ஐக்கிய இந்து ஆலயம்

ஐக்கிய இந்து ஆலயம்
177, கிழக்கு கொவினா புலவட், கொவினா, கலிபோர்னியா - 91722.தொலைபேசி எண்கள் : 626 915 3054 / 323 327 8903.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

சென்னையிலிருந்து அமெரிக்காவில் கிழக்கு கொவினாவில் வசிக்கும் என் மகன் வீட்டிற்கு வந்த நான் ஒரு மாதத்திற்கு முன் ஐக்கிய இந்து ஆலயத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் முழு முதற் கடவுளான விநாயகப்பெருமானை கண்குளிர காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

என்னே விந்தை! ஓரிரு வாரங்களில் மிகப் பெரிய அதிசயம் நிகழ்ந்தது. பல ஆண்டுகளாக என்னை எழுத்துப் பணியில் ஈடுபடுமாறு என் குருநாதர், முனைவர்.இரகுராமன் அவர்கள் பெருமளவில் ஊக்கமளித்தும் இந்நாள்வரை அதற்கான முயற்சியில் ஈடுபடும் தருணம் கிடைக்காத என்னை எழுத்துப்பணிக் களத்தில் இறக்கிவிட்டார் ஒப்பில்லா விநாயகமூர்த்தி.

ஞாயிற்றுக்கிழமை அங்கு வரும் சிறார்களுக்கு தமிழ் கற்பிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.நான் குழந்தைகளுக்காக சின்ன சின்னப் பாடல்களை இறை அருளால் எழுதி வந்து கற்பித்த முறையினைக் கண்ணுற்றக் கோயில் நிர்வாகிகள் என்னை அணுகி இக்கோயில் பற்றிய வர்ணனையை இணையதளத்தில் இடம் பெறச் செய்வதற்கு எழுதித்தருமாறுப் பணித்தனர். இதனைச் செவி மடுத்த நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். உடனே ஒப்புக் கொண்டேன். இது எனது முதல் கன்னி முயற்சி.

"இறைவா! உன்னைப்பற்றி எழுதும்
பெரும் பேற்றினை
எனக்களித்தமைக்கு கோடி கோடி
நன்றிமலர்களை
உன்தாள் வணங்கி உனது பாதார
விந்தங்களில்
ஆத்மார்த்தமாக அர்ப்பணம் செய்கிறேன்.
என் எண்ணங்களை
வடிக்க உறுதுணையாய் நின்று அருள் புரிய
வேண்டும்"
என அவன் சந்நிதானத்தில் நெக்குருக வேண்டிக் கொண்டு, தமிழ்க்கடவுள் முருகன், என் குருநாதர் மற்றும் நிர்வாகிகள் ஆசிகளுடன் தமிழ்த தாய்க்கு என் வணக்கங்களை அர்பபணித்துவிட்டு இக்கட்டுரையைத் தொடர்கிறேன்.

"கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."

எனும் வள்ளுவப் பெருந்தகையார் வாக்கிற்கு அடிபணிந்து தாம் கற்ற கல்விச் செல்வத்தை பல மழலைச் செல்வங்களின் உள்ளத்தில் நிறுத்தி, அறிவாற்றல் எனும் சுடரை ஒளிரச் செய்ய, பள்ளியை நிறுவி நற்தொண்டு ஆற்றி வரும் திருமதி & திரு. மகேந்திர இராசா தம்பதியினர், ஆன்மீக நெறியிலும் பெரும் ஈடுபாடு கொண்டு பல வகைகளிலும் தொண்டாற்றி வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

அவர்களின் பெரும் முயற்சியினாலும் இறை அருளாலும் உருவானதே "ஐக்கிய இந்து ஆலயம்." இககோயிலினுள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை மனதில் இனம் புரியாத மகிழ்வலைகளும் அமைதியும் தரும் வண்ணம் பரிபூரண தெய்வ கடாட்சததுடனும் உடலுக்குப புத்துணர்வூட்டும் அதிர்வலைகள் நிறைந்த மிக உன்னதமான சக்தி பீடமாக. இக்கோயில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது எனின் அது எள்ளளவும் மிகை ஆகாது, சொர்க்கமாய் விளங்கும் இத்தளத்தினின்று வெளியே வந்த பின்பும் வீடு வரை இறையருள் தொடர்ந்து வருவதோடு மட்டுமன்றி நம் இதயத்தில் நீங்காது நிலைபெற்று உயிரோடு உயிராகக் கலந்து விடுகிறது என ஐயமின்றிக் கூறலாம்.

கோயிலின் அம்சம் மிகுந்த கூடத்தின் மேற்குத திசையில் தகதகவென ஒளிக்கதிர்களை வெளிப்படுத்திய வண்ணம் வலம்புரியில் கலசம் ஏந்திய விநாயகர் மண்டபத்தினுள் வெங்கலச்சிலையாகக் கொலுவிருக்கிறார்.அவரது இடப்புறக் காலடியில் அவரது வாகனமாகிய மூஞ்சூறு அவருக்கு அபிஷேகம் செய்விக்கும் பொருட்களை சேகரிக்கக் கையில் ஒரு சொம்பினை ஏந்தியபடி அமர்ந்துள்ளார். விநாயகருக்கு முன்னால வலப்புறம் முருகப்பெருமான் துணைவியாருடன் கண்கொளாக் காட்சித தர, இடப்புறம் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முத்தேவிகளும் சாந்த ஸ்வரூபத்துடன் அமர்ந்திருக்க, சிவலிங்கம் அவர்களுக்கு முன்புறத்தில் வீற்றிருக்க அனைத்துத தெய்வங்களும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்முகத்துடன் குறை ஒன்றும் இல்லாத வண்ணம் அருள் பாலித்து வருகின்றனர்.
முனைவர்.வெ.வசந்தா.
ஏப்ரல் 2009.

எழுதியவர் : முனைவர்.வெ.வசந்தா. (5-Nov-13, 6:28 pm)
சேர்த்தது : vasantham52
பார்வை : 133

மேலே