காதல் காதல் காதல்

காதல் காதல் காதல்..
======================================ருத்ரா

முகநூல் பிதுக்கின‌
ஏராளமாய் முகங்கள்.
கட்டம் மட்டும் கட்டியிருக்கிறேன்.
நட்பு வட்டம் தன்னில்.
தாமரை முகத்தில் ஒருத்தி.
ரோஜா சிரிப்பில் ஒருத்தி.
முத்துக்களைப் பரப்பி ஒருத்தி
முழுநிலவு சிரிப்பாய் ஒருத்தி.
கயல்விழி காட்டி ஒருத்தி
புயல் வீசினாள் ஒருத்தி.
வெண்ணை திரட்டிய சிலையாய்
செல்லுக்குள் எப்போதும்
குடியிருந்தாள் ஒருத்தி.
மருந்துக்கும் கூட‌
ஹாய் சொல்ல‌
நண்பன் எவனும் இல்லை.
பகிர்வுகளுக்கு
பஞ்சம் இல்லை.

பலூடா ஒண்ணு
வாங்கிக்குடுடா
என்பாள் ஒருத்தி.

படம் குப்பை ஆனாலும் சரி.
மூலை சீட்டு
ரெண்டை புக் பண்ணு
என்பாள் ஒருத்தி.

மாயா பஜார்க்குள்
கோன் ஐஸ்ஸில்
"குழையலாம்"
என்பாள் இன்னொருத்தி.

ஒரு செமஸ்டருக்குள்
மூணு செமஸ்டர் ஃபீஸ் கட்ட‌
அப்பா(வி)க்கு மட்டும்
தபால் அட்டைகள் போதும்.

ஃபீஸ் எல்லாம்
செல் ஃபீஸ் கட்டத்தான்.
செல் கம்பெனிகள்
கொழுத்துப்போயின.
ஆயிரம் அரசாங்க கஜானாக்கள்
அங்கே அள்ளலாம்.

காதலிக்கும் முகம் மட்டும்
இன்னும் காலியாகவே இருக்கிறது
இந்த முகநூல் காட்டில்.
கிராமத்தில் திட்டுவார்கள்
அடேய் மாமாப்பயல்களே.
இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு..
தூ ..பொசகெட்ட பயல்களா!
முகங்களை விற்கும்
இந்த கார்பொரேட் "முகப்புத்தகங்களில்"
காறி உமிழ்ந்தாலும்
அதுவும் பல்ஸ்தான்.
அதுவும் பைஸாதான்.

காதல் காதல் காதல்
என்று பாடினான் பாரதி.
அதை
"காசு காசு காசு.."
என்று மொழிபெயர்த்தன‌
இந்த கார்பொரேட்டுகள்.

======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (17-Dec-13, 1:33 pm)
பார்வை : 99

மேலே