மகாத்மாவே கொஞ்சம் பொறுங்கள்
மகாத்மாக்களே!
உங்களை நினைப்பதற்கு
எங்களுக்கு தேதி தேவைப்படுகிறது!
ஆம் ஆகஸ்ட் 15!
நூறாண்டு காலமாய்
அடிமைபட்டு கிடந்தோம்!
நட்புகென்றே இடம் கொடுத்தோம்!
நாடு பிடித்தான்!
எண்ணும் அளவுக்கு
எட்டப்பன்கள் இருந்ததால்
எளிதில் வீழ்ந்தோம்!
இந்தியர்களின் இரத்தத்தில்
எடுக்கப்பட்ட வெண்ணை
ஐரோப்பிய வீதிகளில்
விற்பனையாயின !
விண்ணில் பறக்கும் குருவிக்கும்
விசா கேட்டான்!
இந்த அடிமை தழும்பை
நினைத்துப் பார்க்க
எங்களுக்கு தேதி தேவைப்படுகிறது!
காவிரியும் கங்கையும்
குருதியில் குளித்து
ஓடிக்கொண்டிருந்தது !
இந்த வெள்ளை இருட்டை
பொசுக்குவதற்கு
அங்கங்கே பீடிகங்குகள்
நெருப்புதுண்டுகளாய்
உருபெற்றது!
எத்தனையோ விடிவெள்ளிகளை
அந்த ஏகாதிபத்திய கடல்
விழுங்கி முடித்தது !
அகிம்சை என்ருபக்கம்
அடிக்கு அடி என்ருபக்கம்
இரத்தம் மட்டும் இருபக்கமும்
சிந்தி போராடினீர்கள்!
அடித்து அடித்து
கைவலித்து போனான்!
உதைத்து உதைத்து
கால்வலித்து போனான்!
அறபோராளிகளை
துப்பாக்கி, பீரங்கி கொண்டு
அழித்துப் போட்டான்!
வலித்தது !
இந்தியாவில் எல்லோருக்கும்
வலித்தது!
இரத்தத்தில் மூச்சு திணறினான்!
மண்டையோடுகளினால்
கால் இடறி விழுந்தான்!
ஒரு நூற்றாண்டின்
போராட்டம் முடிவுக்கு வந்தது!
அந்த இரவில்
இந்தியாவிற்கு பகல் என
அறிவிக்கப்பட்டது !
கொடிமரத்தின் வேர்கள்
இந்தியர்களின் நரம்புகளில்
உருவாக்கப்பட்டதை உணர்ந்தோம்!
உங்களை வணங்குகிறோம்!
மகாத்மாவே!
கொஞ்சம் பொறுங்கள்
தேசியகீதத்தை
இன்னொருமுறை படித்து விட்டு
வருகிறோம் !
நினைவில்லை !
கோடீஸ்வரன்