செம்மணி
ஆர்ப்பரிப்பின்றி
அமைதியாக நீண்டு கிடக்கும்
செம்மணி வெளிப்பரப்பின்
ஏரிக்கரையில்
ஆரவாரம் இன்றி
ஒற்றை கால் தூக்கி
தவம் இருக்கும்
நாரைகள்.
அந்தி நேர மஞ்சள்
வெயில் பட்டுத்தெறிக்க
பளிங்குப் படிகங்களாய்
ஒளிவீசும் தெருவோர
உப்பளக் குவியல்கள்.
உயரப் பறக்கும்
நீர்க்காகங்கள்
ஏரியில் மீன் பிடிக்கும்
வெளியூர் கொக்குகளை
ஏக்கமாய் பார்க்கும்.
எருக்கலைப் பூக்களை
தழுவிச்செல்லும்
உவர்த்தரைக் காற்று
பூவரசம் சருகுகளை
புழுதியோடு அள்ளி வீசும்.
உலங்கு வானூர்திகளும்
யுத்த விமானக்களும்
கொட்டிய குண்டுகளால்
தலையிழந்த நெட்டைப்
பனைமரங்களின் வைரத்தை
துளை போடும்
மரங்கொத்திப் பறவைகளின்
ஓசை கேட்டு
சப்பாத்திக் கள்ளிகளின்
பூக்களை வட்டமிடும்
வண்டுகள் விரண்டு ஓடும்
தூரத்தில் ஓலமாய் கேட்கும்
ஒற்றைக் குருவியின்
குரலில் அவலமாய்
மரணித்து புதைகுழிக்குள்
அடங்கிய அப்பாவி
உயிர்களின் இறுதி மூச்சு
எதிரொலிக்க
கலைகிறது என் உறக்கம்.
கனவு தான் என்றாலும்
காலத்தால் அழியாத
அந்த கொடிய நாட்களின் ஞாபகங்கள்
கால்களோடு பயணிக்கும்
நாம் இருக்கும் நாள் வரைக்கும்.