜநாராயணன் (3-Nov-13, 3:36 pm)
Tanglish : naan koothadi
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே