இது காதல் பற்றிய குறிப்பு -02

உனது புன்னகைகளால்
என்னை வரவேற்கவேண்டிய அசியம் ஏற்படவில்லை
நாம் காதலை உணர்ந்த காலங்களில்
மௌனங்களே போதுமானவைகளாகின

கிராமத்து குளக்கரையில்
அருகருகே அமர்ந்து கச்சான் கொறித்தோம்
கோதுகளை தோணிகளாக நீரில் விட்டு

தூசுகளற்ற நீருக்குள்
விழுந்து கிடக்கின்றன உனது பழிங்குக் கண்கள்
இறங்கிவிட்டேன்
நீ உணரவைத்த காதலின் அர்த்தங்களால்

மனம்
வானில் வரிசை வரிசையாக பறக்கும்
பறவைகளோடு

சந்தோசங்களை தலையில் ஊற்றினாய்
தேனாய்
நான்தான் உணர்வு என்பதனை
எனது அறையில் வெட்டி பங்கீடு செய்துவைத்திருந்தேன்
அதுவெல்லாம்
சுவரின் உரோமங்களில் சிந்தி
குதித்து மகிழும்

அதிகாலையில்
தேநீருக்கு முன் முத்தமிடு

உன் உறவொன்றினை மெல்லிய குரலொன்றினால் சொல்லி
உனது மேலுதட்டு வியர்வைத் துளிகளின் பின்புறம்
சிறைப்பட்டிருக்கும் என் முகவரிகளில்
சரியாக எழுதுகிறேன்
"பெண் நோய் தீர்க்கும் மருந்து" என்று

அழகான உன் புதிய பாதணிகளால்
கடலுக்கடியில் உறுண்டோடுகிற மலையினை தடுத்து நிறுத்தி
"மலையே எங்கு செல்கிறீர்?
அவள் முத்தமிட்ட கன்னத்தை கல்லாக்குங்கள்
அவள் பார்வைகளால் இரவுப் பலகையில் முட்டி உடைகிறேன் நான்
என்னை உங்கள் வயிற்றுக்குள் களஞ்சியப்படுத்துங்கள்"

பட்டை பட்டையாக கிளம்பும் மலைகளும்
எனை உண்பதால் நெருப்பு என

சுதி பிரளுவதையும்
நரம்புகள் அசைவதையும்
சதை சுடுவதையும்
சரி சரி என்று கலங்கினேன்

கால்களைக் கடித்து சிரிப்பூட்டின
சமையலுக்கு வாங்கிவந்த உயிர் மீன்கள்
இதனைத்தான் துயரென்பேன்
இதனைத்தான் சுகமென்பேன்

எழுதியவர் : பைசால் இலங்கை (24-Jan-11, 1:21 am)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 474

மேலே