மயங்குகிறாள் ஒரு மாது

மயங்குகிறாள் ஒரு மாது
அவள் வாழ்வு நானான போது,
அப்புனிதவளின் பூ மனது
என்மீது படர்வதில் தவறேது...
கண்ணசைவிற்கு காத்திருக்கும்
காளையரை புறம் தள்ளி
காதல் அறத்தோடு இந்த
மனித மரத்தின் மீது
சாய்கிறாள் அம்மாது...
படிப்பறிவில்லா இப்பாவலனுக்கு
தான் காதலித்து படும் பாட்டை
காதல் பாடல்கள் கேட்டு
இக்கல்லை கனிவாக கனியாக்க
கரைகிறாள் கன்னியொருத்தி....
தாய்ப்பாலினும் பரிசுத்தமான அப்பாவை
இப்பரதேசியின் மீது பித்தமாக
இருப்பதை நினைந்தால் சற்று
என் சித்தம் கலங்கத் தான் செய்கிறது...
அவளுக்கு வாகை சூட
இவ்வையகம் காத்திருக்க,
இம்மடையனுடன் மாலை சூட
மயங்குகிறாள் மடச்சிறுக்கி....
புத்திமட்ட பொட்டாக்கி
நெத்தியிலிட்டு வருபவளே,
அன்பு சொற்கள் ஆயிரம்
இக்கஞ்சனுக்கும் தருபவளே...,
அகிம்சை எனும் அறமறியா
அரகிருக்கன் நானமம்மா...
இச்சாரப் பாம்பை சடையோடு
சேர்த்து பின்ன சாஞ்சு கெடக்குற நாணமா...
மழையில்லா மண்ணிடுக்கில்
மக்கி வளர்ச்சியற்று கெடக்கும்
விடையறியா விதை நானம்மா,
உன் பொன்னிற மேனிக்குள்
பூத்து வளர்ந்த செந்நிற
இதயத்தை சல்லடையாக்கும்
இச்சண்டாளன் வேணுமா....!