திருவருட் சுரங்கம்

இயற்கை எழிலாய் பொங்கி வழியும்
==இலங்கைத் தீவின் தலைநகர் அருகே
மயக்கும் வத்தளை ஹேகித் தநகரில்
==மலைபோ லுயர்ந்த சிலையோ டெழுந்து
வியக்கும் விழிகளுக் கதிசய மான
==வேலவ னாலய தரிசனஞ் செய்ய
பயக்கும் நன்மை ஆயிர மென்பதை
==பயனது அடைந்த நாவுகள் மொழியும்.

வாயில் முகப்பில் வழிப்பிள் ளையார்
==வணங்கி அடிகள் எடுத்து வைத்து
கோயிலின் உள்ளே செல்லும் வேளை
==குளிர்விழி காண்பது வேலவன் வேலை
பாயிர மெழுதும் கொடிமரம் அடுத்து
==பலிபீ டத்தை பார்த்தே நகர
தாயவள் ஸ்ரீகரு மாரி, காளி,
==நாக பூசனி கண்களில் மிளிரும்.

முருகன் திருவருள் புரியும் வகைக்கவின்
==மூலஸ் தான அமைவிடம் கண்டு
இருகைக் கோர்த்து வணங்கிடும் அடியார்
==இடப்புறம் காசிவிஸ் வநாத சுவாமி
இருக்கக், காசிவி சாலாட் சுமியுமே
==இருப்பது வலப்புறம் என்பதைக் காண
அருள்மழை என்னும் அடைமழை தன்னில்
==அனுதினம் நனைய திருத்தலம் வரமே!

தட்சணா மூர்த்தி, நர்த்தனக் கணபதி,
==தண்டா யுதபா ணி,பிரம் மா,ஸ்ரீ
துர்க்கை யம்மன், சண்டேஸ் வரரும்,
==துயரம் மறக்க வசந்தமண் டபமும்,
வெற்றி யளித்திடும் ஆஞ்ச நேயரும்
==சந்தா னகோபா லரும ஆங்கே
சுற்றி வணங்கிட கலைஎழிற் சிலைகளும்
==சூழ்ந்து இருப்பதோ பரவச மளித்திடும்!

தோஷம் தொலைத்து தொல்லை அகற்றி
==தொழுதிடும் அன்பர் துயரம் போக்க
வாசம் செய்திடும் நவக்கிர கங்கள்,
==வைரவ ரென்று ஒருங்கே யமைந்த
ஈசன் சிவனின் இளையவ ராலயம்
==இசைத்திட நடமிடும் மயிலதன் கலையகம்
நீசம் அற்று மானுட முய்ய
==நிம்மதி யளித்திடும் நிறைகுட சந்நிதி.

நதிகள் ஒன்றாய் கலந்த கடலாய்
==நலமே அருளும் தெய்வம் பலவும்
புதுமை எனவே திரண்டு நிற்கும்
==புகழ்மிகு வத்தளை எழுந்த ஆலயம்
கதிராய் அரும்பி நெல்லாய் விளைந்த
==கழனியின் கொடையென வேலவன் அருளாய்
உதிர்ந்து அன்பர் ஊழ்வினை யகற்ற
==உயர்ந்த சிலைவழி வாழ்வினை உயர்த்தும்.

தேக்கி வைத்த திருவரு ளூற்றை
==தேனில் துவைத்தக் கருப்பொரு ளாக்கி
பாக்கி வைத்துப் பார்த்தி டாமல்
==பக்தர் குறைகள் தீர்ப்பதற் கென்றே
வார்க்கும் ஸ்ரீசிவ சுப்ர மணியர்
==வாசம் செய்யும் தேவஸ் தானமாம்
தாக்கும் பகைகளை தகர்க்கும் வத்தளை
==திருநகர் அமைந்த திருவருட் சுரங்கம்!

(இது புதிதாய் அமைந்து ஒருவருட பூர்த்தியை வெகுவிரைவில் கொண்டாடவிருக்கும் இலங்கை வத்தளையூர் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம் போற்றும் கவிதை)

***மெய்யன் நடராஜ்***
******** வத்தளை *********

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Dec-13, 1:25 pm)
பார்வை : 130

மேலே