ரமேஷ் என்கிற ஆட்டு மூக்கன்
அவன்
பேசிக் கொண்டிருந்தான்
யாரிடம் பேசுகிறான்
என்ன பேசுகிறான்
எதுவும் புரியவில்லை.....
குளிர்கால
காலைப் பனிக்குள்
ஒளிந்து கொள்ள
முற்படுவதாகவே
இருந்தது அவனின்
இருத்தல்..
ஆட்டைப் போல
அடிக்கடி கத்தும்
அவனின் செயலும்
முக பாவமும்
தவம் செய்யும்
மரத்தடி நிழலாய்
தெரியும் எனக்கு......
கவனம் அற்றவன்
கள்ளம் அற்றவன்....
தொடுவானம் இதோ.....
தொட்டு விடுவான் போலத்தான்,
வீரனடையில்
பாவமாய் இருப்பான்....
அவன் கனவுகளை
எட்டி பார்க்க கூட
எவருக்கும் தோன்றவில்லை
என்னை உட்பட....
அவன் பேசியது
எவருக்கும் கேட்காத
பொழுதொன்றில்
மௌனமாய் அழுதிருப்பான்....
நிம்மதி தந்த
தூக்கு கயிறு
இன்று கத்திக் கொண்டிருக்கிறது.....
உருகாத
காலைப் பனிக்குள்
ஒளிந்து கொண்ட
அவன்,
எல்லாருக்குமானவன் ......
இனி,
அவன் கடந்த
பாதைகளில்
யாருமற்ற ஆடு ஒன்று
அனாதையாய் திரியும்.......