காயப்படுத்தி கொள்ளுகிறார்கள்
காயப்படுத்தி கொள்ளுகிறார்கள்
**********************************************
ஒரு நாள் இரவு உணவு வேட்டையை முன்னிட்டு பாம்பு ஒன்று, மரத்தச்சரின் கூடத்தில் நுழைந்தது. அடர்ந்த இருட்டு. "ஏதேனும் எலி கிடைக்குமா?", என ஏங்கிய பாம்பு தச்சுக்கூடத்தைச் சுற்றி வந்தது.
மரவேலை செய்யும் தச்சர் தனது உபகரணங்களை ஓரிடத்தில் வைக்காமல் கண்டபடி போட்டிருந்தார். உளி, சுத்தியல், ரம்பம் ஆகியவை ஆங்காங்கே தரையில் கிடந்தன.
காரிருள் வேளையில் கூடத்தைச் சுற்றிய பாம்பு, ரம்பத்தின் மேலே ஊர்ந்தது. ரம்பப்பற்கள் கூர்மையாக இருந்ததால், பாம்பின் உடலில் காயமும், வலிவேதனையும் உண்டானது.
யாரோ எதிரி தன்னைத் தாக்குவதாக கற்பனை செய்துகொண்ட பாம்பு ரம்பப் பற்களை எதிரியாகப் பாவித்து, அதைக் கொத்த ஆரம்பித்தது. ஆனால் கொத்தியபோது கூரான ரம்பப்பற்கள் பாம்பின் வாயிலும் காயத்தை உண்டாக்கி மிகுந்த வலியை ஏற்படுத்தின. வாய் முழுவதும் இரத்தம் பெருகி வழிந்தது.
இது அந்தப் பாம்புக்கு மிகப்பெரிய கோபத்தை அளித்தது. மரணவலியுடன் போராடிய பாம்பு இறுதியாக பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஒரே கொத்தாகக் கொத்திவிடுவதென தீர்மாணித்து பலம் அனைத்தையும் திரட்டி ஒரே போடாக ரம்பத்தில் கொத்தியது.
அத்துடன் பாம்பு உயிரிழந்தது. அடுத்த நாள் தனது கூடத்தினுள் நுழைந்த தச்சருக்கு ஒரே ஆச்சரியம் - "இரத்த வெள்ளத்தில் மிதந்த பாம்பைக் கண்டு".
#நீதி : அடுத்தவரைக் காயப்படுத்துபவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.
நன்றி சேனைத்தமிழ்