தெரிந்தே தொலைத்த புதையல்கள்

வெற்று காகிதத்தில்
அகத்தையும் முகத்தையும்
பார்த்து எத்தனை நாளாயிற்று

எழுத்தினை அறியாத என் அன்னை
அவள் கையால்
எனக்கு கடிதங்கள் எழுதும்போது
எத்தனை அழகு
என் அன்னையும் தமிழும்

கடிதங்களுக்காக காத்திருந்து
கண்ணீர்மல்க கரைந்ததுண்டா

இடுக்கி இடுக்கி எழுதி
இடத்தை மிச்சப்படுத்தி
இறுதி இரண்டு வரிகள் - கடிதம் ஓட்டும்
இடத்தில் பார்த்ததுண்டா

எத்தனை கடிதங்களில்
விட்டு விட்டு எழுதிய மை
அவர்களின் வறுமையை கூறியுள்ளது

சத்தமில்லாமல் எத்தனை காதலர்களுக்கு
இந்த கடிதங்கள்-
சரணத்தை காதலனிடமும் -
பல்லவியை காதலியிடமும்
பாடியது.

திருமணம்பின் மகளின் நலனையும்
தமக்கையின் வாழ்வையும்
ஒருசேரவே சொன்னதுண்டு

தலைபிரசவத்திற்காக பிரிந்த
தலைவனையும் தலைவியையும்
வாரம் ஒருமுறையேனும் சேர்த்த பெருமை
கடித்ததுக்கே உண்டு

விழிகள் கொண்ட பார்வையில்
விலகி சொந்தங்கள் இருந்தாலும்
மனம் கொண்ட அன்பினால்
மறவாது இருந்தன உள்ளங்கள்

தொலைபேசியும், வலைதளமும்
உலகத்தை கையடக்கத்தில் வைத்தாலும்
உள்ளத்தை என்னமோ தூரவிரட்டிவிட்டது.

தொலைந்த உள்ளன்பை காணவேண்டுமா
முடிந்தால் உங்கள் வீட்டிலுள்ள ஒருகடிதத்தையாவது
தேடி படித்துபாருங்கள்

நீங்கள் அறியாமலே
ஒரு துளி கண்ணீர்
உங்கள் உள்ளத்திலோ - அல்லது
அந்த கடிதத்திலோ நிச்சயம் உண்டு

எழுதியவர் : மதனா (28-Nov-13, 10:23 pm)
பார்வை : 66

மேலே