பெண்ணிலக்கணம் கற்பிக்கிறாள் கற்பனைப் பெண்ணொருத்தி
மலர்களால் வடிக்கப்பட்ட சிலையா நீ
பூமிக்கு அனுப்பப்பட்ட அறுபத்தைந்தாம் கலையா நீ!
தோகை கொண்ட பெண் மயிலே
உனைக் கண்ட விழி சிலிர்க்குதடி !
எனக்குள் வண்ணத் தோகை விரிக்கின்றாய்
உனக்காய் எண்ணச்சிறகை உதிர்க்கின்றாய் !
என்ன விழி உந்தன் விழி
சொல்ல மொழி மறந்ததடி !
நாணம் என்ன வெட்கம் என்ன
உன்னில் கண்ட நொடி சொர்க்கமடி !
அடக்கம் அதை உன்னில் கண்டு
அடங்க மறுக்கிறது என் இமை இரண்டு !
உன் முத்துப் புன்னகை பார்க்கையிலே
உலகின் மொத்தப் பொன்நகை தோற்குதடி !
நீ நடந்து வரும் பேரழகு
அசைந்து வரும் தங்கத் தேரழகு !
அன்பும் பண்பும் அணிந்து வருகிறாய்
என் ஐம்புலன்களையும் கவர்ந்து செல்கிறாய் !
கற்ற இலக்கணம் கரைய வைக்கிறாய்
உந்தன் பெண்ணிலக்கணத்தில் உறைய வைக்கிறாய் !
எண்ணம் அதை எனக்குள் விட்டு
அன்னம் நீ எங்கே உள்ளாய் !