விவேகசிந்தாமணி

படித்ததில் பிடித்தது:- விவேகசிந்தாமணி

பாடல்: -
ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.

ஆபத்துக்கு உதவாப் பி்ள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.

அருஞ்சொற்பொருள்
அன்னம்- உணவு; தாபத்தை- தாகத்தை; தீரா- தீர்க்காத; வேந்தன்- அரசன்; சீடன்- மாணாக்கன்; பயனிலை-பயன்+இல்லை.

கருத்துரை:-
ஆபத்தில் உதவிசெய்யாத பிள்ளையால் பயனில்லை. மிகுந்த பசியில் தவிக்கும்போது உதவாத உணவினால் ஒருபயனுமில்லை. தாகமுற்று இருக்கும்போது அதனைத் தவிர்க்க உதவாத தண்ணீரால் என்னபயன்? ஒருபயனுமில்லை. வறுமையை அறியாத, அறிந்து அதற்கேற்றபடி ஒழுகாத - நடக்காத- பெண்களால் பயன் இல்லை. கோபத்தை அடக்காத அரசனாலும் பயனில்லை. குருவின்மொழியை -ஆசிரியரின் சொல்லை- கேளாத மாணாக்கனாலும் ஒருபயனுமில்லை. அதுபோலத் தன்னுள் முழுகுவாரின் பாவத்தைப்போக்காத தீர்த்தத்தினாலும் பயனில்லை. இவ்வாறாக இந்த ஏழும் பயனில்லை என்கின்றார்.

விளக்கம்:-
ஆபத்துக்காலத்தில் தன்பிள்ளையே தனக்கு உதவாவிட்டால் பின் யார் உதவுவார்கள், எனவே ஆபத்துக்காலத்தில் உதவாத பிள்ளையால் ஒருபயனும் இல்லை என்பதாம். பசியைத் தீர்த்துக்கொள்ளத்தான் உணவு உண்கின்றோம் ஆனால், அப்பசியைப் போக்காத உணவால் என்னபயன்? தாகத்தைப் போக்காத தண்ணீரால் என்னபயன்? வீட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக மனைவி, குடும்பத்தின் வறுமையை அறிந்து அதற்கேற்பச் செலவு செய்யவேண்டும். குடும்பத்தின் நிலை அறியாது ஆடம்பரமான வீண்செலவுகளைச் செய்பவளாக இருந்தால் அப்படிப்பட்ட பெண்களால் அந்தக் குடும்பத்திற்கு என்ன பயன்? அரசன் எல்லா அதிகாரங்களைப்பெற்றிருந்தாலும், அவன் கோபத்தைஅடக்கக் கற்றிருக்கவேண்டும். அவன் கோபத்தை அடக்காவிட்டால் அவன் கீழ் இருப்பவர்க்ளுக்குத் துன்பந்தான். எனவே கோபத்தை அடக்காத வேந்தனும் வீணே. குருவின் உபதேசத்தின்படி சீடன் -மாணாக்கன்- நடந்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லையெனில், அச்சீடன் வீணானவன்தான். தீர்த்தம் ஆடுவது பாவத்தைப் போக்கிக்கொள்ளத்தான், ஆனால் அந்தத் தீர்த்தத்தில் ஆடியும் பாவம் தீரவில்லையென்றால், தீர்த்தமே வீண்தான். இவ்வாறு பிள்ளைமுதல் தீர்த்தம் ஈறாக உள்ள ஏழுபொருள்கள் இருந்தும் பயனில்லை என்கின்றார்.

எழுதியவர் : விவேகசிந்தாமணி (20-Nov-13, 4:30 pm)
பார்வை : 309

மேலே