பெயரிலே
ஏலய் மாடா...
எம்புட்டு நேரமா தேடரேன் வீட்டுல கொஞ்சம் வேலை இருக்குடா வந்து என்னன்னு எட்டிப் பாத்துரு.
""""சரிங்க சாமி""""
மாடசாமி பதிலுரைத்தான்.
உசந்த சாதிக்காரங்க தாழ்ந்த சாதிக்கரங்க பேருல சாமி இருந்தாக்கூட சொல்லமாட்டாங்க. மொழுக்கட்டையா மாடான்னு தான் கூப்பிடுவாக நொந்தபடி பண்ணையார் வீட்டுக்கு நடக்கலானான்.
அம்மா, மாடசாமி வந்திருக்கேன்
அம்மா மாடசாமி வந்திருக்கேன்
இரண்டாவது முறையாக கூப்பிட்டதற்கு பதில் இப்படித்தான் வந்தது.
இருப்பா கொஞ்சம் நேரம் காத்திருந்தா கீரிடமா கொறஞ்சிடும், அடுப்புல வேலயா இருக்கன்ல
பத்து பதினைந்து நிமிடம் கழித்து வந்த பண்ணையார் மனைவி மாட்டுத் தொழுவத்த சுத்தம் செய்ய சொன்னதுல இருந்து அடுக்கடுக்கடுக்கா வேலை சொல்லிக்கொண்டே இருந்தது மாடசாமியும் சளைக்காம வேலை செய்து கொண்டேயிருந்தான்.
அம்மா… பூரா வேலையையும் முடிச்சிட்டேன்…… அப்ப… நான் கிளம்பட்டுமா?
காபி வேணுமா? உன் தம்ளர எடுத்துட்டுவா? பண்ணையார் மனைவி
தலையை சொறிந்துகொண்டே மாட்டுக் கொட்டகை இடுக்குக்குள்ளே இருந்த தம்ளரை எடுத்து நீட்டினான்.
தம்ளரின் விளிம்பு தன்னிடம் ஒட்டிவிடாமல் மிகவும் கவனமாக காபியை ஊத்திக்கொடுத்தாள் பண்ணையார் மனைவி.
அம்மா வாரேன்மா.
சரிப்பா... ஆமா உம் பொண்டாட்டி எப்படி இருக்கா வவுத்துவலி எதும் வந்துச்சா?
நல்லாருக்காம்மா, எப்படியும் இன்னும் ரண்டு நாள்ல இருக்கும்னு சொன்னாகம்மா நான் வரட்டாம்மா?
சரி சரி நேரங்காலத்தோட வீடுபோய் சேரு..
அப்பறம் காலைல தோட்டத்தில கொஞ்சம் வேலை இருக்கு ஐயாவ கேட்டுக்கோ.
சரிம்மா ... வீட்டை நோக்கி நடக்கலானான் மாடசாமி.
ஏலய் மாடசாமி ஏலய் இந்த கொஞ்சம் நில்லுல.. கத்திக்கொண்டே ஓடிவந்தான் மாடசாமியின் அண்ணன் மூக்கன்.
என்ன இம்முட்டு வேகமாக ஓடிவர்றேரு..
ஏலய் உம்பொண்டாட்டிக்கு வயித்து வலி வந்துடுச்சு சீக்கிரம் வீட்டுக்கு போ நான் போய் வயித்தியரம்மாவ கூட்டாந்துரேன்.
சரின்னே பார்த்து போ.
வேகவேகமாய் ஓடி, ஓடி வீட்டை அடைந்தான் மாடசாமி.
……….
எண்ணே ஆம்பளப் பிள்ளை பிறந்திருக்கு
என்று கத்திக்கொண்டு ஓடிவந்தவனை மடக்கினான் மூக்கன்
ஏலய் நம்ம பரம்பரையிலயே இதுதாண்டா முதல் ஆம்பளப்பிள்ளை
நம்ம அய்யா பேரு முனியசாமின்னு உட்டுருடா என்றான்.
இல்ல அண்ணன் நம்ம பொழப்பு நம்ம பிள்ளைகளுக்கு வேண்டாம் அதுகளாது நல்ல பேரோடோ இருக்கட்டும் என்றான் மாடசாமி.
என்னடா இப்புடி சொல்லிபுட்ட - இது மூக்கன்
ஆமண்ண அதுக பேரையும் பாதியாத்தாம் கூப்பிடுவாக என்றான் மாடசாமி
அப்ப என்னடா பண்ணப்போற?
எப்படி கூப்பிட்டாலும் எம்புள்ளைய மருவாதையாத்தான் கூப்பிடனும்..
ஏலய் மாடா? என்னடா ஆம்பளப்புள்ள பொறந்துருக்காமுள்ள எப்படியிருக்கு என்றபடியே வந்தார் பண்ணையார்.
ஆமாசாமி இப்பத்தான் உங்க தயவால நல்லாருக்கு சாமி
ஆங் அப்புறம் இதுக்கு என்னபேரு வெச்சிருக்க என வினவினார் பண்ணையார்
மாடசாமி வெடுக்கென்று சொன்னான்
அய்யா துரை
-