மழை

ஓரிடம் நில்லா
தவழ்ந்திடும் மேகம்
வானின் குழந்தையோ
கடலிடம் நீரை
களவு கொண்டதால்
வான் (தாய்) முகம் இருண்டதோ
களவின் தண்டனை
மேகப் பையை
மின்னல் கிழித்ததோ?
தாங்கா குழந்தை (மேகம்)
அழுது புலம்பியே
இடியாய் அலறுதோ
சேர்த்த நீர்முத்து
வெண் மழையாக
சிதறி – மண்(ணில்) விழுந்ததோ
அழகிய வெண்மழை
இருண்ட வானில்
தோரணம் ஆனதோ
பூவாய் வண்ணக்
குடைகளும் மண்ணில்
உடனே பூத்ததோ
புயலாய் வீசிடும்
காற்று நிலமகள்
மர - மேலாடை கலைத்ததோ
ஓடிய நீர் அவள்
பசும் புல்லாடை
நனைத்துச் சென்றதோ
புழுதியாய் நிலமகள்
வெப்பம் நீங்கிட
இன்றுதான் குளித்ததோ
களவுப் பொருளும்
கரை புரண்டோடி
கடலிடம் சேர்ந்ததோ!!!