பிறிதொருபொழுதில் -நூல் விமர்சனம் கவிஞர் நகதுறைவன்

கவிஞர் ந.க.துறைவன் பார்வையில் இராமஜெயத்தின் கவிதை நூல் “பிறிதொரு பொழுதில்”- விமர்சனம்
கவிதை படிக்கிற ஆர்வம் எனக்கு இருப்பதால் எப்படியேனும் புதிய, படைய தொகுப்பு நூல்கள் அவ்வப்பொழுது படிக்கக் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்த்தே புதிதாய்வந்துள்ள திரு.இராமஜெயத்தின் “பிறிதொரு பொழுதில்” – என்ற நூலாகும். கவிதைகளைப் படித்துப் பார்த்ததில் இக்கவிதைகளை உரைநடை கவிதையா? வசன கவிதையா? புதுக்கவிதையா? என்று எந்த வகைப்பிரிவில் வைத்து இனம் காண்பது என்றொரு பெரும் தயக்கம் என்னுள் ஏற்பட்டது.
பொதுவாக, படைப்பாளி தன்னைச் சுற்றியுள்ள அகம், புறம் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து அதன் தாக்கத்தினால் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற முனைப்போடு எழுத முற்பட்டுள்ளார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது.
அப்படி, எனது வாசிப்புக்குட்பட்ட சில கவிதைகளைக் குறித்து கருத்துரைக்கலாம் என்று கருதுகிறேன்.
குடும்பத்தில் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளின் மனவேற்றுமைகளைச் சொல்ல வரும்போது,
“நானும் அவனும்
ஒருதாய்
வயிற்றுப்பிள்ளைகள்
ஒருதாய்
பிள்ளைகள் என்பதைத் தவிர
வேறெதிலும் இல்லை
ஒற்றுமை”-என்றும்

“அதெல்லாம் ஒரு காலம்
இப்ப
யாருசெய்யுறா சொல்” (பக்.10-11)

என்று ஒற்றுமையே இல்லை என்று கூறிக் குறைப்பட்டுக்கொள்கிறார்.
மனிதனுடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியடைவதும், தோல்வியடைவதும் பெண்ணின் பெருந்துணையோடு பெரும்பாலும் அமைகின்றன. தன் முயற்சிகளை, அவள் ஒன்றுமில்லாமல் செய்கிறாள் என்று வருத்தப்படுவது மட்டுமல்ல,
“கொஞசம் கொஞ்சமாய்
ஒவ்வொன்றிலும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
ஒன்றுமே இல்லாமல்
எளிமையாய் வெற்றிப்
பெறுகிறாள் அவள்” -(ப.42)
என்று தன் தோல்வியினை ஒத்துக்கொண்டு, அப்பெண் எளிமையாய் வெற்றிப் பெறுவதை ஏற்றுக்கொள்பவராகத் தெரிகிறார்.
கரப்பான் பூச்சிக்குப் பயப்படாதவர்கள் எவருமில்லை. ஆண்களைவிட பெண்கள் அடுப்படியில் அதிகம் காணப்படும்போதுப் பயப்படுவார்கள். அக்கரப்பான்களின் மீசை மிரட்டும்படியாகக் காட்டும்போது,
“சொல்வாய் நீ
மருந்து வைக்கலாம்
மருந்து வைத்த
சுவடே தெரியாமல்
காற்றில் கலந்த
மணத்தில் கொல்ல்லாமென
இருந்தும் தொடரும்
அச்சம்” – ப.34)
என்று அச்சம் என்பது எப்படியும் தொடரவே செய்திடும் என்கிறார்.
பொங்கல் – பற்றி தன் அனுபவக் கருத்தை வெளிப்படுத்த வரும்போது, பழமையோ, புதுமையோ, பொதுமை நாட்டில் மலர வேண்டும் என்று எதிர்பார்க்கும் கவிஞர்,
“மாடுகள் முட்டிக் கொள்வது
இருக்கட்டும்
மனிதர்கள்
நாம்
மோதிக்கொள்ளாமல்
இருப்போம்” ப.23.
எனக்கூறி ஒற்றுமையினைக் காண விரும்புகிறார். அதுமட்டுமல்ல, காணும் பொங்கல் அன்று,
“காணும் பெரியோரை
காலை வாரி விடாமல்
கனிவாய் வணங்குவோம்” ப.23
என்று பெரியவர்களை மரியாதையோடு வணங்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.
இவர் வெளியில், பாதைகளில் போகும்போதும், வரும்போதும், வீட்டைச்சுற்றியும் திரியும்
நாய்களை கவனித்து, அதன் வகைகள், செயல்பாடுகள் குறித்தும் விளக்கும்போது,
“இந்த நாய்கள்
எப்பொழுது குழையும்
எப்பொழுது குரைக்கும்
எப்பொழுது புணரும்
எதுவும் புரிவதில்லை
இந்த நாய்களே
இப்படித்தான்” ப.15
என்கிறார். இந்த நாய்கள் மட்டுமல்ல. வேறு எந்தவொரு நாயும் இப்படித்தான் இருக்கும். அது நாய்களின் குணம். நாய்வாலை நிமிர்த்த முடியுமா? இந்நாய்களின் வாயிலாக இச் சமூகத்தைக் கோபமாகச் சாட நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
அன்பரின் கவிதைகளில் கவித்துவம் குறைந்துக் காணப்பட்டாலும், வழக்குச் சொற்களாலும், பேச்சு மொழி, உரைநடையாலும், சாதாரணமான மக்களிடம் புழுங்கும் சொற்களாலும் பல கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நிறைய கவிஞர்கள் தான் நினைக்கும் கவிதையை எழுத எண்ணித் தோற்றிருக்கிறார்கள். எப்பொழுதேனும், ஒருநாள் தான் நினைத்தக் கவிதை எழுத மாட்டோமா? என்று ஏங்கித் தவித்திருக்கிறார்கள். இவரும்,
“இது நான் எழுத
நினைத்தக் கவிதை
அவன் எழுதியிருக்கிறான்
ப்ச்...பரவாயில்லை
காதலித்தவள் போய்
கட்டிக்கொள்வதில்லையா
வேறொருத்தியை
நாளை எழுதுவேன்
மனைவியைப் போல”-ப.73
என்று நாளை தான் நினைத்த கவிதை எழுதுவேன் என்று உறுதிகூறுகிறார். அன்பரே,
“நீங்கள்
எழுத நினைக்கும்
கவிதையை
வேறொருத்தியைக் கட்டிக் கொண்டு
நாளை கட்டாயம்
எழுதுங்கள்...
உங்கள் வாக்குமூலத்தையே வழிமொழிந்து நிறைவு செய்கிறேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்,
கவிஞர். ந.க.துறைவன்,
பிளாட் எண்.20. பகுதி-3
வசந்தம் நகர் விரிவு,
சத்துவாச்சாரி. வேலூர்.632 009.
பேச.9442234822, 8903905822

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Jan-14, 8:53 pm)
சேர்த்தது : Ramajayam
பார்வை : 45

மேலே