பேசாத வார்த்தைகள் Mano Red

வார்த்தைகள் கோர்த்து
உள்ளிருந்து பேசுகையில்,
உணர்வுகள் மெலிந்து
உள்ளம் கிளர்ந்து
உளறல் அதிகம் பிறக்கும்...!!
அன்பின் வாசல் சற்று
அதிகமாக திறக்கும் போது,
அசாத்திய பேச்சாளனும்
அதிர்ந்து நின்று
பேசத் தத்தளிக்கிறான்..!!
வார்த்தைகள்
பேசப்படுவதை விட,
எழுத்தில் சொல்லும் போது
இன்னும் அதிகமாய் மிளிரும்,
இடைவெளி குறுகும்.!!
உண்மையான அன்பில்
வார்த்தை குறையும் போது
ஒற்றை அலைவரிசையும்,
நேர் மின்னூட்டமும்,
வேதியியல் மாற்றமும்,
ஒருங்கே ஒன்றாய் கூடும்..!!
உரையாடலின் போது
வார்த்தைகள் தேடித்தேடி
அழுத்தி பதிக்கப்படுவது விட,
பேசாத வார்த்தையில் தான்
அர்த்தம் இல்லாத
அதிசயம் நடக்கும்..!!!
புரிந்து கொண்ட அன்பில்,
பேசாத பிரிவிலும் கூட
மௌனம் மட்டும் தனியே
மகிழ்ச்சியாய்
மழையில் நனையும்...!!
வார்த்தை எனப்படுவது யாதெனின்
வெறும் மொழி மட்டும் அன்றி,
மௌனம் சுவாசிக்கும்
மூச்சுக் காற்றும் ஆகும்..,!!