கரிக்கும் நதி

எல்லா நதிகளிலும்
நீராடும் விருப்பம் அவனுக்கிருந்தது.
எல்லா நதிகளும் புனிதமானவை
என்று அவனுக்குச் சொல்லப் பட்டிருந்தது.
எல்லா நதிகளும்....
எங்கே துவங்குகின்றன என்ற கேள்விக்கான
புவியியல் பதிலை அவன் ஏற்றுக் கொள்வதில்லை.
கடவுளின் சடையில் சிக்கிய நதியை...
ஏன் ஒருவன் ஒற்றைக் காலில் நின்று
பூமிக்குக் கொண்டுவந்தான்
என்னும் ஆச்சரியமான கேள்வி
அவனுக்குள் இருந்து கொண்டிருந்தது.
நதியின் நீர்மைதான்
மனிதத்தின் ஈரமாய் இருக்கமுடியும்
என அவன் பேசிக் கொண்டிருந்தான்.
சுழிந்து வளையும் நதி...
கடைசியில் கடலோடு கலந்து
கரித்துப் போவதேன்?
என்னும் கேள்வி
வாழ்வின் சாரமாய் இருக்கலாம் எனத் தோன்றியது அவனுக்கு.
தன் மேல் அழுக்கினைச் சுமந்த படி...
எல்லோரையும்
சுத்தப்படுத்திச் செல்லும் நதியினை...
ஏன்...மகாத்மா? என யாரும் அழைப்பதில்லை
எனத் தோன்றியது அவனுக்கு.
மனிதர்கள்...
பெயர்களால் பிரிந்திருப்பதைப் போல்...
நதிகளையும் பெயர்களால் பிரித்தது...
எந்த மனிதனின் சூழ்ச்சி
என்னும் ஆராய்ச்சி அவனுக்கானதில்லை.
நதிகளும் அநீதிகளில் நீந்திச் செல்கின்றன...
என எழும்பும் எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை...
அவனால்...

பாலையென வெடித்திருக்கும்
தன் நிலம் கடந்து செல்லும் பொழுது.

எழுதியவர் : (28-Dec-13, 5:32 pm)
Tanglish : karikkum nathi
பார்வை : 195

மேலே