முட்டாள் பெட்டிக்குள் முடங்கும் சமுதாயம்
திரையரங்கம் சென்று
நாயகனும் நாயகியும்
கட்டியணைத்துப் புரள்வதையும்
அரைகுறை ஆடையில்
ஆறுகளில் நீச்சல் குளங்களில்
கண்ட இடங்களில்
கும்மாளமிட்டு குத்தாட்டம்
போடுவதையும்
வெளிநாட்டுத் தெருக்களிலும்
இந்தியப் பண்பாட்டை
அரைகுறை ஆடையில்
ஆடிப்பாடி நாட்டின் பெருமையை
உயர்த்தும் மாண்பையும்
கண்டு களித்து சுவைத்து
உருப்பட்ட நாமெல்லாம்
இன்று
வரவேற்பு அறையில்
படுக்கை அறையில்
அல்லும் பகலும்
அலுப்பின்றிப் பார்த்துச் சிறக்க
முட்டாள் பெட்டியிடம்
சரணாகதி அடைந்தோம்.
குடும்பத்தைக் கெடுக்கும்
கருத்தெல்லாம் கதையாகி
தொடராய் வருவதைத்
தொடர்ந்து பார்த்து
குடும்ப வாழ்க்கையைக்
குட்டிச் சுவராக்கி..குதூகளிப்போம்.
பட்டிமன்றம் கவியரங்கம்
இலக்கியத் தரம் வாய்ந்த
நிகழ்ச்சிகள் இருந்தாலும்
எங்களுக்குப் பிடித்ததெல்லாம்
கெட்டுப் போக நல்வழி காட்டும்
தொடர்களும்
கும்மாளமிட்டு குத்தாட்டாம்
போடவைக்கும் திரைவிருந்து
மட்டுமே என்று நிரந்தரம்.
வாழ்க சின்னத்திரை
வாழ்வளிக்கும் வண்ணத்திரை.
*தொலைக்காட்சிப் பெட்டியை Idiot Box என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.