பாலையாய் ஒரு வெற்றுக் கேவல்

“கொலைப்பாதகர் கூட்டமது
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித்து விளக்காக்கிக் கொண்டாள்...

“ஏன் சென்றாய்? விட்டகன்றாய்?
திரும்பிடவே கூடாதென வீம்பாய் ஒரு
பிடிவாதம் பிடித்தாற்போல் ஆயிரம் கேள்விகளை
விடைதெரியாமல் விட்டுச் சென்றாய்...
உன் கண்களில் நானதை படித்தறிய கண் விரிய காத்திரு”
இப்படி தான் அவள் மனம் அவனிடத்தில் யாசித்தது...

யாசித்தும் பயனில்லை,
நாளும் பொழுதும் பூஜித்தும் புண்ணியமில்லை...
விட்டு விட்டுப் போனவனின்
ஆழ்நிலை தூக்கமொன்றே அவளை ஆங்காரமாய் வரவேற்றது...

எரிமலையொன்றங்கே தீப்பிழம்பு கக்கியது...
வான் கிழித்து நட்சத்திரம் பாதாளம் பாய்ந்தது...
இதை காணத் தான் கண்களுக்கு மையிட்டுத் திரிந்தாளா?
வளையல்கள் சண்டையிட அவன் ரசிக்க நகைத்தாளா?
மணவாளன் மாய்ந்திடத் தான்
வெண்சங்கு கழுத்திலே மணமாலை ஏற்றாளா?

பற்றியிழுத்து சண்டையிட்ட மார்தனில்
இனி மயிர்கால்கள் சிலிர்க்கப் போவதுமில்லை...
பூப்போல் வாரி அணைத்திடும் கரங்களும்
இனி அவளுக்கு சொந்தமாய் இருக்கப்போவதுமில்லை...

இனி அவன் கழுத்து அவளுக்காய் சாய்வதுமில்லை
அவனின்றி இனியாரும் அவளுக்கு தேவையாய் இருப்பதற்கில்லை..

அவன் வளைத்த மெல்லிடை தீயாய் தகிக்க,
அவன் சுமந்த நெஞ்சமோ இரண்டாய் கிழிகிறது...
பீறிட்டு வரும் குருதி கண்டு
ஆக்ரோஷ மனம் அடங்கல் கொள்ளுமோ?
ஏதோ ஓர் பரமானந்தம் அந்தரத்தில் ஆர்ப்பரிக்கிறது..
மெல்லிய ஆடைகளின் பாரங்கள் கூடிப்போக
வாய்ப்பிளந்து உயிரிழக்க துணிகிறாளவள்..

அமைதியாய் உறைந்திருக்கிறான்...
அவள் கைகள் துவள தாங்காதிருக்கிறான்...
தட்டாமாலை சுற்றிடும் அவள்
தலைக்கு மேலே இன்னொரு உலகம் ஸ்ரிஸ்டித்து
அங்கிருந்து அவளை ஏந்தாதிருக்கிறான்...

அவள் உயிர் துடித்தடங்குவதை
அவன் கண்கள் காணப்போவதேயில்லையென
இமை சொருகி மண்ணோக்கி அவள்
வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...

பேதையினியென் செய்வாள்?
உயிரிழக்கவும் உரிமையில்லை...
துவண்டிட்ட கால்களினி உரம்பெறுமா? தெரியாது...
மாறாய், செலுத்தப்பட்டே தீர வேண்டும்...
உளிப்பட்டு பிளந்திட்ட பாறையின் உள்ளின்று
குதித்தோடிய தேரையாய்
புவிதனில் அவளுக்கும் ஓரிடம் நிச்சயமாச்சு...

கண்ணீரும் வறண்டுப் போக
அவன் வெற்றுடலை ஒரு உறைந்தப்பார்வை பார்க்கிறாள்...
மணிவயிரை தடவுகையில்
விரக்தியொன்று உதட்டில் உறைந்தது...
ஊமையாய் போன இவள் இனி,
ஊர் போய் சேர வேண்டும்...

கூவைகளின் கூப்பாடுகளுக்கிடையில் அவள்
திரும்பி நடக்கையில் அவள் அவளுமாய் இருக்கவுமில்லை..
அவளை தொலைத்துவிட்டு அவனை அணிந்துக் கொண்டே
கால்கள் பின்ன ஊர்ந்துக் கொண்டிருக்கிறாள்...
இனி அவன்... அவளின் வாழ்நாள் விசையாகிறான்.

எழுதியவர் : ஜி.டி (19-Dec-13, 11:48 pm)
பார்வை : 138

மேலே