மீட்புற,வா எம்பாவாய்
எல்லே இளங்கிளியே! எல்லோர்க்கும் நல்லவளே!
=சில்லென் றெழுகாற்றாய்ச் சிந்தனையிற் தோய்பவளே!
புல்லும் மணிதூக்கும் பொன்காலைப் போதவிழ்ந்து
=சொல்லும் நறுமணத்தாற் சுந்தரனும் வந்ததையே!
நில்லும் பனிமூட்டம் நெஞ்சழுத்தும் பாவம்போல்
=அல்லின் துணையோடும் ஆட்கொள்ள மாட்டாமல்
வெல்லும் படிக்கவனின் வெற்றிக் கொடியெனவே
=மெல்லவெழும் ஆதவன்முன் மீட்ப்புற,வா! எம்பாவாய்!
கருத்து:
ஒளி பொருந்தியவளே! இளமை நிறைந்த பசுங்கிளியைப் போன்றவளே! காண்பவர் எல்லோருக்கும் நல்லவளாக நடந்து கொள்பவளே!
சிலுசிலுவென்று வீசும் குளிர்ந்த காற்றுப் போன்ற இதமான சிந்தனை மனத்தின்கண் நிறைந்தவளே!
புற்களெல்லாம் மணிகளைத் தலைமேல் தூக்கியன போன்று பனித்துளிகளைத் தாங்கி நிற்கின்ற பொன்போன்ற நிறத்தைக் கொண்ட இளங்காலைப் பொழுதில், மலர்மொட்டுக்களெல்லம் வாய்திறந்து தங்கள் மணத்தின் மூலம் அழகிய ஏசுபிரான் வரவினைச் சொல்லுகின்றன; நெஞ்ச்சத்தை அழுத்திக் கொண்டிருக்கின்ற பாவ எண்ணங்களைப்போலச் சூழ்ந்து நிற்கின்ற பனி மூட்டமானது இருட்டின் துணைகொண்டு நம்மை எல்லாம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு விடாமல்
அதனை வெல்லும் படியாக ஏசுவின் வெற்றிக் கொடியானது எழுந்து வருவதுபோல் இளஞ்சூரியனும் மேலே எழுந்து வருகின்றான்; பெண்ணே! நீயும் எழுவாயாக! எழுந்து மீட்பினைப் பெற்றுக் கொள்ள வருவாயாக!
ஆதியில் வார்த்தையாய் ஆடியே நின்றவரே
=வேதனை யாம்கெடவே விண்விட் டெழுந்துள்ளார்!
போதனை தாம்மறந்து பொல்லாப்பின் கையிழுக்க
=வீதியை விட்டகன்று வேறுவழி சென்றவராய்ப்
பாதகராய் ஆனோரின் பாவங்கள் தாம்போக்கப் =போதவிழ்த்த நன்மணமாய்ப் புல்லணையில் வந்துள்ளார்!
சோதியைக் கண்டேத்திச் சூழ்பாவம் போக்கிடுவாய்!
=மாதவத்தான் முன்சேர்ந்தே மகிழேலோர் எம்பாவாய்!
கருத்து:
ஆரம்பத்தில் ஒலிவடிவமாக அசைவாடியபடி நின்றவராகிய கர்த்தர்,நம்முடைய வேதனைகள் கெட்டுப் போகும்படியாக விண்ணுலகத்திலிருந்து புறப்பட்டு வந்துள்ளார்! அவர் மனித குலத்திற்கு அளித்திருந்த அறிவுறைகளைக் கேட்டு அதன்வழி நின்று நடக்காமல்,அவற்றை மறந்தவராகத் துன்பம் கையைப் பிடித்து இழுக்க, நடக்க வேண்டிய, கர்த்தரின் பாதையில் நடக்காமல், அதை விட்டு விலகி, உலக ஆசைகளின் வழியில் சென்றவராகப் பாவங்கள் செய்து
தீவினைகளுக்கு ஆளாகி வாழத் தலைப்பட்டு, ஏற்பட்ட தீவினைப் பலன்களிலிருந்து நம்மை மீட்க, நல்ல மணம் வீசும் மலராகப் புல்லால் ஆன படுக்கையின் மேல் வந்து பிறந்துள்ளார்! அந்த சோதி வடிவாமே ஆனவரைப் பார்த்து நம்மைச் சூழ்ந்துள்ள பாவங்களைப் போக்கிடுவாயாக!
பெண்ணே! அந்த மாதவனின் முன் சென்று அவனைச் சேர்ந்து மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளுவாயாக!
======+++++++MERRY CHRISTMAS GREETINGS TO ALL++++=====