என் கண்ணாடியில் வேறோர் முகம்

நிறப்பூச்சுக்களை வாங்கி விட்டு
சுவர் தேடி அலைகிறேன்...
முழுவட்ட நிலவுக்குத்தான் தெரியும்
அந்த சுவர் ஆகாயம் என்று...

நேர்வழி என்றுரைத்துவிட்டு
கற்களுக்குள் கால் மிதித்தேன்...
என் மனதுக்குத்தான் தெரியும்
அது புறமுதுகென்று...

கையால் செய்ய நினைத்ததை
கனவுகளில் மட்டும் முடிக்கிறேன்...
வார்த்தைகளில் வாய்மை பேசி விட்டு
எண்ணங்களில் வரம்பைத் தாண்டுகிறேன்...

உடல் இங்கு நானாக,
உள்ளம் யாரோ என்றாக,
ஜடம் மட்டும் நான் கொண்டு,
பிணம் போலே வாழ்கின்றேன்...

ஊருக்கு நான் தான் காவல்காரன்,
என்னைச்சுற்றித்தான் காவல் அரண்கள்...
பல பேர் எனைப் பார்த்து மாறினர்,
எனக்குத்தான் அப்படி யாரும் கிடைக்கவில்லை...

கை நரம்புகளைப் போல்
காட்டிக் கொள்கிறேன்...
விழி நரம்புகளாய்
மூடி மறைகிறேன்...

உண்ணாவிரதம் பற்றி ஊருக்கு உபதேசம்,
என் வீட்டில் இன்று இறைச்சிக்கறி...
என் மனது உண்மை சொல்கிறது,
வாய் தான் அதை பொய்யாக்குகிறது...

வயிற்றுப் பிழைப்புக்கு என்றாலும்,
வட்டி தான் உள்ளே போகிறது...
தான தர்மம் செய்தாலும்,
அடுத்தவன் காசாய்த்தான் இருக்கிறது...

என் வாழ்க்கை என் தவறுகள்,
என் காகிதத்தில் உரைத்து விட்டேன்...
யார் வாழ்வும் பின் நோக்கின்
காகிதங்கள் தேட வேண்டும்...

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (4-Dec-13, 8:54 am)
பார்வை : 81

மேலே