ஆலமரமும் மூங்கில்களும் கதை கேட்குமே

கடிகார மணி முள்ளாய் குத்தியது
சாய்ந்த ஆலமரம் அழைத்தது
அனைவரின் தூக்கத்தையும்
இரா (ஆ )பத்து என்று !

சுமங்கலியாய் கடவுளிடம் சேர்ந்த
ஆயாவின் மடியில் மலர்களெல்லாம்
ம(ண) னத்தை இழந்தது ஊதுபத்தியின்
மன(ண)த்தோடு போட்டி போடமுடியாமல்...!

செய்திகள் சொல்லியாயிற்று
மாமன்களுக்கும் மச்சான்களுக்கும்
வீட்டின் வாசலிலில் வெட்டுப் பட்டு
அழுதபடியே நின்று பா(வா)டைக்
கட்டிக் கொண்டது உடலில்
வாழையும் மூங்கில்களும்...!

செய்திகள் சொல்லியாயிற்று
உடன் பிறப்புகளுக்கும் மகன்களுக்கும்
மகவைகளுக்கும் விளக்குகளுக்கும்
பெயரன் பெயர்த்திகளுக்கும் ...!

பங்காளிச் சண்டையில்
விட்டுப் போன செய்தியில்
விட்டுப் போன நல வார்த்தைகளின்
சமாதானப் போர்வையில் வருந்தி
போர்த்திக் கொண்டது கீற்றுப் பந்தல் ...!

பறந்த செய்தியில்
இரண்டு சக்கரமும்
நான்கு சக்கரங்களும்
க (த )ண்ணீரில் கரைந்து போனது
எண்ணெய் கிடங்குகளும்
பூசு மஞ்சளும் குங்குமமும் ..!

வருகை தந்தது
மேள தாளங்களோடு
கங்கை நீர் குடங்களும்
தீப் பந்தங்களும் ...!

வாயார வாழ்த்தி நெஞ்சோடு
பாசத்தைப் பொழிந்த ஆயா
நெட்டி முட்டி நொறுக்கி
பத்து விரல்கள் முறித்தவள்
அனுபவப் பாடமாய் கதை சொன்னாள்
எங்களையெல்லாம் விட்டுச் சென்ற ஆயா...!

மூலையில் மனம் புழுங்கி
தேம்பி தேம்பி அழுது அழ முடியாமல்
விரல்களெல்லாம் பட படக்க
கண்ணீரெல்லாம் உப்பாய் கரைய
கரும்பான ஆயாவின் நினைவால்
புலம்பினாரே பெரிய தாத்தா !

சவமான சுமங்கலியின் முன்
அனைவரும் அழுதும் அழாமலும்
மனமெல்லாம் வீதியிலே ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (4-Jan-14, 4:02 pm)
பார்வை : 145

மேலே