நினைவுச் சுழல்

ஒரு சமயம் உன் கனவிற்குள்
பிரவேசிக்க நேர்ந்தது..

வண்ணங்கள் ஏதுமற்ற
வெற்று சாலையொன்றில்
எதையோ தேடித் திரிகிறேன்..
தேடும் பொருளையே
மறந்த தேடல் அது.
ஆழமான போதை.

வெட்ட வெளியில்
குளக்கரையொன்றில்
அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய்.
அருகில் செல்ல
வெற்று பார்வையுடன்
எதிர் கொள்கிறாய்.
அழது தீர்த்த உன் கண்களினூடே
கனத்த மௌனத்தை
வீசுகிறாய்..
பாலைவனமெங்கும் புயல்.
வெற்று புன்னகையுடன்
மறைகிறாய்.

மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மென் சிரிப்புடன்
இடை மறிக்கிறாய்.
கவிதையாய்
ஒரு முத்தமிடுகிறாய்.
சட்டென விலகி
என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறாய்.
இருள் போர்த்திய
ஓர் காட்டில்
நீரோடையொன்றின் கரையில்
ஆனத்தமாய் விளையாடிக் கொண்டிருக்கும்
அரை நிர்வாணப் பெண்ணொருத்தியைக் காட்டி
" அதுவும் நான் தான்.
என்னில் நீ காதலித்த "நான்" அவள் தான்"
என்று சொல்லிவிட்டு மறைகிறாய்.

நீரோடையிலிருந்து
மீண்டும் மீண்டும் நீயே
அழைக்கிறாய்.
கண்களெங்கும் காமம்.
மெல்ல உன் ஆடைகள் மறையத் தொடங்குகிறது.
அழுது தீர்த்த உன் வெற்று முகம்
துரத்த
திசைகளற்ற உன் கனவுப் பெருவெளியைக்
கடக்க முயன்று தோற்கிறேன்.

உடல் தளர்ந்து
மண் சாலையொன்றில் சாய்கிறேன்.
என் கண்ணீரை பெற்றுக்கொண்ட சாலை
உன் காலடித்தடத்தைக் காட்டுகிறது.
தடம் காட்டிய திசையில்
வெற்று வெளியில்
சென்று கொண்டிருக்கிறேன்.

மெல்ல உன் கனவிலிருந்து மீண்டு
என் நினைவுச் சுழலில் சிக்கிக் கொள்கிறேன்.
மீளவே இல்லை இன்றளவும்..

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (10-Dec-13, 9:02 pm)
Tanglish : ninaivuch sulal
பார்வை : 113

மேலே