போராளியின் வெற்றி சலனம் -நம்மாழ்வார்
![](https://eluthu.com/images/loading.gif)
வாடிய பயிரை கண்டு வாடுவர்
அந்த கண்ணீர்த்துளிகள்
மண்ணில் பட்டதும்
விண்ணெங்கும் அந்த பதிவு
பதிந்து கர்ப்பம்தரிக்கும்
அந்த கர்பத்திலிருந்து உயிரொன்று
உருவாகும் அந்த உயிர்
மண்ணில் மனிதனாய்
கருவாகி உருவாகும் !!!
அப்படியொரு உயிர்
அருளோடு பிறந்து
அறிவோடு வளர்ந்து
பணிவோடு நடந்து
இயற்கையோடு இணைந்து
இயற்கைக்காய் போராடியது !!!!
முப்பத்தைந்து வருடமாய்
மலடாகும் மண்ணையெல்லாம்
மாற்றி,நெல்மணியை உருவாக்க-ஆம்
இயற்கை நெல்மணியை உருவாக்க
போராடியது !!!
நவீனம் என்றோர்
சொல்லது கொண்டு
நடுகின்ற ப்ராய்லர்
பயிரையும் நாள்
தவறாமல் உண்டு
உடலில் உள்ள
சக்தியை இழந்து
மனித ஆயுள்
முழுதையும் அறிந்தே
குறுக்கிக்கொண்டு
செருக்குடன் வாழ்கின்றோம்
நம்மண்ணுக்கு நாமே
தீமையும் செய்கின்றோம்
இயற்கை விவசாயமே
இத்தரணிக்கு உகந்தது -அதிலே
ஆரோக்கியம் நல்கும்
அருமருந்தும் உள்ளது
இதுதான் அவ்வுயிரின் அன்றாட
தாரக மந்திரம்
சோற்றில் கைவைக்கும் போது
சேற்றில் கால்வைக்கும் விவசாயியை
எண்ணுவோர் சிலரே
சேற்றையும் சேர்த்து எண்ணுவோர்
மிகச்சிலரே அப்படி
மண்ணின் நலனை காக்க போராடிய
மாபெரும் உயிர் !!!!
ஆம் ,
உயிரை நேசிப்போர்
உலகினில் உண்டு
உயிரோடு நெற்பயிரையும்
நேசிக்கும் குணமுடையோர்
சிலரே
அன்றொரு வள்ளலார்
இன்றொரு நம்மாழ்வார் !!!
நீ படித்து வாங்கிய பட்டம்
உன்னை அடிமையாக்காமல் இருக்க
பயன்பட்டால் நீ பட்டதாரி !!!
நீ படித்து வாங்கிய பட்டம்
உன்சமுதாயத்தையே அடிமையாகாமல் இருக்க
பயன்பட்டால் நீ போராளி !!!
ஆம்
நம்மாழ்வார் ஒரு போராளி !!!
அரசாங்க ஊதியமெனில்
அடிமாடாகவும் செல்லும்
அறிவில்லாத மக்களுக்கு
மத்தியில் கிடைத்த
அரசாங்க உத்தியோகத்தை
உதறி தள்ளிய மாபெரும்
யோகி அதற்கு
இவர் உரைத்த ஒரே காரணம்
"இங்கே செய்யப்படுபவை எல்லாம்,
விவசாயிகளுக்குப் பயன் தராத ஆராய்ச்சிகள்.
அதனால்தான், இந்த வேலையிலிருந்து விலகுகிறேன்"
என்பது மட்டும்தான்
பற்றற்று இருப்பவன் யோகியல்ல
தனக்கும் தரணிக்கும்
தரணிவாழ் உயிர்களுக்கும்
பயன் தர வாழ்பவனே யோகி !!!
ஆம்
நம்மாழ்வார் ஒரு யோகி !!!
இயற்கையோடு ஒன்றுவதெனில்
அம்மணமாய் அலைவதல்ல
இம்மண்ணும் மழையும்
இவ்விரண்டையும் பிசைந்து
உருவெடுக்கும் தாவரமும்
பச்சையத்தை பரிச்சயமாக்கி
இச்சையோடு உருவெடுக்கும்
புழுவினமும் அதிலிருந்து
அணுஅணுவாய் வெடித்துசிதறி
மனிதனென்று மலர்ச்சியுற்ற
நீயும்-நானும் வேறல்ல
என்று திண்ணமுற எண்ணி
இச்சையை இயற்கையோடு
கலந்து இன்பமாய் வாழ்வதே
இயற்கையொத்த வாழ்வாகும் !!!
சுனாமியால் பாதித்த நிலங்களை கூட
விளைநிலங்களாய் மாற்றுவது சுலபம் !!!
அரசியல் ஆசாமிகளாலும்
வஞ்சமுள்ள வணிகர்களாலும்
மேலும்-மேலும் சிதைக்கப்படும்
நம் இயற்கை தாயின் கருச்சிதைவு
நீங்கும் வரை
இயற்கை நேசிக்கும் மனிதர்கள்
உள்ள வரை
நம்மாழ்வார்
நம்மோடு வாழ்வார் !!!
ஏனெனில்
ஆறடி நிலத்துக்கு சொந்தம் உடல்மட்டும்தான் !!!
பசுமை போராட்டம்
இவ்வுலகம் மீண்டும்
பசுமை பெறும்வரை
தொடரும் ......
***********************************************************************
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்