கண்கள் காட்சிக்கு அல்ல
மிகுந்த வாக்குவாதத்திற்கு பிறகு பாக்கியம் இறங்க வேண்டிய இடத்திலிருந்து சற்று தள்ளி பேருந்தை நிறுத்தினார் அந்த பேருந்தின் நடத்துனர்.
மகள் தேன்மொழியை கடுப்போடு இழுத்துக் கொண்டு நடத்துனரை மனதில் திட்டியபடி பேருந்தை விட்டு இறங்கி இருபத்திரண்டு வயது பெண்ணை இரண்டு வயது குழந்தையைப் போல கையை இறுக பிடித்துக் கொண்டு சாலையின் மறுபுறம் ஓடினாள், பாக்கியம்.
அந்த நெடுஞ்சாலையில் தற்போது தான் விரிவாக்கத்தின் பெயரில் சாலை ஓரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் நடந்து செல்லும் தொலைவில் சாலையின் மேற்கே இருந்த அந்த மகளிர் மறுவாழ்வு மையம் தெளிவாக தெரிந்தது.பாலையில் கானலை கண்டாலே களிப்புக் கொள்ளும் மனித இனம் ஒரு அழகிய நீர் நிடுலையை கண்டால் எப்படி ஆனந்த கூத்தாடுமோ அப்படிப்பட்ட மன நிலையில் தான் பாக்கியம் கண்ணில் கானல் பொங்க இறுக பிடித்த மகளின் கையினை விடாது விரைந்து கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு எட்டிலும் முந்தைய ரணங்கள் கண்ணெதிரே உருண்டோடியது. ஒரே பிள்ளை என்று செல்லமாக வளர்ந்தவள் தேன்மொழி. பள்ளி பருவத்திலேயே மனதுள் பட்டாம்பூச்சி பறக்க காதல் வசப்பட்டவள், மாலை நேரங்களில் தன் வீட்டிற்கே காதலனை வரவைத்து காதல் பாடம் கற்றாள். காதல் கசிய வாசல் கடந்து வாழ்க்கையை தொடங்கினாள். ஆரம்பம் நன்றாக தான் இருந்தது நாட்கள் நகர நகர காதல் வாழ்க்கை கசக்க தொடங்கியது. இது ஒன்று கேட்போர்க்கும் படிப்போர்க்கும் புதிதல்ல என எண்ண தோன்றினாலும் அது தான் உண்மை.பிறகு என்ன ஆறுதல் என்று பெற்றோரை சரணடைய மகளை தேற்றி மறுமணம் செய்து வைத்தனர்.மணவாழ்க்கை இனித்தாலும் மணாளனின் சந்தேகம் சாபமாய் வர ஏனோ இருளில் மூழ்கினள்.
வாழ்வை எதிர்க் கொள்ள புறப்பட்டவளாய் பல வேலைக்கு சென்றாள், பெண்ணுக்கு பெண் தான் எதிரி ஒவ்வொரு இடத்திலும் சகப் பெண்களின் வார்த்தைகளால் வாழ்வை வெறுத்து மரணம் செய்து கொள்ள முற்பட்டவள் மன நிலை பாதிக்கப்பட்டது தான் மிச்சம். முற்றிலும் பாதிக்காவிடிலும் முந்தைய ரணங்களை அசை போட்டே ஆயுளை கடத்தினாள்.மகளின் நிலைக் கண்டு மனக் குமுறலுடன் இருந்தப் பொழுது தெரிந்த ஒருவரின் அறிவுரையின் பெயரில் இந்த மறுவாழ்வு மையத்திற்கு மகளுடன் மையம் கொள்ள வந்ததை எண்ணி நினைவிலிருந்து வெளியே வர அந்த மையத்தின் வாசலும் வந்தது.
சின்னம்மாள் தொழிற்கூடம் பெண்மைக்காகஎன அங்கிருந்த சுற்றுசுவர் ஏந்தி பலகையில் இருந்தை வாசித்த தேன்மொழி, இதாம்மா அத்தை சொன்ன இடம் என தெளிவாய் சொன்னவளை யாரும் பார்த்த மாத்திரத்தில் குறை சொல்ல மாட்டர்கள்.ஆனால் பேச தொடங்கினாள் தான் அவளது குறை தெரியும்.மனப்போரட்டத்தின் வடுவாய் தான் நொந்த கதையை மீண்டும் மீண்டும் சொல்வாள்.இவளது பேச்சை கேட்போரை முதலில் களங்க வைத்தாலும் கடுப்பில் தான் முடியும்.
கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்த காவலாளியிடம் அய்யா நாங்க என்று தொடங்கிய பாக்கியத்தை பார்த்து உங்க பொண்ண சேக்க வந்திருக்கிங்களா? என வினவினரிடம்,ஆமாம் சாமி என பணிவான தோரணையில் சொன்னாள் பாக்கியம்.
சரி இங்க வந்து உங்க பேரு,ஊரு பேரு எல்லாம சொல்லிட்டு போங்க என்றழைத்த அந்த அறுபது வயது ஒத்த காவலாளி நிச்சயம் முன்னால் ராணுவ வீரராக இருக்கக் கூடும் என எண்ணிக் கொண்டே பெயர் மற்ற விவரங்களை சொன்னாள் தேன்மொழி. எழுதி முடித்த பின்னர் நேர போயி வலதுபக்கம போங்க அங்கதான் அலுவலகம் இருக்கு, அங்க சர்மிளானு ஒருத்தங்க இருப்பாங்க அவங்கள பாருங்க என்று வழி சொன்னவர்க்கு நன்றிக் கூறி நடையைக் கட்டினர்.
வழி நெடுகிலும் வளரும் மரங்கள் தான் வளர்ந்து பல வயது கடந்து மரங்கள் எதுமில்லை என்பது இந்த இடம் தொடங்கி சில வருடங்களே இருக்கும் என்பதை காட்டியது. மரம் மற்றும் செடி,கொடிகளை பாராமரித்து கொண்டிருந்த பெண்கள் ஏதோ பற்றி தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். என்னவென்று ஒட்டுக்கேட்டு விளங்காது பாக்கியம் மகளை கேட்கச் சொன்னாள். அவர்கள் பேசியது கேட்டு புரிந்துக் கொண்ட தேன்மொழி ம்ம்மா.. அவங்க ஒண்ணும் உன்ன மாதிரி பொரணி பேசலம்மா, இத நடத்துறவங்களுக்கு சிறந்த சமூகச் சேவைக்காக முனைவர் பட்டம் இந்த மாசக் கடைசியில தாரங்களாம் அத பத்தி பேசிட்டு இருக்காங்க.ஓ அப்படியா! ஏன்டி ஒழுங்க இருந்திருந்த நீயும் இன்னைக்கு இப்படி பட்டம் வாங்கி இருப்பல, என சொன்னவுடன் கோவத்தின் வாசலுக்கு போவாள் என்று எண்ணி கொண்டிருந்த பாக்கித்திடம் மெதுவாய் நீ பொறுப்ப ஊர் பொரணி பேசாம, என்ன ஒழுங்க வளத்திருந்த நானும் வாங்கிருப்பேன்ல, என சொன்னாள் தேன்மொழி.
இப்ப இவ்வளவு பேசுறல அப்ப எங்க போச்சு இந்த அறிவு, என மகளை நோக்கி கேள்விக் கணையை வீசினாள், பாக்கியம்.
அப்ப எங்க அறிவு இருந்துச்சு பட்டபிறகு தான அறிவு வருது,என அமைதியாய் பதில் சொன்ன தேன்மொழியை ஆச்சர்யம் தாங்காமல் பார்த்தால் பாக்கியம்.இருக்காத பின்ன சின்னத எதாவது குறை சொன்னாலே வீட்டை இரண்டாக்கும் தேன்மொழி இவ்வளவு அமைதியாய் பேசும் பொழுது ஆச்சர்யத்தோடு ஆனந்தமும் தொற்றிக் கொண்டது.சரியான இடத்துக்கு தான் வந்திருக்குறோம் என மனதுள் எண்ணி கொண்டாள் பக்கியம். ஆனந்த நடையில் இருவரும் அலுவலகம் அடைந்தனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த சர்மிளா புன்னகையுடன் வரவேற்று அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு அருகிலிருந்து அறைக்கு எழுந்து எழுச்சி நடை போட்ட அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பார்த்த பாக்கியம் பாவம்டி என மகளிடம் கூற ஆமாம்மா என தேன்மொழி அவள் வருத்தத்தை பதிவு செய்தாள்.
அறையிலிருந்து வெளியே வந்த சர்மிளா தன் இருக்கையில் வசதியாய் அமர்ந்த பிறகு பேசத் தொடங்கினாள்.அம்மா இந்த கூடம் தமிழ்செல்விங்கறவங்க தலைமையில இங்க இருக்க 125 பெண்களோட கடின உழைப்பு மூலமா வெற்றிக்கரமா போயிட்டு இருக்கு. இங்க வந்து சேர விரும்புற பெண்களுக்கு சில கட்டுப்பாடு இருக்கு அதெல்லாம் நான் சொல்றேன், புடிச்சிருந்த இங்க உங்க பொண்ண நீங்க சேத்து விடலாம்.
விரக்த்தியின் உச்சியில் இருந்த பாக்கியம் எதுனாலும் பரவயில்லம்மா இவள சேத்துகோங்க எனக் குறிக்கிட்டாள். இதை கேட்ட சர்மிளா சற்று ஆவேசமாய் இப்படி எதுனாலும் பரவயில்லனு சொல்லி எதாவது ஒரு குழியில தள்ள தான் பாக்குறிங்கலே தவிர,எது நல்லது கெட்டதுனு யோசிக்காமலே மகளோட வாழ்க்கை இன்னும் எத்தன நாளைக்கு தான் சீரழிப்பீங்க எனக் கேட்டாள்.
அமைதியாய் இருந்தவர்களிடம் சரி இங்க நான் சொல்றதுல எதாவது உங்களுக்கு பிடிக்காம இருந்த சொல்லுங்க என்று சொல்லி விட்டு கட்டுப்பாடுகளை விளக்கத் தொடங்கினாள் சர்மிளா.முதல்ல இங்க வர பெண்கள் ஆடம்பரம இருக்குறத விடனும் ஏன்னா இங்க எல்லா தரப்பு பெண்களும் இருக்காங்க. அடுத்து இங்க நாங்க சொல்ற வேலை எல்லாம் தெரியலனாலும் கத்துக்கிட்டு செய்யனும்.யாரை தரக்குறைவ பேசவோ இல்ல பொரணி பேசவோக் கூடாது,என இதரக் கட்டுப்பாடுகளையும் சொல்லி முடித்த சர்மிளா உங்க விருப்பம் என்ன என்பதை போல பார்த்தாள்.
ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தவர்களிடம், சரி வாங்க இங்க இருக்க இடத்த சுத்தி காட்டுறேன் அதுக்கப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க எனக் கூறி தாயையும்,மகளையும் அழைத்தாள் சர்மிளா. மகளை மட்டும் அனுப்பிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பாக்கியம் அக்கூடத்தை நடத்தும் பெண்மணி வருவதை பார்த்து அவளிடம் பேச எண்ணி எழுந்தவள் அந்த பெண்ணை பார்த்தவுடன்நினைவலையில் ஐந்து வருடம் பின்னோக்கினாள் பாக்கியம்.தன் மகளுடன் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பக்கத்து வீட்டு தமிழ்செல்வி தான் இந்த தமிழ்செல்வி என நினைவுப் படுத்தி கொண்டாள். இவளை அடையாளம் கண்டு அருகில் வந்து நலம் விசாரித்த தமிழ்செல்வியைபார்த்தவுடன் கண்களில் குளம் உருவாக நினைவலையில் மூழ்கினாள் பாக்கியம்.
தடத்தடவென கதவை தட்டும் சப்தம் கேட்டு அலறியடித்து தொடர்பைத் துண்டித்து தூங்குவது போல நடிக்க தொடங்கினாள் தேன்மொழி.இங்க பாரு படிச்சிட்டே இருந்தவ புத்தகத்தக்கூட எடுத்து வைக்காம தூங்குறத என சொல்லிக் கொண்டே, எந்த நாய்டா அது இந்த நேரத்துல கதவ தட்றதுனு கேட்டுக் கொண்டே கதவை திறந்தாள் பாக்கியம்.
குடிப்போதையில் நின்றுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெருமாளை பார்த்தவுடன் அட விளங்காதவனே! ஓ வீடு அடுத்த வீடுடா என்று கூறிவிட்டு சட்டென்று கதவை சாத்தினாள் பாக்கியம்.இவனுக்கு தெனமும் இதே வேலையப் போச்சு,ஆமா அது என்ன கூட இன்னொருத்தன் இருக்கான் என சந்தேகத்தினை தனக்கு தானே எழுப்பிக்கொண்டாள் பாக்கியம்.
இதைக் கேட்ட, பெருமாள் பழகிப் போனதால் ஒன்றும் சொல்லாமல் அவன் வீட்டு கதவை தட்டினான்.படித்து கொண்டிருந்த தமிழ்செல்வி வந்து கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி.எப்போழுதும் குடித்துவிட்டு தனியே வரும் தந்தையுடன் இன்று முப்பது வயது ஒத்த ஒருவர் வந்திருப்பதை பார்த்து, வீட்டினுள் நுழைந்த பெருமாள் நிலை தடுமாறி விழந்த சப்தம் கேட்டு சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் தமிழ்செல்வியின் அம்மா சின்னம்மா.
என்னப்ப இந்தாள விட்டுட்டுப் போக வந்திய சரிப்ப நாங்க பாத்துக்குறோம்ப நீ போயிட்டு வா எனக் கூறியவளை,இடைமறித்து அடி கூறு கெட்டவளே இது என் தூரத்து சொந்தம்டி இவன் என் மாப்ள மாமான பாக்க வந்திருக்கான் என அவன் வாங்கி கொடுத்த சரக்குக்கு விசுவாசமாய் பேசினான், பெருமாள்.கதை ஒன்று தான் அதுல வர ஆளுக மட்டுந்தான் மாறுவாங்க போல என நினைத்து கொண்டு படிக்க போனாள் தமிழ்செல்வி.
மறுநாள் படித்ததை நினைவில் நிறுத்தி கொண்டிருந்த தமிழ்செல்வியிடம் வந்த தேன்மொழி உங்கப்பா பண்றது நல்ல இல்லடி தெனமும் நான் அவன்கிட்ட பேசிட்டுக்கிருக்கப்பவே வந்து எங்க வீட்டு கதவ தட்றாரு சொல்லிவச்சுக்கோ என ஆக்ரோசமாய் பேசி சென்றாள். அடிப்பாவி என தன்னை தானே நொந்து கொண்டாள் தமிழ்செல்வி.
பரீட்சை முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி உறங்க போனாள். தான் வாடிக்கையாய் வேலைக்குச் செல்லும் வீட்டில் வேலைய முடித்து விட்டு வந்த சின்னம்மா பக்கத்து வீட்டுக்குள் பின்பக்கமாய் ஒருவன் போவதை பார்த்து அதிர்ந்து சன்னல் திரையை விளக்கி உள்ளே பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சி அங்கு தேன்மொழியும் அந்த வாலிபனும் நெருக்கமாய் இருந்தனர்.
இதை கருத்தில் கொள்ளாது மகளின் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்தாள் சின்னம்மா. கடைசி நாள் பரீட்சையன்று பரீட்சைக்கு மகள் சென்றவுடன் வேலைக்கு கிளம்பிய சின்னம்மாளிடம் ஏதேதோ பேசிய பெருமாளின் நோக்கமும், மாப்ள என வந்திருப்பவனின் நோக்கமும் புரிந்த சின்னம்மா, தன் மகளுக்கு வந்த சோதனையை எண்ணி உடைந்து போனாள்.
பரீட்சை முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி அம்மா என்னச்சு ஏம்மா இப்படி படுத்திருக்க உடம்பு சரியில்லையா எனக் கேட்டவளை ஆமாம் என சொல்லி தனக்கு பதிலா வாடிக்கையாய் வேலைக்கு செல்லும் வீட்டிற்கு இன்று மட்டும் சென்று வர சொன்னாள். சரி என்று அவளும் கிளம்பி போனாள்.
வானம் இரவுக்கு பாலமிடும் மாலையில் சற்று தேறிய சின்னம்மா சமையல் வேலைகளை செய்து கொண்டிருக்கும் போதே எப்பொழுது போல வாசலில் அமர்ந்து இவளை பற்றி பேச்சில் அசைப் போட தொடங்கினாள்,பக்கத்து வீட்டு பாக்கியம்.தினமும் அவள் இப்படி பேசுவதறிந்த அவளுடன் வாதிடவிரும்பாமல் வேலை பார்த்து கொண்டிருந்தாள், சின்னம்மா.
தன்னை பற்றி பேசி கொண்டிருந்ததால் அமைதியாய் இருந்த சின்னம்மா தன் மகளைப் பற்றி அவள் தரக்குறைவாக பேச தொடங்கிய உடன் கோபத்தில் அவளுடன் சண்டைக்கு சென்றவள் நீ மொதல்ல ஓ மகள ஒழுங்க வளடி தெனமும் ஓ வீட்டுக்கு ஒருத்தன கூட்டிட்டு வந்திட்டு இருக்க என சொல்லி முடிக்க,அதுவரை தொலைத்தொடர்பில் இருந்த தேன்மொழி தொடர்பை துண்டித்து விட்டு இவர்கள் சண்டை வேடிக்கை பார்க்க வந்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி.இவங்களுக்கு எப்படி தெரிந்தது என எண்ணிக் கொண்டே போலியாய் அழத் தொடங்கி விட்டாள் தேன்மொழி.
மகளின் கண்ணில் நீர்த்துளியை கண்ட பாக்கியம் சின்னம்மாவை சாலையில் இழுத்துப் போட்டு வாசல் கூட்டும் துடைப்பத்தால் அடிக்க தொடங்கினாள்.தூரத்தில் அழுது கொண்டே வந்த தமிழ்செல்வி தாயின் நிலைக் கண்டு ஓடோடி வந்தாள்.அதற்குள் மயங்கிப் போனாள் சின்னம்மா, நிலை உணர்ந்த பாக்கியம் இதற்கு மேல் அடித்தால் அப்புறம் காக்கிச்சட்டைக்கு காசு அழுக வேண்டி இருக்கும் என மனதில் நினைத்துக் கொண்டே வாயில் வந்தவாரு பேசி விட்டு சென்றாள்.
தாயை நினைவுக்கு மீட்டு வந்து நடந்தவற்றை கேட்டறிந்தவள் தனக்கு நேர்ந்த இழிவை பெற்றவளிடம் கூறி மேலும் காயப்படுத்த விரும்பாமல் தாயை படுக்கையில் படுக்க வைத்தவிட்டு ஏன் பெண்ணாய் பிறந்தோம் என எண்ணிக் கொண்டே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அவளும் உறங்கி போனாள்.
உள்ளூரம் பயத்தினை தரும் நள்ளிரவில் மது மயக்கத்தில் இருந்த அந்த மாப்ள மதிக் கெட்டவனாய் தவறு செய்ய முற்பட்டவனை புலியை முறத்தால் அடித்த தமிழச்சி வழி வந்த சின்னம்மா முறத்தால் அடித்துவிரட்டினாள். கண்ணீரில் ஆறுதல் தேட விரும்பாத சின்னம்மா மகளை எழுப்பிக் கொண்டு தனித்து வாழ புறப்பட்டாள்.
நாட்கள் ஓடின ஒவ்வொரு நாளும் ரணமாய் நகர்த்தினாள் சின்னம்மா.தேர்வு முடிவு வந்த நாள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதாக சொல்லி அழுதாள் தேன்மொழி, ஏண்டி அந்த தமிழ்செல்வி என்ன மார்க்டினு பாக்கியம் கேட்க. ஓவென போலியாக அழுதுக் கொண்டே அவதாம்மா பள்ளியில் முதலிடம் என்றாள். மகளை பாக்கியம் ஆறுதல் படுத்த ஆறுதலோடு அவள் வேலையை அலைபேசியில் தொடர்ந்தாள். மகளை பற்றி வருத்தமடைந்த பாக்கியம், கண்டமேனிக்க சுத்துனவ எல்லாம் மொத மார்க் எடுத்திருக்க ஆனா ரா பகலா படிச்ச ஏ மக மார்க் கம்மிய எடுத்திருக்க என்னமோ கடவுளுக்கு தான் வெளிச்சம் என நினைவலையில் எண்ணிக் கொண்டிருந்தவள் சூரிய வெளிச்சம் பட்டு நினைவுக்கு வந்தாள்.
தமிழ்செல்வி வந்த சேதி என்னவென்று கேக்க ஓவென்று அழுதுக் கொண்டே மகளின் சோகக் கதையை விளக்கினாள் பாக்கியம். கேட்டறிந்தவள் சரி ஒண்ணும் கவலப் பட வேணாம் நான் பாத்துகுறேன் நீங்க பாத்து போயிட்டு வாங்க என்று சொல்லி விட்டு தனது வேலைகளை அஞ்சலில் தொடர சென்றாள்.
இரண்டு வாரம் உருண்டோடியது, மகளின் நிலை காண வந்த பாக்கியம், மகள் மற்றவர்களுடன் சிரிப்பு தெரிக்க பேசி கொண்டிருந்ததை பார்த்தவள் மிகப்பெரிய பாக்கியம் செய்ததாய் நெகிழ்ந்து கொண்டாள். பிறகு மகளுடன் மகிழ்ச்சியாய் உரையாடி முடித்து கிளம்பிய பாக்கியத்தை தேன்மொழி தன் தோழிக்கு நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்தாள். அழைப்பை மறுக்காமல் வரேன் என்று சொல்லி விட்டு சென்றாள் பாக்கியம்.
பட்டமளிக்கும் விழா நடைபெறும் நாள் அந்த மகளிர் பல்கலைக்கழகம் முழுவதும் பெண்கள் கூட்டம், அங்காங்கே தான் ஆண்களை காண முடிந்தது. கூட்டத்தை கண்ட பாக்கியம் மிரண்டு போயி தன் மகளுடன் அரங்கத்தினுள் சென்று அமர்ந்தாள். பாக்கியத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணை எங்கோ பார்த்த ஞாபகம் வர அவளை அழைத்து பேசிய பிறகு தான் அவள் பாக்கியத்தின் ஊரில் இருக்கும் காவல்காரரின் மனைவி என்பது தெரிந்தது. நீங்க எப்படி இங்க எனக் கேட்ட பாக்கியத்தை பார்த்து பெருமிதம் பொங்க எங்க மாதர் சங்கத்தோட சிபாரிசுல தான் தமிழ்செல்விக்கு இந்த பட்டம் தராங்க அது மட்டுமில்லாமா ஏ வீட்டுல வீட்டு வேலை பாத்துட்டு இருந்தவ பட்டம் வாங்குன எனக்கு பெரும தான, என மார்த் தட்டி கொண்டிருந்தாள்.
விழா தொடங்கியது பெண்மைப் போற்றும் பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி முடிய, நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பட்டமளிப்பு தொடங்கி இனிதே முடிந்தது.சிறப்புரை ஆற்ற வந்த தமிழ்செல்வி தாயையும், தமிழையும் வணங்கி தன் பேச்சை தொடங்கியவள் இளங்கலை பட்டம் கூட பெறத ஒருவளை முனைவர்பட்டம் பெற வைத்த தன் தாய்க்கு தான் பெற்ற முனைவர் பட்டத்தை சமிர்பித்துப் பேசினாள்.
பேச்சின் இடையே அரங்கில் இருக்கும் பெண்களை பார்த்து பெண்ணுக்கு முதல் எதிரி ஆணா? பெண்ணா? என கேள்வி எழுப்பினாள், அதற்கு அரங்கம் அதிருமளவுக்கு ஆண் என்று பதில் வந்தது. பதிலை ஆதரித்து பேசுவாள் என எண்ணி அனைவருக்கும் அதிர்ச்சி. இல்லை ஒரு பெண்ணுக்கு முதல் எதிரி பெண் தான் என பேசியவளின் பேச்சை கேட்டு அரங்கமே குழப்பத்தில் மூழ்கியது.
அவளே தொடர்ந்தாள், ஒரு வீட்டுல பதினேழு வயசு பொண்ணு வேல பாக்குற அந்த வீட்டு உரிமையாளரோட பையன் அவகிட்ட தப்ப நடந்துக்க பாத்தான் அவ எப்படியோ தப்பிச்சிட்டா, இது வரைக்கும் கதைய கேட்ட ஆண் தானு சொல்விங்க ஆனா, அந்த விடயத்த அந்த பையனோட அம்மாகிட்ட போய் அந்த முறையிட்டப்ப பெண்மையை போற்றும் அந்த பெண் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா, செல்லமா வளந்த பையன் எதாவது ஆசை பட்டா அதுக்கு நீ வளைஞ்சு கொடுத்திட்டு ஏ கிட்ட சொன்னினா நான் சம்பளத்த கூட்டிக் கொடுப்பேன்ல் என மகனுக்கு கூட்டி கொடுக்க நினைச்சா, இது வெறும் கத இல்ல என்னோட வாழ்க்கையில நடந்த எங்கம்மாட்ட கூட சொல்லம மறைச்ச ஒரு விடயம் தான் இது. இப்ப சொல்லுங்க முதல் எதிரி யாருனு என்று மீண்டும் அரங்கிலிருந்த பெண்களிடம் கேட்க அமைதி நிலவிய பொழுது, தனது செய்கையை எண்ணி வெட்கி தலை கவிழ்ந்து கண்ணீர் வடித்தாள் மார்த் தட்டிய அந்த மாதர் சங்க பெண்மணி.
பெண்களை நாட்டின் கண்கள், நம் கண்கள்னு சொல்றாங்க. கண்ண நாம எதுக்காக பயன்படுத்துறோம் பாக்குறதுக்காக. யாராவது கண்ண வெறும் காட்சி பொருள பயன்படுத்துறிங்களா, கிடையாது அப்படிப்பட்ட கண்களோட பெண்கள ஒப்பிட்டு சொல்லிட்டு, பெண்கள வெறும் காட்சிப் பொருளாவும் போதப் பொருளாவும் தான் பாக்குறாங்க. இந்த மாதிரி செயல்களுக்கு அதிகளவுல பெண்கள் உறுதுணைய இருக்காங்ககிறது தான் வேதனையான விடயம்.
இன்னும் கிராமங்கள்ல பதினாறு வயசு பெண்களுக்கு ஐந்து வயது, பத்து வயது மூத்த ஆண்களோட திருமணம் நடந்திட்டு தான் இருக்கு. எனக்கு தெரிஞ்ச பொண்ணு நல்ல ஓட்டபந்தய வீராங்கணை அவளுக்கு பதினாறு வயசிலேயே திருமணம் பண்ணி வச்சிட்டாங்க. ஏன் இப்படி சின்ன வயசுலேயே திருமண்ம் பண்றீங்கனு கேட்ட, அதுக்க அவங்க சொன்ன காரணம் பக்கத்துல வீட்டுல இருக்குற பொண்ணு ஒரு வெளி ஊர்கார பையன் காதலிச்சு கூட்டிட்டு ஓடிட்டா. அந்த பொண்ணு ஓடுன அன்னைக்கு இருந்து இந்த பொண்ண பாத்து இவ ஏற்கனவே நல்ல ஓடுவா எவனை கூட்டிட்டு ஓட போறாளோனு சாட,மாடைய அக்கம் பக்கத்து வீட்டு பொம்பளைங்க பேசி இருக்காங்க், இத கேட்டு வருத்தமடைந்த அந்த பெண்ணோட தந்தை பன்னிரண்டாவது படிச்சிட்டு இருந்த பொண்ண பள்ளிக்கூடத்துல இருந்து நிறுத்தி வயசு வித்தியாசம் அதிகமா இருந்தாலும் கல்யாணத்த முடிச்சிட்டாரு. இங்க இருக்க பெண்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் வச்சுக்குறேன் யாரும் சக பெண்ண எந்தக் காரணம் கொண்டு தவறா பேசாதீங்க, எந்த பொண்ணையும் காட்சி பொருளா மாத்தாதீங்க. நம்மலோட வெற்றிக்கு நாம தான் போரடணும்.
இங்க எந்த ஒரு வெற்றியுமே ஒரு பெண்ணோட உழைப்பு துளிக் கூட இல்லாம உருவானது இல்ல. பிறந்தோம் இருந்தோம்னு இருக்காதீங்க, தாய் சிறப்பானவள இருந்த நிச்சயம் அவள் தலைமுறையும் அத சார்ந்து இருக்க சமூதாயமும் சிறப்பான வெற்றியக் காணும். பெண்களோட முன்னேற்றத்துக்கு முற்றுப் புள்ளி வைக்காதீங்க.ஏன்ன பெண்கள் முடிவல்ல ஆரம்பம், என பேசி முடித்தவளின் பேச்சைக் கேட்டு அரங்கமே உறைந்த பனியாய் இருக்க அதுவரை இவள் பேச்சை குறிப்பெடுத்து கொண்டிருந்த ஒரு ஆண் பத்திரிக்கை நிருபர் கரவொலி எழுப்ப உறைந்திருந்த கூட்டம் வெடித்து சிதறிஆர்பரிக்கும் அருவியை போல கரவொலி எழுப்ப அரங்கம் அதிர தொடங்கியது.
சதீஸ்குமார் பா ஜோதி