கர்வம் கொண்ட கவிஞன் நான்
அடுத்த அடி எடுத்து வைக்க
அழகுச் சிகரம் படியாகும்...
கர்வம் கொண்ட கவிஞன் எனக்கு
கடவுள் என்றே பேராகும்....
நினைத்த இடத்தில் அவதரிப்பேன் - நான்
நிம்மதியையும் சிறைபிடிப்பேன்
எழில் தமிழை விட்டால் இப்பாரில்
என்னை வெல்ல எவரும் உண்டோ ?!
என்றே சற்று இறுமாப்புடன்
என் சிந்தைக்குள்ளே நினைத்திருந்தேன்....
ஆங்கிலத்தில் மொழிமாறிய
அருட் பெரும் திருக்குறள்......
உள்ளுக்குள் ராப் இசை படித்தபடி
உண்மை அடக்கத்தோடு மேஜையில் இருந்தது..
உனக்கு எரிச்சல் வரவில்லையா ?
உள்ளதைச் சொல் வேற்று மொழியில் நீ என்றேன்.!
அன்புடைமை அதிகாரத்தில் எனக்குள்
அடங்கி விட்டது ஆங்கிலம்....!
தாய்மை எவரையும் வெறுத்ததில்லை
தரணியில் எவருமே தனிமையில்லை....!
எந்தன் உருவத்தில் எழில் பெறும் அம்மொழி
எல்லோர்க்கும் வழிகாட்ட இறைவனின் நல் வழி
உட்பொருள் உணர்ந்தால் உண்மை விளங்கும்
உதட்டிலே புரிந்தால் இனிப்பும் சுவை இழக்கும்
பிறமொழி வெறுக்காதே அனைத்து உயிர்களும்
பெற்ற அன்னைக்கே நிகர் என்றது....!
தமிழ்க் கவிஞன் என்றே என்
தலைக் கர்வம் தரை இறங்குவதாய் உணர்ந்தேன்
இப்போது அந்த ஆங்கிலத் திருக்குறளில்
இருந்த A E I O U உயிர் எழுத்துக்கள்....
அ
ஆ
இ
ஈ
உ
என்றே மனசுக்குள் தோன்ற.....
கர்வத்தை விடுத்து நான்
கருணையைப் படிக்கத் தொடங்கினேன்......!